வைரஸ் பரவ சீனா காரணம்: டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

Added : மார் 21, 2020
Share
Advertisement

வாஷிங்டன்:'சீனாவையும், அதன் அதிபர், ஸீ ஜின்பிங்கையும் மதிக்கிறோம். ஆனால், 'கொரோனா' வைரஸ் பரவுவதற்கு, சீனாவே காரணம்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ், முதன் முதலில், நம் அண்டை நாடான சீனாவில் இருப்பது கண்டறியப்பட்டது. அது படிப்படியாக, உலகமெங்கும் பரவியுள்ளது. 'இந்த வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவுவதற்கு, சீனாவே காரணம்' என, அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த வைரசை, 'சீன வைரஸ்' என்றே அவர் கூறி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் கூறியதாவது:சீன அதிபர், ஸீ ஜின்பிங், சீனாவை விரும்புகிறார். அமெரிக்கா மீதும், என் மீதும் அவர் மிகுந்த மதிப்பு வைத்துள்ளார். அமெரிக்காவும், சீனாவையும், ஜின்பிங்கையும் மதிக்கிறது. அவரை, சிறந்த நண்பராக நான் பார்க்கிறேன். ஆனால், துரதிருஷ்டவசமாக, கொரோனா வைரஸ் பரவுவதற்கு, சீனா காரணமாகிவிட்டது. அது கட்டுப்படுத்த முடியாமல், உலகம் முழுவதும் பரவியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, வெளியுறவு அமைச்சர், மைக் போம்பியோ கூறியதாவது:இந்த வைரஸ் பாதிப்பு, சீனாவில் இருந்து தான் துவங்கியது என்பது, அனைவருக்கும் தெரியும். ஆனால், இது குறித்த தகவல்களை, சீனா சரியான நேரத்தில் தெரிவிக்கவில்லை. பாதிப்பு துவங்கிய முதல் இரண்டு வாரங்களுக்குள், சீனாவுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தோம். விஞ்ஞானி களை அனுப்புவதாக கூறினோம். ஆனால், சீனா ஒத்துழைப்பு தரவில்லை.தற்போதும், இந்த வைரஸ் குறித்து, முழுமையாக தகவல் வெளியாகவில்லை. அந்தத் தகவல்கள் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அப்போது தான், வைரஸ் பாதிப்பை உலக நாடுகள் கட்டுப்படுத்த உதவும்.நாங்கள் சீனாவை குறை கூறவில்லை. ஆனால், தகவல் தெரிவிக்க தாமத மானதால், உலக நாடுகள் முழுவதும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, இந்த வைரஸ் நோயை அமெரிக்க ராணுவம் தான் பரப்பியதாக, சீனா, ஈரான் போன்றவை பொய் தகவல் களை பரப்பியுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
மைக் போம்பியோவின் பேச்சுக்கு, சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. 'பொய் சொல்வதை நிறுத்துங்கள்' என, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஹூவா சுன்யிங் கூறியுள்ளார்.
ஈரான் நம்பிக்கை
மேற்காசிய நாடான ஈரானில், கொரோனா தாக்குதலுக்கு மேலும், 149 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 1,433 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பாரசீக புத்தாண்டு, நேற்று முன்தினம் பிறந்தது. வைரஸ் பாதிப்பால் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.'நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, நம் கடின உழைப்பு மற்றும் ஒத்துழைப்பால், வைரஸ் கொடுமையில் இருந்து மீளுவோம்' என, அதிபர் ஹாசன் ரூபானி, வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.'இந்தப் புத்தாண்டு, நம் பொருளாதாரத்தை மேம்படுத்தும். வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னையில் இருந்து மீண்டெழுவோம்' என, தன் வாழ்த்து செய்தியில், மதத் தலைவர், அயதுல்லா அலி கொமேனி கூறியுள்ளார்.
'டுவிட்டருக்கு' கோரிக்கை
கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில், சீனா மற்றும் அமெரிக்கா இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. 'அமெரிக்க ராணுவம் தான், இந்த வைரஸை சீனாவில் பரப்பியது' என, சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியிருந்தார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், வைரஸ் பாதிப்பில், சீனா மெத்தனமாக நடந்து கொண்டதாக, அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில், 'அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பி வருவதால், சீனாவின் சீன கம்யூனிஸ்ட் கட்சி, 'டுவிட்டர்' இணையதளத்தை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது' என, அந்த நிறுவனத்துக்கு, அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த, இரண்டு, மூத்த எம்.பி.,க்கள், கடிதம் எழுதியுள்ளனர்.
ஊழியருக்கு தொற்று
அமெரிக்க அதிபரின் அரசு அலுவலகமான, வெள்ளை மாளிகையில் பணியாற்றும், துணை அதிபர், மைக் பென்ஸ் அலுவலக ஊழியர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. வெள்ளை மாளிகையில், வைரஸ் தொற்று பதிவாவது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவுக்கு பாராட்டு
கொரோனா பாதிப்பு பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, 'சார்க்' எனப்படும், தெற்காசிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுடன், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், நம் ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங்குடன், அமெரிக்க ராணுவ அமைச்சர், மார்க் எஸ்பர், தொலைபேசியில் பேசினார். அப்போது, பிரதமர் மோடியின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.
இறக்குமதி நிறுத்தத்தால் பாதிப்பு
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை செய்யும் சாதனங்கள், பாதுகாப்பு முக கவசங்கள், அறுவை சிகிச்சை கவுன்கள், சானிடைசர் எனப்படும், துாய்மை செய்யும் திரவம் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, இது போன்ற மருத்துவ சாதனங்கள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனாவில், வைரஸ் தொற்று அதிகரித்ததால், இந்த சாதனங்கள் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டன. அதனால், ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டது.
இரண்டு நகரங்கள் முடக்கம்
அமெரிக்காவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 19 ஆயிரத்து, 774 ஆகவும், உயிர்இழந்தோர் எண்ணிக்கை, 275 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், கலிபோர்னியாவைத் தொடர்ந்து, நியூயார்க் மற்றும் இல்லினாய்ஸ் நகரங்களும், முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இந்நகரங்களில் உள்ள மக்கள், வீட்டை விட்டு வெளியேற முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X