சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

தமிழனுக்கு தேவை இது தான்!

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தமிழனுக்கு தேவை இது தான்!

என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அதிரடி அறிவிப்புகளை வெளியிடப் போகிறார், ரஜினி' என, ஊடகங்கள் பெரிதாக எதிர்பார்த்தன. ஆனால், 'உனக்கும், பெப்பே; உங்க அப்பனுக்கும் பெப்பே' என, போக்குகாட்டிவிட்டார், நடிகர் ரஜினி.தி.மு.க.,வையும், அ.தி.மு.க.,வையும் எதிர்த்துப் போட்டியிட்டு, ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது எளிதல்ல என்பதை, பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.அரசியல் மாற்றம் வேண்டும் என்றால், தமிழகத்தில் எழுச்சியும், புரட்சியும் உண்டாக வேண்டுமாம்... அப்படி புரட்சி உண்டாகும் நேரத்தில் தான், இந்த மகானுபாவர், அரசியலில் இறங்கி, ஆட்சியைப் பிடிப்பாராம்... அதுவரை, அரசியலில் இறங்கும் பேச்சுக்கே இடமில்லை என, சொல்லிவிட்டார்.
'கடலில், அலைகள் ஓயட்டும்; அதன்பின், கடலில் இறங்கி, ஸ்நானம் செய்கிறேன்' என, ஒரு, 'புத்திசாலி' சொன்னானாம். அதுபோல இருக்கிறது, ரஜினியின் அரசியல் பிரவேசம்!வாய்ச்சொல் வீரராக இருக்கும் ரஜினி, அரசியலுக்கு வரவே மாட்டார்.
இலவசங்களை நம்பி வாழும் சுரணையற்ற தமிழர்களிடம், 'புரட்சி, எழுச்சி, புண்ணாக்கு...' எனப் பேசினால், நம்மை, 'ஞானசூன்யம்' என, ஏளனம் செய்வர்.ராமனோ, ராவணனோ... யார் ஆண்டால் என்ன; எங்களுக்கு தேவை, பணமும், மதுவும் தான் என்று வாழும் தமிழர்களிடம், 'அரசியல் மாற்றம் வேண்டும்' எனச் சொன்னால், நம்மை விரட்டி அடிப்பர் என்பதை, ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்.



மாணவர்களின் நிலை கேள்விக்குறி
எஸ்.செபஸ்டின், சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: சமீபகாலமாக, தமிழகத்திலுள்ள, அரசுப் பள்ளிகள் பெரும்பாலானவை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 'சென்டம்' வாங்கி வருகின்றன. இதனால், அரசுப் பள்ளிகளுக்கு, மக்களிடம் நற்பெயர் ஏற்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையும், அதிகரித்துள்ளது.அரசுப் பள்ளிகளில், ஏழை மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இம்மாணவர்கள், வாழ்க்கையில் உயர, கல்வி மட்டுமே கை கொடுக்கும்.அவர்களின் வாழ்வை நிர்ணயம் செய்வது, பிளஸ் 2 பொதுத்தேர்வு தான்.தற்போது நடந்த, பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆங்கில பாட வினாத்தாளில், புத்தகத்தில் இல்லாத கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இதனால், மாணவர்கள் திணறி உள்ளனர்.மேலும் இந்த ஆண்டு, பாடப் புத்தகமே மிகவும் தாமதமாக தான் வந்தது. இதனால் ஆசிரியர்கள், பாடங்களை முடிப்பதற்கே, நாட்கள் போதுமானதாக இல்லை.இந்நிலையில், பாடங்களில் இல்லாத அம்சங்கள், வினாத்தாளில் இடம் பெற்றிருந்ததால், மாணவர்கள் நொந்துபோய் உள்ளனர்.கற்பித்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்திய பின், இது போன்ற கேள்விகளுக்கு, மாணவர்கள் பதில் அளிக்க இயலும்.பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் போனால், அந்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி விடும்.எனவே, நடந்து முடிந்த, பிளஸ் 2 ஆங்கில தேர்வால், அரசுப்பள்ளி கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாதவாறு, தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடைமுறையைமாத்துங்க
!பி.சின்னக்கண்ணன், கோ வையிலிருந்து எழுதுகிறார்: அரசியல்வாதிகள் அடிக்கடி கட்சி மாறுவதெல்லாம், இன்றைய அரசியலில் சகஜமாகி விட்டது.ஆனால், ஒரு கட்சியின் சார்பாக தேர்வு செய்யப்பட்டு, அந்த கட்சியின் சின்னத்தில் நின்று, அந்த கட்சியினரின் கடின உழைப்பால் வெற்றி பெற்ற, எம்.எல்.ஏ.,வோ, எம்.பி.,யோ, உள்ளாட்சி பிரதிநிதியோ, கட்சி மாறுவதை அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது.நம் நாட்டில், 90 சதவீத மக்கள், கட்சியை பார்த்துத் தான் ஓட்டளிக்கின்றனர். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, கட்சி மாறுவது, அவர் சார்ந்த கட்சிக்கு இழைக்கப்படும் துரோகம் மட்டுமல்ல, அந்த தொகுதி மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகம்.கட்சி தாவலை தடுக்கும் வகையில், அந்த சட்டத்தில் மேலும் பல, திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.l ஒரு கட்சி சார்பாக தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி, மூன்று ஆண்டுகளுக்குள் பதவியை ராஜினாமா செய்தால், அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாதுl குறுகிய காலத்தில் உருவாக்கப்படும் இடைத்தேர்தல் செலவினங்களை, ராஜினாமா செய்த மக்கள் பிரதிநிதியே ஏற்கும் வண்ணம், புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.இப்படிச் செய்தால், சுயநலத்துக்காக கட்சி மாறும் நடவடிக்கைகள் குறைய வாய்ப்பு உண்டு.
அவதுாறுகளைபுறக்கணிப்போம்
வீ.ராஜகோபால், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'யெஸ்' வங்கி விவகாரத்தில் மோசடி, குற்ற சதி, ஊழல் ஆகியவை குறித்த வழக்கு விசாரணை துவங்கியுள்ளது. இதன் வழியாக, வங்கியை நிர்மூலமாக்கிய காரணங்களும், முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வரும்.மக்கள், வங்கிகளில் செய்துள்ள, 'டிபாசிட்' பணத்தை, சில வரையறைகளுக்கு உட்பட்டு, தொழில் கடன் வழங்கப்படுகிறது.ஆனால், எந்த விதியையும் பின்பற்றாமல், சிலருக்கு, வங்கி நிர்வாகம் கடன் வழங்குகிறது. கடன் பெறுவோர், கடனை திருப்பி செலுத்துவதில்லை. இதனால், வங்கிகள் தள்ளாட்டம் காண்கின்றன.பண பரிமாற்ற விவகாரத்தில் மோசடி செய்ததால், யெஸ் பேங்க் நிறுவனர், ராணா கபூர் கைது செய்யப்பட்டுள்ளார்.ராணா கபூர், அவரது மனைவி, மூன்று மகள்கள், பல போலி நிறுவனங்களை நிர்வகித்து வந்துள்ளனர். 'தேவன் ஹவுசிங் பைனான்ஸ்' என்ற நிறுவனம், யெஸ் வங்கியிலிருந்து வாங்கிய, 3,700 கோடி ரூபாய் கடனுக்காக, கபூர் குடும்பத்திற்கு, 600 கோடி ரூபாய் லஞ்சமாக கை மாறியுள்ளது.காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா வரைந்த, சாதாரண ஒரு ஓவியத்திற்காக, ராணா கபூர், 2 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.தற்போது, யெஸ் வங்கியில் வாராக் கடனாக அமைந்துள்ள கடன் தொகை, காங்கிரஸ் ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், தற்போது, வங்கி நிர்வாகத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, பாராட்டத்தக்கது. யெஸ் வங்கியின், 49 சதவீத மூல ஆதாரத்தை, எஸ்.பி.ஐ., வங்கிக்கு கொடுத்துள்ளது, ஆறுதல் அளிக்கிறது.நாட்டின் வளர்ச்சிக்கு, நிலைப்பு தன்மையை, வங்கிகள் தக்க வைக்க வேண்டும். வங்கிகளின் செயல்பாடுகளை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.எது நடந்தாலும், மத்திய அரசு குறித்து, அவதுாறு பரப்புவதை, சில அமைப்புகள், முழுநேர பணியாக செய்து வருகின்றன. அவற்றை, மக்கள் புறந்தள்ள வேண்டும்.

--
கோவில்களை மூடிவிடுங்கள்


டாக்டர் ரா.நாகசாமி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காஞ்சி மகா பெரியவர் சென்னைக்கு வந்திருந்த சமயத்தில், அவரை வணங்க சென்றேன். அப்போது, என்னிடம், 'நாம், ஆண்டுதோறும் ஆகம, சிற்ப கலைகளைப் பற்றிய கருத்தரங்கு நடத்துகிறோம்; இந்த ஆண்டு, இங்கே அதை நடத்த வேண்டுமா' எனக் கேட்டார்.அதற்கு நான், 'அவசியம், நடத்த வேண்டும். இப்போது, சிலைகள் குறித்து, மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; அது தொடர வேண்டும்' எனக் கூறினேன்.
அவர், 'இல்லை; இந்த ஆண்டு, கருத்தரங்கு நடத்த வேண்டாம்' என்றார்.மேலும், அவர் கூறியது, எனக்கு வியப்பை அளித்தது.'நம் நாட்டின் மீது, இப்போது, சீனாக்காரன் படை எடுத்து வந்திருக்கிறான்; நம் நாட்டுக்கு கெடுதல் ஏற்பட்டுள்ளது. அதனால், இப்போது கருத்தரங்கு வேண்டாம்' என்றார். ஆன்றோர் மனதில், எப்போதும் நாட்டின் நலனே மேலோங்கி நின்றது.இப்போது, 'கொரோனா' வைரஸ், உலகையே நடுநடுங்க செய்துள்ளது. மக்களிடம், பீதி பரவி உள்ளது.'மக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்கு செல்லாதீர்' என, அரசு அறிவுறுத்தி உள்ளது. நம் நாட்டில், மக்கள் அதிகம் செல்லும் இடம், கோவில்கள் தான். எனவே, கோவில்களை, சிறிது காலத்திற்கு மூடுவது நல்லது. இது, வரும் முன் காப்போம் என்ற செயல்பாடு தான்.நம் கோவில்களில், ஆகம முறைப்படி வழிபாடு நடக்கின்றன. வெள்ளம், நிலநடுக்கம், அன்னியர் படையெடுப்பு காலங்களில், கோவில்களை மூடியுள்ளனர்; ஆபத்து நீங்கிய பின், கோவில்களை திறந்து, வழக்கம்போல பூஜை செய்துள்ளோம். அப்படி செய்யுங்கள் என, ஆகம நுால்களும் கூறியுள்ளன.எனவே, ஆபத்து காலங்களில், கோவிலில் பூஜையே இல்லாமல் போவிடுமோ என, பதற்றப்பட தேவையில்லை.மூலவரை, தர்பை புல்லில் ஆவாகனம் செய்து, பூஜை செய்ய வேண்டும். உற்சவ மூர்த்தியை, கோவில் திருச்சுற்றில் புதைத்து, ஆபத்து நீங்கிய பின், சாந்தி பூஜை செய்து, வழிபாடு செய்யவும் என்பது, ஆகம விதி.மாலிக்கப்பூர் படை எடுப்பின் போது, பல கோவில்களில், உற்சவ மூர்த்திகள், இவ்வாறு புதைக்கப்பட்டன; அவையே, தற்போது புதையல்களாக கிடைக்கின்றன.இறைவன், கோவிலுக்கு சென்று கேட்டால் தான், கொடுப்பார் என்றில்லை; மனமுருகி பிரர்த்தனை செய்தால், நம் வீட்டிற்கே வந்து கொடுப்பான்.மக்களை, கொரோனா எனும் பேராபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். அதற்கு, இறைவன் துணை புரிவார்.



கடிதத்தால்பெயர் மாற்றம்
டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்., பெயரை சூட்டி, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டார். ஆனால், கோயம்பேடிற்கு வரும் பஸ்களின் பெயர் பலகையில், எம்.ஜி.ஆர்., பெயர் இடம் பெறாமல் இருந்தது.சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, எம்.ஜி.ஆர்., பெயரை சூட்டி, பிரதமர் மோடி உத்தரவிட்டார். உடனடியாக, பெயர் பலகை மட்டுமின்றி, பயண சீட்டிலும், எம்.ஜி.ஆர்., பெயர் இடம் பெற்றது.ஆனால், சென்ட்ரல் பேருந்து நிலையத்திற்கு வரும் பஸ்களில், 'சென்ட்ரல்' என்று தான் இருந்தது.இவை குறித்து, இதே பகுதியில், கடிதம் வெளியானது.இதை தொடர்ந்து,தற்போது, 'எம்.ஜி.ஆர்., சென்ட்ரல்' எனவும், 'எம்.ஜி.ஆர்., கோயம்பேடு' எனவும், பஸ் பெயர் பலகைகளில், மாற்றம் செய்யப்பட்டது.மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டும், ஓராண்டுக்கு மேல் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், நம் நாளிதழில் இடம்பெற்ற கடிதத்தால், பெயர் பலகைகளில், எம்.ஜி.ஆர்., பெயர் இடம் பெற்று விட்டது.நடவடிக்கை எடுத்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி.
கோவில்களை காப்போம்
சுப்ர அனந்தராமன், காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்: சில தினங்களுக்கு முன், நம் நாளிதழில், 'உண்மையை உணர்வோம்; கோவில்களின் தொன்மையைக் காப்போம்' என, புகைப்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியாகி இருந்தது.மக்கள், அதை படித்து, தமிழகத்தின் கலாசார விரோதிகளான, அரசியல் கட்சித் தலைவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கடந்த, 1967ல், காமராஜருடன் சேர்ந்து, காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, தி.மு.க., ஆட்சியை பிடித்த போது, முன்னாள் முதல்வர், பக்தவத்சலம், 'வைரஸ் கிருமி, பரவி விட்டது' என, சரியாக தான் சொன்னார்.தமிழகத்தின் அனைத்து கோவில்களையும், தொல்லியல் துறை பராமரிக்க, மத்திய அரசு, ஒரு அவசர சட்டம் இயற்றினாலும் பாதகமில்லை.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் முன், ஹிந்து மதம் குறித்து, அநாகரிகமான கருத்துகளுடன், ஈ.வெ.ரா., சிலையை வைத்து, தி.மு.க., ஆதரவோடு, தி.க.,வினர் அராஜகம் செய்தனர். அதுபோல கேரளம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் செய்திருக்க முடியுமா என, தமிழக ஹிந்து மக்கள் சிந்திக்க வேண்டும்.முதலில், கோவில்களின் நகரமான காஞ்சிபுரத்தை, முழுமையாக, மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், பராமரிக்க வேண்டும். அங்குள்ள அத்தனை கோவில்களுமே, பல நுாற்றாண்டுகளுக்கு முன், பல்லவ மன்னர்களால் நிர்மாணம் செய்யப்பட்டவை.தமிழக அறநிலையத்துறையின் அதிகாரிகளின் அலட்சியத்தாலும், சுயநலத்தாலும், பழமையான கோவில்கள் சிதிலமடைந்துள்ளன.தமிழர்கள், இனிமேலும் பணத்துக்கும், இலவசங்களுக்கும் ஆசைப்பட்டு, கலாசார விரோதிகளான கழகங்களை ஆதரிக்க கூடாது.
'டாஸ்மாக்'துாதுவரா வடிவேலு?

ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கலிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளன.இந்நிலையில், திருச்செந்துார் முருகப்பெருமானை தரிசிக்க சென்ற, காமெடி நடிகர் வடிவேலு, பத்திரிகையாளர்கள் சந்தித்தார். அப்போது அவர், 'என் அப்பன் முருகனும், 'டாஸ்மாக்' கடைகளும் இருக்கும் வரை, கொரோனா இங்கு வராது' என பேசியுள்ளது, மக்களை முகம் சுளிக்கச் செய்துள்ளது.'டாஸ்மாக் மது இருக்கும் வரை, கொரோனா வராது' என, வடிவேலு புதிய கண்டுபிடிப்பை அறிவித்துள்ளார். அவர் காமெடி செய்கிறார் எனக் கூறினால், தமிழ் கடவுள் முருகனையும் கேலி செய்கிறாரா? எதை அடிப்படையாக வைத்து, முருகனையும், டாஸ்மாக் மதுவையும் ஒப்பிட்டார்?கொரோனா வைரஸ் தொற்று, அதிவேகமாக பரவக்கூடிய இடம், டாஸ்மாக் பார் தான் என்பதை உணர்ந்து தான், தமிழக அரசு, அவற்றை மூட உத்தரவிட்டுள்ளது. ஆனால், மது கடைகள் திறந்திருக்கும். ஏனெனில், தமிழக அரசிற்கு வருவாய் பாதிக்கக் கூடாது அல்லவா!அதனால், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, வடிவேலுவை துாதராக்கி, விற்பனையை அதிகரிக்கலாம்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
22-மார்-202012:35:10 IST Report Abuse
karutthu திருச்செந்துார் முருகப்பெருமானை தரிசிக்க சென்ற, காமெடி நடிகர் வடிவேலு, பத்திரிகையாளர்கள் சந்தித்தார். வடிவேலு ஒரு காமெடி நடிகன் .....அவளவுதான் அவர் காமெடி நடிகன் என்பதால் நிறைய மீம்ஸ் வருகிறது .....இதுக்கு இவளவு பில்டப் தேவையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X