அரசு திட்டப் பணிகளில் முறைகேடு அதிகாரிகள் விசாரணையில் அம்பலம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு திட்டப் பணிகளில் முறைகேடு அதிகாரிகள் விசாரணையில் அம்பலம்

Added : மார் 21, 2020
Share

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் ஒன்றிய பகுதிகளில் வீடு கட்டுதல், தனிநபர் கழிவறை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், தனிநபர் கழிவறை கட்டும் திட்டம், பண்ணை குட்டை அமைத்தல், நிலத்தில் வரப்பு மடித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த திட்டங்களின் கீழ் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் (ஹவுசிங்) குமார் தலைமையில் அதிகாரிகள் திருநாவலுார் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று விசாரணை நடத்தினர்.

அதில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் திருநாவலுாரைச் சேர்ந்த காமராஜ் என்பவர், வீடு கட்டியதாக அவருக்கே தெரியாமல் அவரது பெயரில் கணக்கு தொடங்கி, 2018 ஜனவரி முதல் 2019 ஜூன் வரை நான்கு தவணைகளாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது. அதே போன்று, திருநாவலுாரைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், அவரது பெயரிலும் வீடு கட்டியதாக பணம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், முகமதுயூசுப் என்பவர் கழிவறை கட்டியதாகவும், அதற்கு பெயிண்ட் அடித்ததாகவும் 12,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. சில ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணம் எடுக்கப்பட்டுள்ளது.இது போன்று திருநாவலுார் ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகளும், தனிநபர் கழிவறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக பல லட்சம் ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது.முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்களிடம் தொகையை திருப்பிச் செலுத்துமாறு உத்தரவிட்டு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X