குறைந்தது! 106 மாவட்டங்களில், நக்சல் தீவிரவாதம்...மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களால் சாத்தியமானது

Added : மார் 21, 2020
Share
Advertisement

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் வாழ்வாதார வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்தியதாலும், பல கோடி ரூபாய் செலவில், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியதாலும், நக்சல் தீவிரவாத நடவடிக்கைகள் வெகுவாக குறைந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பீஹார் மற்றும் ஆந்திரா ஆகிய, 10 மாநிலங்களில் உள்ள, 106 மாவட்டங்கள், நக்சல் வன்முறைகளால், கடுமை யான பாதிப்புகளை சந்தித்து வந்தன.இந்த மாவட்டங்களில், 2015 மற்றும் 2016ல், முறையே, 1,089 மற்றும் 1,048 வன்முறை சம்பவங்களை, நக்சல்கள் அரங்கேற்றினர். இவை, 2017ல், 908 ஆகவும், 2018ல், 833 ஆகவும், 2019ல், 670 ஆகவும், 2020ல், 123 ஆகவும் குறைந்துள்ளது.சாத்தியம்இதன் மூலம், நக்சல் தீவிரவாத நடவடிக்கைகள், 38 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, மத்திய உள்துறை இணை அமைச்சர், கிஷன் ரெட்டி, பார்லிமென்டில் பதில் அளிக்கையில் கூறிய தாவது:நக்சல் தீவிரவாதநடவடிக்கையை ஒடுக்குவதற்காக, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் மக்களின் உரிமைகளை உறுதி செய்வது தொடர்பாக, ஒருங்கிணைந்த பலமுனை திட்டங்கள் வகுக்கப்பட்டன.இத்திட்டங்களை, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் உதவியுடன், நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் செயல்படுத்தின. மத்திய அரசு, 2015ல் வகுத்த தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தால், இது, படிப்படியாக சாத்தியமானது.நக்சல் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், 2009ல், பாதுகாப்பு படையைச் சேர்ந்த, 317 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதிகளில், சிறிய ரகம் முதல், பெரிய ரக ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டதை அடுத்து, வீரர்களின் பலி எண்ணிக்கை, 2019ல், 52 ஆக குறைந்தது.
ஆதிக்கம்
பல்வேறு மாநிலங்களிலும், பழங்குடி இன மக்கள் வசிக்கும், வனப் பகுதிகளில், மாவோயிஸ்ட் ஊடுருவ துவங்கினர். இதை, தீவிர உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னையாக கருத, முந்தைய அரசுகள் தவறின. இதனால் அப்பகுதிகளில், மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகரித்தன. அவர்கள், அப்பகுதிகளில் தனி ஆட்சி நடத்த துவங்கினர். இதை திறம்பட எதிர்கொள்ள, அப்பகுதிகளில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை, மத்திய அரசு வகுத்தது.இதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள போலீஸ் துறையை நவீனப்படுத்த, மூன்றாண்டுகளில், 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க, மத்திய அரசு முடிவு செய்தது.இத்தொகையில், 60 சதவீதத்தை, மத்திய அரசு வழங்கியது. மீதியுள்ள, 40 சதவீதம், மாநில அரசின் பங்காக அறிவிக்கப்பட்டது.நக்சல் ஆதிக்கம் உள்ள, 10 மாநிலங்களில், 400 புதிய போலீஸ் ஸ்டேஷன்களை திறக்க, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதில், 399 போலீஸ் ஸ்டேஷன்களின் பணிகள் முடிவடைந்து விட்டன.மேலும், நக்சல் பாதிப்புள்ள மாநிலங்களில், 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 5,422 கி.மீ., துாரத்திற்கு, சாலைகளும், 126 பாலங்களும் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டன. இதில், 4,868 கி.மீ.,க்கான சாலைப் பணிகள் முடிவடைந்து விட்டன.நக்சல் ஆக்கிரமிப்பு பகுதிகளில், தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்த, முதல்கட்டமாக, 2,335 மொபைல் போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இரண்டாம் கட்டமாக, 4,072 கோபுரங்கள் அமைக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மாவோயிஸ்ட்களால், அப்பாவி மக்கள் பலியாகின்றனர். 2004ல், 466 பேரும், கடந்த ஆண்டு, 150 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர். மக்களுக்கு கல்வி அறிவு கிடைத்தால், அவர்களின் சமூக, பொருளாதார நிலை உயரும் என்பதால், மாவோயிஸ்ட்கள், பள்ளிகளை தகர்த்தனர். மக்களை தனிமைப்படுத்தும் நோக்கில், சாலைகள், தொலை தொடர்பு வசதிகள் ஆகியவையும், நக்சல்களால் அழிக்கப்பட்டன.
தீவிர கவனம்
இவற்றை எதிர்கொள்ள, மத்திய அரசு உருவாக்கிய, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு திட்டங்களின் மூலம், மக்களின் சமூக பொருளாதார நிலை உயர துவங்கியது.மக்களின் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம், நீர் ஆதாரம், நிதி நிலைமை, திறன் மேம்பாடு, அடிப்படை கட்டுமான வசதி ஆகியவற்றில், அரசு தீவிர கவனம் செலுத்தியது. இதன் மூலம், நக்சல் தீவிரவாதம் வேரூன்றிய மாவட்டங்களில், நக்சல்களின் தீவிரவாத நடவடிக்கைகள், வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X