'என்னது! 'நிர்பயா'வா இருக்கணுமா... கிறுக்கு பிடிச்சிருக்கா உங்களுக்கு?' எனக் கேட்கலாம் நீங்கள்!
'கூகுள்' இணையதளத்தில், இன்றைக்கு என்ன முக்கிய செய்திகள் எனத் தேடுகையில், முதலாக வந்து நின்றது, நிர்பயா குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேறிய செய்தி!மனதில், இனம் புரியாத கவலை...'இந்தக் குற்றம் நடந்த, 2012 முதல், தண்டனை நிறைவேறிய இந்த, 20.03.2020 வரையிலான இடைப்பட்ட காலத்தில், எத்தனை நிர்பயா குற்றங்கள் நடந்திருச்சே... அதுக்கெல்லாம் எப்ப தண்டனை கிடைக்குமோ... இதுக்கு என்ன தான் தீர்வு...' என நினைத்தபடியே, 'ஸ்க்ரோல் டவுன்' செய்தபோது, இடையே, படத்துடன் ஒரு செய்தி... துாக்கிவாரிப் போட்டது!'டயட்' குறித்த தகவல்களை, ஒரு நடிகை விளக்குகிறார். எப்படி... வெறும், பாடி - ஜட்டியுடன்!
நண்பரிடம் இதைச் சொல்லி அங்கலாய்த்தபோது, 'இதெல்லாம் சகஜம்ப்பா... இப்படி இல்லேன்னா, 'ஆன்லைன்' பக்கமே யாரும் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள்... ஏன், பத்திரிகைகளில் இப்படி ெவளியிடுவதில்லையா...' என, வரிந்து கட்டினார்.ஏன் பிரதர்... உனக்கு இது, 'கிளுகிளுப்பு' கொடுக்கலாம். உன் மகனும், இதே கிளுகிளுப்பை அனுபவிக்கலாம். ஆனால், இதைப் பார்த்ததும், உனக்கு ஏற்படும் கிளர்ச்சி
யால், உன், 'அட்ரினலின்' எக்கச்சக்கமாய் சுரந்து விடுமே; பிறப்பின் குறிக்கோளையும், ரகசியத்தையும் அடிக்கடி நினைவுபடுத்துமே! அப்படி நினைவுபடுத்தி விட்டால், நிர்பயா விஷயங்களை எப்படி தடுப்பது?நிர்பயா விஷயத்தையே விடு. உடலில் தெம்பு இருக்கும் காலத்தில், அளவுக்கு மீறி, 'செய்து' விட்டு, வயதான காலத்தில், 'முடியவில்லை' என புலம்புவதில், என்ன அர்த்தம் இருக்கிறது?
ஒரு நடிகர், தன் இள வயதில், '3,000 ஹிட்' கொடுத்ததற்காக, 'பார்ட்டி'யே வைத்துக் கொண்டாடினாராம். இப்போது, 60 வயது தான் ஆகிறது. 'ஒன்றுமே முடியவில்லை' என்கிறாராம்!
சைவம் மட்டுமே சாப்பிடும், 82 வயது நிறைந்த நபர், திடமாக, எல்லா, 'வேலை'களையும் செய்கிறார். காரணம், எல்லா காலத்திலும், 'அளவோடு' இருந்திருக்கிறார்! முன்பெல்லாம், கிளுகிளு படங்கள் நிறைந்த புத்தகங்கள், இலைமறை காயாக, கடைகளில், மறைத்து விற்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போது, மேற்படி, 'கூகுள் சைட்' போல, எல்லாமே, 'பப்பரப்ப' தான்! எனவே பிரதர்... கிளுகிளு படங்கள் நிறைய பார்! நிறைய புத்தகங்களும் படி. ஆனால், 'அதை' முன்பு போல, ரகசிய மாய் செய்து கொள்! உன், அட்ரினலின் சுரப்பைத் தடுக்க, இந்த பூமியில் உள்ள புழு, பூச்சிக்குக் கூட உரிமை இல்லை!அதே சமயம், உன் மனைவிக்கோ, உன் மகளுக்கோ, நிர்பயா சம்பவம் நடந்தால், உனக்கே அடிவயிறு கலங்கி, உயிர் விடத் தோன்றுகிறதே! அதற்கு என்ன செய்யலாம்?
உன் மனைவியிடம் கேட்டுப் பார்!நிர்பயா குற்றவாளிகளுக்கான துாக்கு தண்டனை நிறைவேறிய மகிழ்ச்சியில், நரகாசுரனை அழித்த சந்தோஷத்தில், தீபாவளி கொண்டாடும் கதையாக, புதுப் புடவை கட்டி மகிழ்ந்திருப்பாள்!'இறந்த அந்த நாலு பேருக்கும், இது போல, தண்டனை கொடுத்ததை விட, நடுரோட்டுல வச்சு அடிச்சு, தோலுரிச்சு, சம்பந்தப்பட்ட, 'ஸ்பாட்'டை அறுத்து, அவமானப்படுத்தி இருக்கணும்...' என, நண்பிகளும், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்று அங்கலாய்க்கின்றனர்.சரி தானே!
'ஆனா சிஸ்டர்... நீ என்ன டிரெஸ் போட்டிருக்கே' என்றால், 'எலே... நான் பொடவை தான் கட்டிருக்கேன். இதை விட கண்ணியமான டிரெஸ் வேற என்ன இருக்கு...' என கோபமாய் கேட்கிறாய்.சரிம்மா... ஆனால், அந்த, 'லோ கட் ஜாக்கெட்'டும், 'லுக் அட் மீ' வகையிலான புடவையும், உன்னை, பலமுறை திரும்பிப் பார்க்க வைக்கிறதே... என்ன செய்ய!'உன் பார்வையில் கோளாறு. நான் அழகாய் இருப்பது உனக்குப் பிடிக்கலே...' என்கிறாய்.நீ அழகாய் இருக்கலாம்; ஆனால், அதைக் காரணமாய் வைத்து, பலரும் உன்னை, 'மேய' வைப்பது, உனக்கே ஆபத்தாய் முடியும் என்பது, உனக்குத் தெரியவில்லையா?'அதில் என்ன தப்பு இருக்கு? உனக்கு அது பிடிக்கவில்லை. பொறாமை... வயிறு
வீங்குற நீ...' என என்னைத் திட்டுகிறாய்.உன் சந்தோஷத்தில் குறுக்கிட, உன் இன்பத்தைத் தடுக்க, யாருக்கும் உரிமை இல்லை!
எல்லாமே, உன் இஷ்டப்படி நடக்கும் வரை சரியே! இஷ்டப்படாத போது? 'வல்லுறவு' என்பதில், உனக்கு உடன்பாடு உண்டா?ஆக, இன்னொரு நிர்பயா சம்பவம் நடக்காமல் இருக்க, நாம் முயல வேண்டுமா, இல்லையா!இரவு நேரத்தில், நாம் பாதுகாப்பாக, பயணப்படுவதற்கான உத்தரவாதம், போலீஸ் கையில் இல்லை; ஏன், சக ஆண்கள் கையிலும் இல்லை; நம் கையில் தான் உள்ளது.
சுயமாய் சிந்தித்துச் செயல்படுவது... கவனிக்கவும், செயல்படுவது... பெண்களுக்கு எளிதில் நடப்பதில்லை.சிறு வயது முதலே,
அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்படுகிறாள் பெண். அழகாய் இருப்பது, பெண்களின் இயல்பாய் இருக்க வேண்டும் என்பது, எழுதப்படாத கட்டளையாகி விட்டது.
'அது அவளை, தன்னம்பிக்கையுடன் வைத்திருக்கிறது' என, விவாதம் செய்யலாம். ஆனால், அந்த நினைப்பு, பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தைத் தருவதில்லை என்பதை, அவளே புரிந்து கொள்வதில்லை.புருவத்திற்கு மை தீட்டி, திருஷ்டிப் பொட்டும், நெற்றியில் பொட்டும் வைத்து, பவுடர் பூசி, அலங்கரித்து, தலைசீவி, பட்டாடை உடுத்தி என, பெண் குழந்தைகளை வளர்க்கிறோம்.இதே குழந்தை வளர வளர, இதே அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கொடுக்க, அந்த வளர்ந்த குழந்தை, 'ஓஹோ... இப்படி நம்மை அழகுபடுத்திக் கொள்ளவில்லை எனில், நம்மை யாரும் கண்டுக்க மாட்டாங்க போலிருக்கு...' என்ற எண்ணத்திலேயே, கண்ணாடி முன் நின்று, மணிக்கணக்கில் தன்னை அழகுபடுத்திக் கொள்கிறது.
போதாத குறைக்கு, பெண்களின் உடைகளையும், விதவிதமாய் தைத்துத் தள்ளி விடுகின்றனர், ஆடை வடிவமைப்பாளர்கள். 'நாங்க என்ன செய்யிறது... லேடீஸ் கேக்குறாங்க... அது போல தைக்கிறோம்...' என, அவர்கள் சொல்கின்றனர். 'உலகிலேயே நாம தான் அழகாய் தெரியணும்...' என்ற எண்ணம், பெண்ணின் அடி மனதில் ஊறி நிற்கிறது.இந்த எண்ணம் மட்டுமே மேலோங்கி நிற்பதால், இதைத் தாண்டி, வேறு எந்த விஷயத்திலும், அவளால் நாட்டம் செலுத்த முடிவதில்லை.'முட்டாள்தனம் இல்லாத பெண்' எனப் பெயர் எடுக்க, ஒரு பெண் ஆசைப்பட வேண்டுமா, வேண்டாமா? வேண்டாம் என விட்டு விடலாம்.
'அறிவாளியாய் இருந்து, நான் என்ன செய்யப் போகிறேன்? நான் என்ன கூனா, குருடா? என் அழகுக்கு, ஆயிரமாயிரம் ஆண்கள், வரிசையில் நின்று, ஆராதிப்பர்... அது போதும் எனக்கு...' என, மிக எளிதில் சொல்லி விடலாம். பிறப்பின் மையமே, பெண்கள் தானே! ஆனால், 'சிருஷ்டி' என்ற மாபெரும் தகுதியைப் பெற்றிருக்கும் பெண், தன் அனுமதி இன்றி, தனக்குள் உருவாகக் கூடிய சிருஷ்டியைத் தடுக்க, சற்றே கவுரவத்துடன், சுய அறிவுடன், 'நம் ஆபத்துகளைத் தவிர்க்கும் திறன், நம் கையில் தான் உள்ளது' என்பதை உணர்ந்து, சமயோசிதமாய், சாமர்த்தியமாய், சுதாரிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் தானே!அழகாய் இருப்போம்; ஆபத்தை வரவழைக்காத வகையில்!'ஸ்மார்ட்'டாய் இருப்போம்; சபலிஸ்டுகளை நெருங்க விடாத வகையில்!அப்படி இருந்தால், நிர்பயா அதாவது, பயமே இல்லாமல் இருக்கலாம்; நிர்பயா சம்பவம் நடக்காமல் தடுக்கலாம்!
பி.பானுமதி
பத்திரிகையாளர்
தொடர்புக்கு:
bhanudmr@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE