பொது செய்தி

தமிழ்நாடு

கொல்லிமலை ஸ்பெஷல்:சித்தர் பூமி!

Added : மார் 22, 2020
Share
Advertisement

வடக்கே இமய மலையை போலவே, தமிழகத்தில் சித்தர் பூமியாக கருதப்படும் இடம் கொல்லி மலை. கடல் மட்டத்திலிருந்து, 4,265 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப் பாதையில், 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அழகிய மலைகள், சலசலக்கும் அருவிகள் என, இரண்டு - மூன்று நாட்களை ரம்மியமாக கழிக்க விரும்புபவர்கள், கொல்லி மலைக்கு, ஒரு 'ட்ரிப்' போய் வரலாம்.
சென்னையில் இருந்து, 367 கி.மீ., துாரம் தான். சேலம் வரை ரயிலில் சென்றால், அங்கிருந்து ஏராளமான பஸ்கள், 'டாக்சி'கள் உள்ளன.
எப்போது போகலாம்:

கடும் பனிப் பொழிவின் மீது காதல் உள்ளவர்கள், ஜனவரி மாதத்தில் செல்லலாம். மற்றவர்களுக்கு, பிப்ரவரி முதல் டிசம்பர் வரை ஏற்ற காலம். பார்க்க வேண்டிய இடங்கள்:
அறபள்ளீஸ்வரர் ஆலயம்:ஒன்றாம் நுாற்றாண்டில், வல்வில் ஓரியால் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில், திராவிட கட்டட கலையை பறை சாற்றுகிறது. சோழ தேசத்தின் மிக முக்கிய அரசரான ராஜராஜ சோழன் இங்கு அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. கோவில் திறந்திருக்கும் நேரம், காலை, 6:00 முதல் 12:00, மாலை, 4:00 முதல் இரவு, 7:00.
தாவரவியல் பூங்கா: கொல்லிமலையின் முக்கியப் பகுதியான செம்மேடு எனும் பகுதியிலிருந்து, 3 கி.மீ., தொலைவில் அமைந்திருக்கும் இந்த பூங்காவில், பல மூலிகை மரங்களும், செடிகளும் சூழ்ந்துள்ளன. இங்கு அழகிய ரோஜா தோட்டம், கம்பீரமான பார்வையாளர் மாடம், அழகிய குடில்கள் மற்றும் சிறுவர் விளையாடி மகிழ பூங்கா உள்ளது.
பார்வையாளர்கள் நேரம்:காலை, 8:00 முதல் இரவு, 8:00 வரை.'டாம்ப்கால்' மூலிகை தோட்டம்: தமிழக அரசின் இந்த தோட்டத்தில் யுனானி, சித்தா, ஆயுர்வேதா மருந்திற்கான பல வகை அரிய மூலிகைகள் வளர்க்கப்படுகின்றன. இந்த தோட்டம், வாசலுார்பட்டி செல்லும் வழியில் உள்ளது. திறந்திருக்கும் நேரம்: காலை 8:00 முதல் இரவு, 7:00 வரை. இங்கு வாங்க வேண்டிய பொருள்: சித்தரத்தை.
கொல்லிப்பாவை கோவில்: இங்கு, 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மனித உருவில் அவதரித்த கொல்லிப்பாவை, இப்பகுதி மலைத் தமிழர்களின் தெய்வமாக இருந்து வருகிறார். கொல்லிப்பாவை இங்கு சிலை வடிவில் இல்லை; கையால் வரையப்பட்ட ஓவியமாக திகழ்கிறார்.
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி: கிழக்கு தொடர்ச்சி மலையின் பெரும் பகுதி, கொல்லிமலையில் தான் உள்ளது. இங்கு அமைந்துள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, 300 அடி உயரமுள்ளது. 1,000 படிகள் இறங்கி சென்றால், இதை அடையலாம். ஆனால், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் உள்ளதா என்று கேட்டு செல்லவும்; இல்லையெனில், அதன் ஓடையில் தான் குளிக்க வேண்டும்.
வசலுார்பட்டி படகு குழாம்: இது ஒரு செயற்கை ஏரி. கொல்லி மலையின் பசுமை சூழ்ந்து, மிக ரம்மியமாக இருக்கிறது. இங்கு படகு சவாரி செய்யலாம். திறந்திருக்கும் நேரம்: காலை, 6:00 முதல் மாலை, 6:00 வரை.
சித்தர் குகைகள்: இரண்டு பேர் மட்டுமே உள்ளே செல்லக்கூடிய, பல நுாற்றாண்டுகள் பழமையான இந்த குகைகளில், பல சித்தர்கள் வாழ்ந்ததாகவும், இயற்கை மற்றும் மூலிகை வைத்தியம் செய்ததாகவும் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X