பொது செய்தி

இந்தியா

நாடு முழுவதும் 298 பேருக்கு, 'கொரோனா': மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

Updated : மார் 23, 2020 | Added : மார் 21, 2020
Share
Advertisement
 நாடு முழுவதும் ,298 பேருக்கு,கொரோனா, மத்திய, சுகாதார அமைச்சகம் ,அறிவிப்பு

புதுடில்லி:நம் நாட்டில், 298 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அண்டை நாடான சீனாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, நம் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் தகவல்களை பகிர்ந்து வருகிறது.சிறப்பு வார்டுஇந்நிலையில், சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:நாடு முழுவதும், 14 ஆயிரத்து, 811 பேரின் ரத்த மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

இவற்றில், 298 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு வார்டுகளில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த, 298 பேரில், 39 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில், இத்தாலியைச் சேர்ந்தவர்கள் மட்டும், 17 பேர்.
டில்லி, கர்நாடகா, பஞ்சாப், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். வைரசால் பாதிக்கப்பட்ட, 23 பேர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில், 52 பேரும்; கேரளாவில், 40 பேரும்; கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில், 26; உத்தர பிரதேசத்தில், 24; கர்நாடகாவில், 15; லடாக்கில், 13; தெலுங்கானாவில், 19; ராஜஸ்தானில், 17 பேர்; கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.குஜராத்தில், ஏழு; ஹரியானாவில், 17; ஆந்திரா, உத்தரகண்டில், தலா மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், ஆறு பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், தலா இருவரும், புதுச்சேரி, சத்தீஸ்கர், சண்டிகரில், தலா ஒருவரும், இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு பரிசோதனை?கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான புதிய நடைமுறையை, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:கடந்த, 14 நாட்களில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடம், வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறி இருந்தால், அவர்களுக்கும், வைரஸ் அறிகுறி உள்ள சுகாதார பணியாளர்களுக்கும் மட்டுமே, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.


பரிசோதனைதற்போது, இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில், அதிக அளவில் மூச்சுத் திணறல், கடுமையான காய்ச்சல், கடுமையான இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப் பட்டுஉள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


100 ரூபாய்க்கு மட்டுமேகொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, மத்திய அரசு சார்பில், 'வாட்ஸ் ஆப்' குழு துவங்கப்பட்டுள்ளது. 'MyGov Corona Helpdesk' என, அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
* கைகளை சுத்தம் செய்ய பயன்படும், 200 மிலி அடங்கிய, 'சானிடைசர்' திரவத்தை, ஜூன் இறுதிவரை, அதிகபட்சமாக, 100 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.


பலி எவ்வளவு?

கொரோனா தாக்குதலால், உலகம் முழுவதும், 11 ஆயிரத்து, 826 பேர் உயிரிழந்துள்ளனர். 93 ஆயிரத்து, 535 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும், 2 லட்சத்து, 83 ஆயிரத்து, 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில், 4,032 பேர் இறந்துள்ளனர்.சீனாவில், 3,255 பேரும், ஈரானில், 1,556 பேரும், ஸ்பெயினில், 1,326 பேரும் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில், 275 பேரும், ஜெர்மனியில், 70 பேரும், தென் கொரியாவில், 102 பேரும், பிரிட்டனில், 177 பேர் இறந்துள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


சம்பளத்தை கொடுங்க

பல்வேறு தொழில் துறை அமைப்புகளுக்கு, மத்திய அரசின் தொழில் துறை சார்பில், ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வீடுகளில் இருந்து பணியாற்ற, ஊழியர்களை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து ஆலைகளிலும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.வைரசால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களுக்கும், சரியான நேரத்தில், பிடித்தம் இல்லாமல் சம்பளத்தை அளிக்க வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான பாக்கிகளையும், ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளத்தையும் நிறுத்தக் கூடாது. இது தொடர்பாக, அனைத்து நிறுவனங்களையும் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முன்பதிவு ரத்து: ரயில்வே சலுகை
மார்ச், 21 முதல், ஏப்., 15 வரையிலான ரயில்களுக்கான முன்பதிவு ரத்து செய்யும் பயணியருக்கு சில சலுகைகளை, ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:இந்தக் காலகட்டத்தில், ஒரு ரயிலை, ரயில்வே ரத்து செய்திருந்தால், பயண தேதியில் இருந்து, மூன்று நாட்கள் என்பதற்கு பதிலாக, 45 நாட்கள் வரை, கட்டணத்தை திரும்பப் பெற விண்ணபிக்கலாம். பயணி, சுயமாக பயணத்தை ரத்து செய்தால், தற்போது பயண தேதியில் இருந்து மூன்று நாட்களுக்குள், ரயில் நிலையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த கால அவகாசம், 30 நாட்களாக உயர்த்தப்படுகிறது.அதேபோல், தலைமை வர்த்தக மேலாளரிடம் விண்ணப்பிக்கும் காலம், 10 நாட்களில் இருந்து, 60 நாட்களாக உயர்த்தப்படுகிறது.ரயில்வேயின், 139 என்ற உதவி எண்ணின் மூலம் ரத்து செய்வோர், 30 நாட்களுக்குள் கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


கோவாவில், 144 தடையுத்தரவு


வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கோவாவில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தன.குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ், 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, அதிக அளவில் மக்கள் கூட முடியாது. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைத் தவிர, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள், கடும் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும்.


கேரள ஜோடி தவிப்புகேரளா மாநிலம் கோழிக்கோடைச் சேர்ந்த, பிரேமசந்திரன், 26 மற்றும் சாண்ட்ரா சந்தோஷ், 23, சிறு வயதில் இருந்தே பழகி வந்தனர். இரு வீட்டாரின் ஒப்புதலுடன், இவர்களுக்கு, 2018, மே, 20ல் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது, 'நிபா' வைரஸ் பரவிய தால், திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே பிரேமசந்திரன் குடும்பத்தில், ஒருவர் உயிரிழக்க, ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்தாண்டு, ஆகஸ்டில் திருமணம் செய்ய, மீண்டும் நாள் குறிக்கப்பட்டது. ஆனால், மழை வெள்ளத்தால், இரண்டாவது முறையாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இரு வீட்டாரும் இணைந்து, இந்தாண்டு, மார்ச், 20ல் திருமணம் செய்ய நாள் குறித்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால், திருமணம் மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


இறக்கி விடப்பட்ட தம்பதி


கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து டில்லிக்கு செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், டில்லியைச் சேர்ந்த, ஒரு தம்பதி பயணம் செய்தனர். அதில், கணவருடைய கையில், கொரோனா வைரஸ் அச்சத்தில், வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என, மருத்துவமனை சார்பில், 'சீல்' அச்சிடப்பட்டிருந்தது. இதை சக பயணியர் பார்த்து, எச்சரித்தனர். அதையடுத்து, தெலுங்கானா மாநிலம் காசிபட் அருகே, ரயில் நிறுத்தப்பட்டு, அந்த தம்பதி, இறக்கி விடப்பட்டனர்.

அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் பயணம் செய்த பெட்டியில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, துாய்மைப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, ரயில் மீண்டும் பயணத்தை துவங்கியது. இதனால், மற்ற ரயில் பயணியர் இடையே பீதி ஏற்பட்டுள்ளது.


உற்பத்தியை குறைக்க முடிவு

மஹாராஷ்டிரா மாநிலத்தில், வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புனேக்கு அருகே, சாக்கனில் உள்ள, 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில், வரும், 23ம் தேதி முதல் உற்பத்தியை வெகுவாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், 24ம் தேதி முதல், உற்பத்தியை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X