தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை வார்டு விரைவில் திறக்கப்படவுள்ளதாக கலெக்டர் தகவல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சேலம்: ''தனிமைப்படுத்தப்பட்ட, 40 படுக்கை சிகிச்சை வார்டு விரைவில் திறக்கப்படும்,'' என, கலெக்டர் ராமன் கூறினார்.
சேலம் அரசு மருத்துவமனையில், சளி, இருமல், மூச்சுத்திணறல் தொற்று தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டு, புனரமைக்கப்பட்ட ஐசோலேஷன் வார்டுகளை, கலெக்டர் ராமன், நேற்று ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: மாவட்டத்தில், 'கொரோனா' நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசு மருத்துவமனையில், ஐசோலேஷன் வார்டு, 30 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. இங்கு, 30 நோயாளிகளை தங்க வைத்து, 'கொரோனா' அறிகுறி இருப்பதா என்பதை கண்டறிந்து, உரிய சிகிச்சையளிக்கப்படும். தற்போது, பல்வேறு தொற்று கொண்ட, 14 பேர், சிகிச்சையில் உள்ளனர். அத்துடன், நோய் அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரி எடுத்து, ஆய்வு செய்ய, ஐ.சி.எம்.ஆர்.,(இன்டகிரேடட் மெடிக்கல் சென்டர்) அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று ஆய்வு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நோய் தொற்று சந்தேகம் உள்ளவர்கள், இங்கு, உடனடியாக சிகிச்சை பெறலாம். உள்ளாட்சி அமைப்புகள் மூலம், நோய் பரவலை தடுக்க, கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கான புதிய உபகரணங்கள் வாங்கப்படும். குளிர்சாதன வசதிகளுடைய, பெரிய வணிக நிறுவனங்கள் மட்டும் மூடப்படும். சிறு நிறுவனங்கள், கடைகள், நுகர்வோருக்கு பாதிப்பின்றி செயல்படும். வழிபாடு தலங்களில், மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க, மும்மத தலைவர்களுடன் பேச்சு நடத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலத்திலிருந்து, 12 பஸ்கள், வெளிமாநிலத்துக்கு செல்வதும், அங்கிருந்து, 80 பஸ்கள், சேலம் வருவதும் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் அறிவித்துள்ள, ஊரடங்குக்கு, மக்கள் தானாக முன்வந்து, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேட்டூரிலுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும், 'ஐசோலேஷன்' சிகிச்சை வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாரச்சந்தை, மாட்டு சந்தைகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொடர்பான, வதந்திகளை, யாரும் நம்பாதீர். வதந்தி பரப்பினால், போலீசில் புகாரளிக்கப்படும். சேலத்தில், 40 படுக்கை வசதிகளுடன் கூடிய, தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை வார்டு, விரைவில் திறக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். டீன் பாலாஜிநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.

தயாராகும் தனி வார்டு: ஆத்தூர் அரசு மருத்துவமனையில், தனி வார்டு ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக, தனிமை சிகிச்சை பிரிவு தயார்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று, பீதியால் வருபவர்களை, தனியாக தங்க வைத்து, சிகிச்சையளிக்கப்படும். அதற்கு தேவையான மருந்துகள் வைக்கப்படவுள்ளன. ஓரிரு நாளில், இந்த வார்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மருத்துவர்கள் கூறுகையில், 'நோய் பாதிப்பு சந்தேகம் இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனையை நாடி, உரிய மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மேற்கொள்ள, மக்கள் முன்வர வேண்டும். கொரோனா பாதிப்பு, இப்பகுதியில் இதுவரை கண்டறியப்படவில்லை' என்றனர்.

பயன்படுத்திய முக கவசம் சேகரிக்க பிரத்யேக பெட்டி: சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் கூறியதாவது: மக்கள், ஒருமுறை பயன்படுத்தும் முக கவசத்தை, குப்பை, சாக்கடை கால்வாயில் வீசும்போது, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, குழந்தைகள், முதியோர் என, நோய்தொற்று பரவ வாய்ப்பாக அமையும். சுகாதார பணியாளர்களுக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதனால், முக கவசத்தை பயன்படுத்திய பின், காகிதத்தில் மடித்து, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை மண்டல அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பிரத்யேக உயிரி கழிவு சேகரிப்பு பெட்டிகளில் போட வேண்டும். அவை, மாநகராட்சியால் முறையாக அப்புறப்படுத்தப்படும். அத்துடன், துணியால் தயாரிக்கப்படும் முக கவசத்தை பயன்படுத்த, மக்கள் முன்வர வேண்டும். இவற்றை துவைத்து, வெயிலில் உலர வைத்து பயன்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X