பொது செய்தி

தமிழ்நாடு

மோடியின் 'மக்கள் ஊரடங்கு': மனமுவந்து வரவேற்கும் மக்கள்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சிவகங்கை: ''கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி விடுத்துள்ள மக்கள் ஊரடங்கு அழைப்பை முழுமையாக நிறைவேற்றுவோம்'' என சிவகங்கை மக்கள் நெகிழ்ச்சி கருத்தை தெரிவித்துள்ளனர்.

உலகை நிலைகுலையச் செய்துள்ள கொரோனாவின் ருத்தர தாண்டவத்தை கட்டுப்படுத்த இதுவரை மருந்து இல்லை. எனினும் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கான சமூகப்பொறுப்பை உணர்ந்து அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைத்தால் இதை வெல்லலாம். மக்கள் தங்களை தனிமைப்படுத்துவது ஒன்றே கொரோனாவிற்கான தற்காப்பு ஆயுதம். இதைத்தான் நேற்று முன்தினம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோளாக வைத்தார்.

'போரை விட கொடூரமான இக்கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். சரியான தீர்வு இல்லாத நிலையில் தங்களை தனிமைப்படுத்துவது தான் ஒரே வழி. நம்மையும், பிறரையும் பாதுகாக்க இதை மேற்கொள்ள வேண்டும்' என கேட்டுக்கொண்ட மோடி, 130 கோடி இந்தியர்களுக்கும் மார்ச் 22ல் மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அன்றைய தினம் காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். வருகிற நாட்களில் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி தற்காக்க ஒரு சோதனை ஓட்டமாக இதை கடைபிடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் இந்த விழிப்புணர்வு யுக்திக்கு நாடு தழுவிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இது குறித்து மக்கள் தெரிவித்த கருத்துகள்:

குழந்தைகளுடன் விளையாட்டுஜோதி, தலைமை ஆசிரியை, தேவகோட்டை: நாம் வீட்டில் இருப்பதன் மூலம் நமக்கும் பாதுகாப்பு அடுத்தவருக்கு பாதுகாப்பு. பரிட்சார்த்த முறையில் தான் ஒரு நாள் உத்தரவு இருக்கும் என கருதுகிறேன். வீட்டில் பிள்ளைகளுக்கு பழைய விளையாட்டுக்களை சொல்லி கொடுப்பேன்.

பிள்ளைகளுடன் முழுவதும் பொழுதை கழிப்பேன். காலையில் நாளிதழ்களை வாசித்துவிட்டு வீட்டு பணிகளை அவசரமின்றி செய்து விட்டு புத்தகங்கள் படிப்பேன். இக்கட்டான நிலையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பிரதமரின் வேண்டுகோளின் படி குடும்பத்தோடு நன்றி தெரிவிப்போம்.

இது ஒரு டிரைலர் தான்குருசாமி, வியாபாரி, தேவகோட்டை: நம்முடைய நன்மைக்காக நல்வாழ்வுக்காகத் தான் தான் இந்த வேண்டுகோள். என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு இது புதுசு. தொடர்ந்து கொரோனாவை விரட்டும் வரை நம்மை தயாராக்கி கொள்வதற்கு இது டிரைலராகத்தான் பார்க்கிறேன்.

பிறருக்கு முன்மாதிரியாகத்தான் அனைவரும் செயல்படவேண்டும். நான் கடையை அடைத்து விட்டாலும், அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டு இருக்கும் சூழலில் எங்கும் செல்ல முடியாது. நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதை சந்தோஷத்துடன் செலவழிப்பேன். கடை தொடர்பான சில பணிகளை வீட்டில் இருந்தபடி பார்க்கலாம். கோவில் திருவிழா தொடர்பான பணிகளை பார்ப்பேன்.

யோகா, தியானத்தால் வலுப்படும்
கன்னிகா,44, குடும்பத்தலைவி, மானாமதுரை: பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று பயனுள்ள நாளாக மாற்றுவோம்.காலையிலிருந்து வெளியே செல்லாமல், வீட்டில் உள்ள அன்றாட வேலைகளை செய்து அவ்வப்போது யோகா, தியானம் செய்வதன் மூலம் நமக்கு உடலில் புத்துணர்ச்சியும், மனதுக்கு தெம்பாகவும் அமையும். இறைவனுக்கு வீட்டில் இருந்து சேவை செய்யும் விதமாக பூஜை அறைகள்,சுவாமி சிலைகள், படங்கள் ஆகிவற்றையும், வீட்டையும் சுத்தம் செய்து சாமி கும்பிடுவதால் குடும்பத்திற்கு ஒரு நிம்மதி கிடைக்கும்

குடும்பத்தில் கலந்துரையாடல்பிரபு 48, தனியார் கம்பெனி ஊழியர்,மானாமதுரை: அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள் இருந்து பயனுள்ள வகையில் குழந்தைகளோடு மகிழ்வாக விளையாடவும், வீட்டிற்கு தேவையான திட்டங்கள் பற்றி குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கலந்துரை யாடலாம். வரும் காலங்களில் இது போன்ற கொடிய வைரஸ் நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உடம்பை எவ்வாறு பாதுகாக்கலாம் என்றும்,இன்னும் நமது குடும்பத்திற்கு தேவையான திட்டங்கள் பற்றி விவாதிக்கலாம்.

வீட்டை ஒழுங்குபடுத்தலாம்தொ.குமார்,ஆ.தெக்கூர்: கஷ்டம் தான் என்றாலும்கொடிய தொற்று நோயை விரட்ட இருக்கும் முதன்மையான வழி இது தான். ஒருவருக் கொருவர் விலகி இருப்பது நல்லது. பரீட்சார்த்தமாக நடைமுறைப் படுத்த இந்த விடுமுறை நாளை தேர்வு செய்தது மக்களுக்கு கஷ்டத்தைத் தராது.

முழுமையான ஊரடங்கு என்பது நமக்கு புதிது தான். மக்களின் முழுமையாக ஆதரவு தர வேண்டும். அன்றைய தினம் வீட்டிலுள்ள பொருட்களை ஒழுங்கு செய்து வைக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன். இந்த ஊரடங்கு.இந்த நோய் ஒழியும் வரை தொடரலாம்.மக்கள் தங்களை அதற்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

குழந்தைகளுக்கு அறிவுரைஎஸ்.சுஜாதா, மகளிர் குழு, சிங்கம்புணரி: பொதுவாக ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் குழந்தைகளுடன் பொருட்கள் வாங்க கடைக்கு செல்வேன்,திரையரங்கு, பூங்கா சென்று பொழுதை கழிப்போம். அத்தியாவசிய பொருட்களை முதல் நாளே வாங்கி வைப்பேன். வீட்டில் இருப்பதால் வெயிலின் தாக்கம் குறையும், மேலும் வீட்டில் குழந்தைகளுக்கு கொரோனோ விழிப்புணர்வு குறித்து விளக்குவேன்.

மக்களுக்கான அரசுஎம்.பாலா, சமூக ஆர்வலர்,சிங்கம்புணரி: பிரதமர் மோடி அறிவித்துள்ள மக்களுக்கான இந்த ஊரடங்கு உத்தரவு வரவேற்க கூடியது. மக்கள் அனைவரும் இந்த உத்தரவை மதித்து பின்பற்றினால் மட்டுமே கொடி நோயை கட்டப்படுத்த முடியும். நம் பாரம்பரியத்தை மீண்டும்

கடைபிடித்தல் நல்லது. சிங்கம்புணரி வர்த்தகர்கள் கடையடைப்பு நடத்தி பிரதமரை ஆதரிக்க உள்ளோம். நமக்காக தான் அரசும், மருத்துவர்களும், தங்களை பற்றி கூட கவலை படாமல் மக்களுக்காக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு அனைத்து மக்களும் கரகோஷம் செய்து இந்த வைரஸை கட்டுப்படுத்த பணியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் நன்றியை சமர்பிப்போம்

பழங்கால விளையாட்டுசங்கீதா, குடும்பத்தலைவி, திருப்புவனம்: கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் குழந்தைகளுடன் மனம் விட்டு பேச முடிவதில்லை. அவர்களுடைய தேவை அறிந்து எதுவும் கொடுக்க முடிவதில்லை. ஞாயிறு முழுவதும் அவர்களுக்கு உரிய நாளாக மாற்ற போகிறோம், 'டிவி', அலைபேசி அனைத்திற்கும் விடுமுறை அளித்து விட முடிவு செய்துள்ளோம். வீட்டிலேயே பழங்கால விளையாட்டுகளான பரமபதம், தாயம், பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுகளை நம்முடைய பாரம்பரிய பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கற்று கொடுக்க உள்ளோம்.

உயிருக்காக பொருத்துக் கொள்ளனும்லீலாவதி, திருப்புத்துார்: கொரோனாவிற்காக ஊரடங்கு என்றாலும், ஒரு நாள் முழுவதும் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலேயே இருப்பதுஆச்சர்யமானதே. இது குடும்பத்திற்கு தற்போதைய காலத்தில் மிகவும் அவசியமாக உள்ளது.

அவசரமான இந்த உலகில்பேசவே நேரமில்லாத நிலையில் ஒரு நாள் முழுவதும் மனம் விட்டு பேச முடியும். அதுவே எங்களுக்கு மிகுந்த சந்தோஷம் தான். கொரோனா நோய் தொற்றுகுறித்து மக்கள் அனைவரும் அறிந்து போராடித் தான் ஒழிக்க முடியும். உயிர் முக்கியம் என்பதால் கஷ்டங்களை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.இருந்தாலும் அனைத்து வசதிகளும் இல்லாதவர்கள் பாடு திண்டாட்டம் தான். ஒரு நாள் என்பதால் சமாளித்து விடலாம்.

வீட்டில் விழிப்புணர்வுஎம்.பாண்டியராஜன், பொதிகை நகர், சிவகங்கை: அன்றைய தினம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க தேவையான சுகாதார நடவடிக்கை குறித்து வீட்டில் இருக்கும்

குழந்தைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளோம். இது தவிர 'பாஸ்ட் புட்' உணவால் நோய் தாக்கம் அதிகரிப்பதை தவிர்க்க, பழங்கால முறையில் எடுத்துக்கொண்ட பாரம்பரிய உணவு முறைகளின் நன்மை குறித்து விளக்குவோம். இதன் மூலம் அன்றைய தினம் மக்களின் ஊரடங்கு வெற்றி பெற ஒத்துழைப்பு தருவேன், என்றார்.

புத்தக வாசிப்பை நேசிப்போம்இ.காயத்ரி, குடும்ப தலைவி, காரைக்குடி: மக்கள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் விதத்தில், அன்றைய தினம் வீட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைக்கான விழிப்புணர்வை அறிந்து கொள்ள உள்ளோம். அன்றைய பொழுதினை புத்தகம் வாசிப்பதன் மூலம் செலவழிக்க உள்ளேன். வீட்டில் உள்ளவர்களுக்கு கை கழுவுவதன் அவசியம் குறித்து விளக்கப்படும்,என்றார்.

புத்தகங்களை வாசிக்கலாம்அழ.முத்துவடுகு, காரைக்குடி: கொரோனா வைரஸால் உலகமே அச்சத்தில் உறைந்துள்ளது. அரசு இதனை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. நமது நலனையும், தேசத்தின் நலனையும் கருதி, இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நானும், எனது குடும்ப உறுப்பினர்களும், வீட்டில் இருப்பதற்கு ஆயத்தமாகி விட்டோம். தேவையான பொருட்களை சேகரித்து வருகிறோம். பொழுது போக்க நல்ல புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X