பிரான்சில் வேகமாக பரவுகிறது, 'கொரோனா': ஒரே நாளில், 78 பேர் பலியான பரிதாபம்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 பிரான்சில் வேகமாக பரவுகிறது, 'கொரோனா': ஒரே நாளில், 78 பேர் பலியான பரிதாபம்

பாரிஸ்:ஐரோப்பிய நாடான பிரான்சில், கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. நேற்று முன்தினம் மட்டும், 78 பேர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, பிரான்சில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 450 ஆக அதிகரித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் உருவான கொரோனா வைரஸ், 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும், இந்த நோய், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள், பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், வைரஸ் பாதிப்பு குறித்து, பிரான்ஸ் சுகாதாரத் துறை அதிகாரி, ஜெரோம் சாலமன் கூறியதாவது:நாடு முழுவதும், 12 ஆயிரத்து, 612 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை, இதை விட அதிகமாகவும் இருக்கலாம். மருத்துவமனைகளில், 5,226 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 1,300 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 50 சதவீதம் பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். வயதானவர் களுக்கு மட்டும் தான், இந்த பாதிப்பு ஏற்படும் என, கூற முடியாது. இளைஞர்கள், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும், பிரான்சில், 78 பேர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை, 450 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், மக்கள் வீடுகளுக்குள் தனித்து இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப் படுத்தப்பட்டோருக்கு, 2 - 14 நாட்களில் வைரஸ் தன் வேலையை காட்ட வாய்ப்புள்ளது. கடைசி நாளில் கூட, வைரஸ் தாக்கலாம்.கொரோனா வைரஸ் தாக்கம், 5 - 8 நாட்களுக்கு மிகவும் வீரியமாக இருக்கும். ஆனாலும், 10 - 22 நாட்கள் வரை, திட்டவட்டமாக எதையும் கூறி விட முடியாது. அரசு அறிவித்துள்ள நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். வார விடுமுறையை கொண்டாடப் போவதாக கூறி, சுற்றுலா தலங்களுக்கு பயணிக்க வேண்டாம். தற் போது நகரங்களில் மட்டுமே இருக்கும் வைரஸ், புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்கும் பரவுவதற்கான அபாயத்தை ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.
சீனாவில் நேற்றும் பாதிப்பு இல்லை
கொரோனா வைரஸ் உருவான இடமான சீனாவில், தொடர்ந்து மூன்றாவது நாளாக, நேற்றும், யாருக்கும் புதிதாக இந்த தொற்று ஏற்படவில்லை. அதேநேரத்தில், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை, 3,255 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும், ஏழு பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும், 81 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில், 71 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து சீனா வந்தவர்களுக்கு மட்டுமே, புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் 45 நாள் கட்டுப்பாடு
* ஐக்கிய அரபு எமிரேட்ஸில், கொரோனா பாதிப்புக்கு இரண்டு பேர் பலியாகி உள்ளனர். 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.* துருக்கியில், நேற்று மேலும் ஐந்து பேர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகினர். இதையடுத்து, பலி எண்ணிக்கை, ஒன்பதாக அதிகரித்துள்ளது. 'அத்தியாவசியமான தேவை ஏற்பட்டால் தவிர, வெளி இடங்களுக்கு செல்ல வேண்டாம்' என, பொதுமக்களுக்கு, துருக்கி அரசு அறிவித்துள்ளது.*அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனாவுக்கு பலி யானோர் எண்ணிக்கை, மூன் றாக அதிகரித்துள்ளது. மேலும், 481 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.'பொதுமக்கள், 45 நாட்களுக்கு சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்' என, பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார் சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ், வேலையை காட்டியுள்ளது. ஒரு பெண் உட்பட, இரண்டு பேர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். மேலும், 385 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* பிரிட்டன், சிங்கப்பூர், சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள், சாமானியர் முதல் தொழில் துறையினர் வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, நிவாரண உதவி வழங்கப்படும் என, அறிவித்துள்ளன.
* ஐரோப்பாவில், ஜெர்மனி, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரிட்டனும், திரையரங்கு, மதுபார், உணவகங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டுள்ளது. 'வருவாய் பாதிப்பிற்கு ஆளான ஊழியர்களுக்கு, நிதியுதவி வழங்கப்படும்' எனவும், பிரிட்டன் அரசு உறுதி அளித்துள்ளது.*இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகள், மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என, தெரிவித்துள்ளன. இந்த உத்தரவை மதிக்காமல், வெளியில் சுற்றித் திரிந்த நான்காயிரம் பேருக்கு, பிரான்ஸ் அபராதம் விதித்துள்ளது.*லத்தீன் அமெரிக்காவில், கியூபா, பொலிவியா நாடுகள், எல்லைகளை மூடி விட்டன. கொலம்பியாவில், நாளை மறுநாள் முதல், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது ஆப்ரிக்கா, மத்திய தரைக்கடல் நாடுகளில், கொரோனா தொற்று, காலதாமதமாக வந்தாலும், இரு உயிர் பலியுடன், 900க்கும் அதிகமானோரை தாக்கி, வேகமாக பரவி வருகிறது.*கொரோனாவால், உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சர்வதேச பங்குச் சந்தைகளும் கடுமையாக சரிவை கண்டு உள்ளன. அவை, தொடர்ந்து வீழ்ச்சி காண்பதை தடுக்க, பல நாடுகளின் மத்திய வங்கிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.*கொரோனாவால், உலகமே முடங்கி வரும் நிலையில், ஒலிம்பிக் தீபத்தின் தொடரோட்டம், நாடு நாடாக நடைபெற்று வருகிறது. எனினும், ஜப்பானில், திட்டமிட்டபடி, ஜூலை, 24ம் தேதி 'ஒலிம்பிக்' போட்டி துவங்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X