'தமிழ் எங்கள் உயிர் மூச்சு... ஹிந்தி மொழியை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம்' என்று கூறி, தமிழ் மக்களை, குறிப்பாக, மாணவர்களை முன்னிலைப்படுத்தி, ஆட்சியைப் பிடித்தது, திராவிட கட்சி.இவர்கள் ஆட்சி அமைக்க, முழு காரணமாக இருந்தது தமிழ்.
ஆனால், இவர்கள் ஆட்சியில் தான், தமிழ் முடக்கப்பட்டுள்ளது; ஆங்கிலம் துள்ளலுடன் வளர வழி செய்யப்பட்டுள்ளது.தமிழைப் படிக்காமலே ஒரு மாணவன், மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விகளை கற்க முடிகிறது. 'நாங்களும், ஆங்கில வழி கல்வி கற்பிக்கிறோம்; எங்களிடம் வாருங்கள்' என்று, அரசு பள்ளிகள் விளம்பரம் செய்யும் அளவிற்கு, தமிழ் தாழ்ந்து போயுள்ளது.அரை நுாற்றாண்டு காலமாகவே, தமிழை, மேடை பேச்சு மொழியாகவும், பட்டிமன்ற மொழியாகவும் மட்டுமே, ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர். தமிழ் வளர்ச்சிக்கு வள்ளுவர் கோட்டம், பூம்புகார் போன்ற நினைவுக் கட்டடங்களையும், வள்ளுவர் போன்ற தமிழ் பெரியவர்களுக்குச் சிலைகளும் வைத்தால் போதும் என்று நினைத்து விட்டனர் போலும்.தமிழை அறிவியல் மொழியாக வளர்க்க முனைந்திருந்தால், இன்றைய தமிழ் மாணவர்கள், மருத்துவத்தையும், பொறியியலையும் மற்றும் உயர் கல்விகளையும், தாய்மொழி தமிழில் படித்து, தேர்வு பெற்று சாதனையாளர்களாக உயர்ந்திருப்பர்.இதை கூறினால் போதும், 'தமிழுக்கு அந்த தகுதி கிடையாது; ஆங்கிலத்திற்கு மட்டுமே, அந்த தகுதி உள்ளது' என்று கூறும் ஏராளமானோர், திராவிட கட்சிகளில் உள்ளனர்.
இவர்கள் கூற்றுப்படி, இங்கு, தமிழை விட, ஆங்கிலம் சிறந்த மொழியாகிறது. இப்படி கூறுவது, அவர்களது அறியாமை அல்லது ஏமாற்று வேலை என்று தான் கூற வேண்டும்.ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன் போன்ற வளர்ந்த நாடுகளிலும், இன்னும் பல நாடுகளிலும், அவரவர் தாய்மொழியிலேயே, உயர் கல்வி போதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பல்வேறு உயர் துறைகளிலும், விஞ்ஞான துறைகளிலும், இந்த நாடுகள் சாதனையாளர்களைப் பெற்றுள்ளன.இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், 'நோபல்' பரிசுகள் முதல், பல உயரிய பரிசுகளைப் பெற்றுள்ளனர்.திராவிட கட்சிகளால் வீழ்த்தப்பட்டது தமிழ் மட்டுமல்ல; ஆங்கில மொழி வளர்ச்சியால் நம் கலாசாரமும் தான், சேர்ந்தே அழிக்கப்படுகிறது.
இந்த நிலையை முடிவுக்கு கொண்டு வர, மாநிலங்கள் அனைத்திலும், தங்கள் தாய்மொழியில், உயர் கல்வியை கற்று தர வேண்டும். உயர் கல்வியை ஆங்கிலத்தில் தான் தர முடியும் என்பது, சரியான முடிவல்ல.தாய் மொழியில், உயர் தொழில் கல்வி கற்பவர்கள், வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் வேலை செய்ய முடியாது என்பதும் உண்மையல்ல.ஒரு மொழியில், மருத்துவத்தைக் கற்றவர், மருத்துவத்தில் ஈடுபடும்போது, அந்த மொழி மருத்துவம் செய்யப் போவதில்லை. அவர் கற்றுக் கொண்டதை வைத்தே, மருத்துவம் செய்யப் போகிறார். இது, ஆங்கிலம், தமிழ் மற்றும் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொண்டோருக்கும் பொருந்தும்.தாய்மொழியில் பொறியியல் மற்றும் தொழில் கல்வி கற்றோருக்கும், இது தான் உண்மை நிலை. இவர்கள் தொழில் செய்ய, மொழி குறுக்கே வரப் போவதில்லை. பிற நாட்டவரிடம், பிற மாநிலத்தவரிடம் தொடர்பு கொள்ள, இரண்டாவது மொழியாக, ஆங்கிலம் அல்லது ஹிந்தியைக் கற்றுக் கொண்டாலே போதுமானது.பாதிக்கப்பட்டது தமிழ் மொழி மட்டுமல்ல; நம் நாட்டின் அனைத்து மாநில தாய் மொழிகளும், அதை சார்ந்த மக்களும் தான். தங்களுக்கு புரியாத மற்றொரு மொழியான ஆங்கிலத்தைக் கற்று, பின், அதில் உயர் கல்வியை படிப்பது என்பது, எத்தனை கஷ்டமானது.
'டியுஷன்' படிக்க வசதி இல்லாதோர், பள்ளி படிப்பிலேயே வீழ்ந்து போவர். பின் எப்படி, உயர் கல்வியில் இவர்கள் சாதிக்க முடியும்?இதில், ஏழைகளுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் பரிந்து பேசும், அரசியல் கட்சிகளைக் காணோம். ஆனால், இந்தியாவில் அதிக மக்கள் பேசக் கூடிய ஹிந்தியை, பொது மொழியாக இருக்கட்டும் என்றால், இவர்கள் சீறிப் பாய்ந்து, 'ஆங்கிலம் இருக்கட்டும்...' என்று கூறுவதில், என்ன நியாயம் உள்ளது?உண்மையில் இவர்களுக்கு, தமிழ் மீது பற்றும், பாசமும் இருந்தால், தாய்மொழியான தமிழை, பாட மொழியாக ஏற்று, படித்து வருபவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை என, முன்கூட்டியே அறிவித்திருப்பர். இத்தனை ஆண்டுகளும் சும்மா இருந்து விட்டு, இப்போது தான், இ.பி.எஸ்., அரசு அறிவித்துள்ளது.மேலும், எந்த ஒரு தமிழக அரசு அலுவல கத்திலும், ஆங்கிலம் பயன்படுத்தவே கூடாது என்பதையும், திட்டவட்டமாக அரசு அறிவித்தல் வேண்டும். இதை அரசு நினைத்தால், நிச்சயம் சரிசெய்ய முடியும்.மேலும், நம் மாநிலத்தில் விற்பனையாகும் பொருட்கள் அடைக்கப்படும் அட்டைப் பெட்டிகள் மீதும், தாய்மொழியான தமிழில் மட்டுமே எழுதப்பட வேண்டும்.
ஏழு ரூபாய்க்கு விற்கப்படும் தயிர் இருக்கும் பிளாஸ்டிக் அட்டைப் பெட்டியில், ஒரு வரி கூட தமிழில் இல்லை; அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது.மருந்து பொருட்கள், உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் மீது, அடைக்கப்பட்டுள்ள பெட்டிகள் மீதும், மாநில வாரியாக, அவரவர் தாய்மொழியில் மட்டுமே எழுதப்பட வேண்டும். மேலும், 75 சதவிதத்தினருக்கு மேல் ஆங்கிலம் தெரியாத நிலையில், ஆங்கிலத்தில் எழுதியுள்ளதை, எப்படி படித்து, அதன் தரத்தை மக்கள் தெரிந்து கொள்வர்?இதை கூறினால், தமிழகத்தில் வாழும் பிற மாநிலத்தவர் எப்படி படித்துப் புரிந்து கொள்வர்... என, எதிர் கேள்வி கேட்பர். 75 சதவீத தமிழர்கள் புரிந்து கொள்ளாத ஆங்கிலத்தை விட, தமிழில் எழுதப்படுவதே சரியான முடிவாகும்.ஆங்கிலம் தெரியாத, 75 சதவீத தமிழர்களும், தமிழில் வாசித்து, தாங்கள் வாங்கும் பொருட்களின் தரத்தை புரிந்து கொள்வர். குறைந்த பட்சம், காலாவதியான பொருட்களை வாங்குவதை தவிர்க்க முடியும்.
அதே சமயம், இதன் மூலம், மறந்து போன தமிழை, உயிரூட்ட வழி பிறக்கும்.இது போல, தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில், தமிழைக் கொச்சப்படுத்தி, ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் அதிகமாக உள்ளது. இவர்களுக்கு, தமிழை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று, அரசு எச்சரிக்கை விட வேண்டும்.அது போல, ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் ஊடகங்களையும், வியாபார பொருட்களையும் புறக்கணிக்கும்படி, அரசியல் கட்சிகள், தங்கள் கட்சியினருக்கும், மக்களுக்கும், வேண்டுகோள் விடுத்து, தங்களின் தமிழ் பற்றை நிரூபிக்க முன் வரவேண்டும்.அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் புறக்கணித்தாலே, இவர்களில் சரக்கு விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடும். இதன் காரணமாக, பொருட்களின் தயாரிப்பாளர்கள், தாய் மொழிகளுக்கு மதிப்பளிப்பர். ஆனால், இது போன்று, தமிழ் மறுக்கப்படுவதை, தமிழுக்காக, தமிழருக்காக கட்சி நடத்துவோர் கண்டு கொள்வதில்லை.வங்கியின் சுற்றறிக்கை மற்றும் தகவல்களும், விதிகளும், ஆங்கிலத்திலேயே தரப்படுகின்றன.
குறிப்பாக, நகைக் கடன் வழங்கும் வங்கிகளில், பெண்கள் கூட்டம் ஏராளமாக உள்ளது. இதில், 90 சதவீதம் பேர், தமிழில் கையெழுத்து போடுபவர்களே. ஆனால், இவர்களிடம் கையெழுத்து வாங்கும் தாள்களில் விதிமுறைகள் அனைத்தும், ஆங்கிலத்தில் தான் அச்சிடப்பட்டுள்ளன.ஆகையால், நாட்டில் ஏகமாகவும், வேகமாகவும் பரவும் ஆங்கில ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு ஒரே வழி, மாநிலம் முழுதும், தாய் மொழியை முன்னிலைப்படுத்த வேண்டும்.மத்திய அரசு தங்கள் அரசு சம்பந்தப்பட்ட வங்கித்துறை, காப்பீட்டுத்துறை, தபால் துறை, வருமானவரித்துறை, தொலை தொடர்புத்துறை மற்றும் அவர்களின் மாநில சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும், அவரவர் பிரதேச தாய்மொழியிலேயே பயன்படுத்தவேண்டும். இது ஒன்றும் முடியாததல்ல, முடியும். பல கோடி ரூபாய்களை வருட வருமானமாகப் பெறும் இத்துறைகளுக்கு தாய்மொழிகளை அமல் செய்வதில், பெரிய இழப்பு ஒன்றும் ஏற்பட்டு விடாது.அதுபோல், சுற்றறிக்கை மற்றும் கடன் பெறும் விதிகள் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே இடத்தில் அச்சிட்டால் கூட, அந்தந்த மாநிலங்களுக்குரியதை, அவரவர் தாய் மொழியில் அச்சிடலாம். இதை விடுத்து, என்ன அச்சிடப்பட்டுள்ளதோ என்று கூட புரிந்து கொள்ளாமலே கையெழுத்திடும் நிர்ப்பந்தம், பாமர உபயோகப்பாளருக்கு வரக்கூடாது.
ஆங்கில மொழி வளர்ச்சியால், பாரத கலாசாரமும் அழிந்து வருகிறது. மேலே கூறப்பட்டது போல், தாய்மொழி வளர்ச்சியடையும் போது, அந்நிய மொழியான ஆங்கிலம் தானாக விலகிக் கொள்ளும். அனைத்திலும் தாய் மொழி வருவதை, திராவிட கட்சியினர் எதிர்க்க முடியாது.மிகச் சாதாரணமான பாமர மக்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டிய, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், பிறமொழிகாரர்களாக இருப்பது, பல தவறுகள் நடக்க காரணமாக உள்ளது. சாதாரண மக்கள், தாங்கள் கூற நினைப்பதை, தாய் மொழியில் கூற முடியாமல் போகிறது.மற்ற மொழி உயர் அதிகாரிகளை, பிற மாநிலங்களில் பணி நியமனம் செய்வது பற்றியும் ஆலோசித்தல் வேண்டும்.இதையெல்லாம் மனதில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் மொழிக் கொள்கைகளை வகுக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் பாட மொழி, தாய் மொழியிலேயே அமைய வேண்டும் என்பது உறுதியாக வேண்டும். இதை அமல் செய்யும் போது, இந்தியா, அனைத்துத் துறைகளிலும் மாபெரும் வளர்ச்சியை பெறும். நம் இளைஞர்கள், தாய்மொழி கல்வி மூலம் பெரும் சாதனையாளர்களாக திகழ்வர்!
தொடர்புக்கு:மொபைல் எண்:98430 94550எஸ்.குலசேகரன்பத்திரிகையாளர், துாத்துக்குடி