நீர் சேமிக்க உறுதி ஏற்போம்: இன்று உலக தண்ணீர் தினம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர் சேமிக்க உறுதி ஏற்போம்: இன்று உலக தண்ணீர் தினம்

Added : மார் 22, 2020
Share
பொள்ளாச்சி:'இன்று உலக தண்ணீர் தினத்தில், நீர் ஆதாரங்களில் உள்ள சிக்கல்கள், பாதுகாப்பு குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது,' என்கிறார் நீர் ஆதார வளர்ச்சி குழுமம் துணைத் தலைவர் இளங்கோவன்.நீர் ஆதார வளர்ச்சி குழுமம் துணை தலைவர் இளங்கோவன் கூறியதாவது:நீர் வள ஆதாரங்கள், மேற்பரப்பு நீர், நிலத்தடி நீர் என இரண்டு வகைப்படும். இரண்டுக்கும் ஆதாரமாக இருப்பது

பொள்ளாச்சி:'இன்று உலக தண்ணீர் தினத்தில், நீர் ஆதாரங்களில் உள்ள சிக்கல்கள், பாதுகாப்பு குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது,' என்கிறார் நீர் ஆதார வளர்ச்சி குழுமம் துணைத் தலைவர் இளங்கோவன்.

நீர் ஆதார வளர்ச்சி குழுமம் துணை தலைவர் இளங்கோவன் கூறியதாவது:நீர் வள ஆதாரங்கள், மேற்பரப்பு நீர், நிலத்தடி நீர் என இரண்டு வகைப்படும். இரண்டுக்கும் ஆதாரமாக இருப்பது மழைநீர்.நதிக்கரைகளின் அருகில் நாகரீகங்கள் தோன்றியது என்பது வரலாறு. தற்போது, அந்த நாகரீகங்களின் விளைவாக நதிகள் தோறும் குப்பை, ஆக்கிரமிப்புகள், குடிசைகள், பள்ளிகள், மின்கோபுர தடங்கள், கழிவுநீர், கட்டட கழிவு பொருட்கள், விழாக்கால சிலைகள், வீணாகும் பொருட்களை கொட்டி நீர்நிலைகளை பாழ்படுத்தி வருகிறோம்.

இன்றைய சிக்கல்கள்

பருவநிலை மாற்றத்தால், ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில வாரங்களில் கொட்டி விடுகிறது. பருவமழை பொய்ப்பதால் வறட்சி ஏற்படுகிறது. உழவர்கள் நீர் இல்லாமல் உழவுத்தொழிலை செய்ய இயலாமல் நிலங்களை விட்டு வெளியேறுகின்றனர். இதனால், நகரங்களில் குடியேறுதல் அதிகமாகுவதுடன், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்கிறது.

ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், மழைநீரை சேமிக்க அணைகள், நீர்தேக்கங்கள், கண்மாய்கள், ஏரிகள், குட்டைகள் கட்டப்பட்டது.ஆனால், ஆக்கிரமிப்பால் இன்று, 30ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. அதுவும் கூட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகளால் ஆயிரகணக்கான ஏரிகள் சிதிலமடைந்துள்ளன. இதனால், மழைநீர் சேமிக்க முடியாமல் கடலில் கலக்கிறது.

நகரங்களை ஒட்டியுள்ள ஏரிகள், குளங்களில் நீர் சேமித்தாலும் கழிவு பொருட்களை வீசுவதால், தண்ணீர் மாசுபடுகிறது. இதனால், பல்வேறு நோய்கள் உருவாகின்றன.நீர்நிலைகள் குறித்த அறிவு சார்ந்த பார்வை குறைந்து வருகிறது. ஆறுகளின் பிறப்பிடங்களான காடுகள், மலைகள், அவைகளை பாதுகாத்து வரும் வன விலங்குகள் மீது அக்கறை இல்லை.


அரசின் பங்கு

அண்டை மாநிலத்தில் இருந்து பெற வேண்டிய நீரை சட்ட ரீதியாக பெற வேண்டும். ஆண்டுதோறும் அணைகள், நீர்தேகங்களை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும்.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அப்புறப்படுத்த வேண்டும். மழைநீர் சேமிப்பு கட்டாயப்படுத்த வேண்டும். இன்று, நீர் ஆதாரங்களில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கூடுதல் கவனம் செலுத்தினால் பயனாக இருக்கும்.


மக்களின் பங்கு

வீடுகளில், இரவு உறங்க செல்லும் முன் அனைத்து குழாய்களையும், நீர் கசிவு இல்லாமல் மூட வேண்டும். கழிப்பிடத்தில் இருந்து வரும் கழிவுநீர், குளியல் அறை, சமையல் அறையில் வரும் நீரையும் ஒன்றாக கலந்து விடாமல் தனித்தனியாக வெளியேறும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.உலகை பசுமையாக்க வாய்ப்புள்ள இடங்களிலும், நேரங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து தோட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.நீர் சேமித்து வருங்கால சந்ததிகளுக்கு நீர் நிறைந்த பசுமையான உலகை கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X