பாலிவுட் பாடகிக்கு கொரோனா: பலரிடம் பரவியதா ? | Dinamalar

பொது செய்தி

இந்தியா

'பாலிவுட்' பாடகிக்கு கொரோனா: பலரிடம் பரவியதா ?

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (15)
Share

லக்னோ:கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள, 'பாலிவுட்' பாடகி கனிகா கபூர், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று, வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்டதால், அவர் மீது, உத்தர பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



latest tamil news




கொரோனா வைரசால், இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 250ஐ தாண்டியுள்ளது; 5 பேர் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் பாதிப்பு மோசமடைந்து வருவதால், மத்திய, மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.பொது நிகழ்ச்சி இந்நிலையில், பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், 9ம் தேதி, லண்டனில் இருந்து, மஹாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு திரும்பினார்.அங்கு இரண்டு நாட்கள் தங்கிய அவர், 11ம் தேதி, உ.பி., தலைநகர் லக்னோவுக்கு வந்தார். இங்கு, கனிகா கபூருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

மருத்துவ பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டது. இதை, சமூக வலைதளமான, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், நேற்று முன்தினம், அவரே தெரிவித்து இருந்தார். இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர் இந்தியாவுக்கு திரும்பியதும், லக்னோவில், மூன்று பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தற்போது தெரியவந்துள்ளது.


latest tamil news




லக்னோவில், முன்னாள் எம்.பி., அக்பர் அஹமது, ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், கனிகா கபூர் பங்கேற்றது, பெரிய விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த விருந்தில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவும், அவரது மகனும், லோக்சபா எம்.பி.,யுமான துஷ்யந்த் சிங்கும் பங்கேற்றார். இவர்கள் மட்டுமல்லாமல், உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், தொழிலதிபர்கள், காவல்துறை மூத்த அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என பலரும் பங்கேற்றது தெரிய வந்துள்ளது. இது, அனைவரையும் பீதிஅடைய வைத்துள்ளது.


பரிசோதனை



இதையடுத்து, வசுந்தரா ராஜேயும், அவரது மகன் துஷ்யந்த் சிங்கும், வீட்டில், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். எனினும், அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவில்லை. ஆனால், அமைச்சர், ஜெய் பிரதாப் சிங் பரிசோதனை செய்துகொண்டார். போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசார துறையின் பார்லிமென்ட் நிலைக்குழு உறுப்பினராக, இருக்கும் துஷ்யந்த் சிங், 18ம் தேதி, விமான போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதையடுத்து, துஷ்யந்தை சந்தித்த விமான போக்குவரத்துத்துறை செயலர், பி.எஸ்.கரோலா, ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், ராஜிவ் பன்சால் ஆகியோர், நேற்று முன்தினம் மாலை முதல், தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு இருந்தும், அதனை மற்றவர்களுக்கு பரப்பும் வகையில் அலட்சியமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டிற்காக, கனிகா கபூர் மீது, உத்தர பிரதேச மாநில போலீசார், பல பிரிவுகளின்கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜனாதிபதியுடன் சந்திப்பு!கனிகா கபூருடன் விருந்தில் பங்கேற்ற துஷ்யந்த் சிங், சமீபத்தில், யார் யாரை சந்தித்தார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இது, தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன், ராஷ்டிரபதி பவனில் நடந்த விருந்தில் கலந்துகொண்ட துஷ்யந்த் சிங், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துள்ளார். இதையடுத்து, ஜனாதிபதியின் அனைத்து நிகழ்ச்சிகளும், சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உ.பி., மற்றும் ராஜஸ்தான் எம்.பி.,க்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விருந்தில், மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர், பா.ஜ., - எம்.பி., ஹேம மாலினி, காங்., - எம்.பி., குமாரி செல்ஜா, மேரி கோம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பார்லி.,யில், துஷ்யந்த் சிங்குடன் பேசிய திரிணமுல் காங்., - எம்.பி., டெரக் ஓ பிரையன், ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், காங்., தலைவர்கள் தீபேந்தர் ஹூடா மற்றும் ஜிதின் பிரசாதா ஆகியோர், முன்னெத்தரிக்கை நடவடிக்கையாக, தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். விருந்தில் பங்கேற்ற, உ.பி., மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங்குக்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X