பொது செய்தி

தமிழ்நாடு

வேடிக் கை திருவிழா!

Added : மார் 22, 2020
Share
Advertisement

சொகுசான உப்பங்கழி படகு பயணம், பழங்கால கோவில் தரிசனம், 'சில்'லென்ற கடற்கரை இளைப்பாறல், வனவிலங்கு சரணாலயத்தில் சிலிர்ப்பான பயணம் என, கொல்லம் பயணத்தை இந்த வாரமும் தொடர்வோமா....? ஆழிக்கல்
கடந்த டிசம்பர் 26 , 2004 -ல் ஆசிய நாடுகளையே ஆட்டிப் படைத்த சுனாமி என்ற ஆழிப் பேரலையின் பயங்கரத்தை அதற்குள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த சுனாமி என்ற பேரழிவு அலை, வடக்கே நாதன் இல்லிலிருந்து சில கி.மீ., தள்ளி உள்ள இந்த ஆழிக்கல் மீது பெருந்தாக்குதலை நடத்தியது. இங்குள்ள முக்கிய கவர்ச்சியே கடல் தான். குறிப்பாக கடல் மீது நீண்டு, நடைபாதை இரண்டு பக்கமும் பெரும் பாறைகள் அணிவகுக்கும். இப்பாதையின் இறுதியில் நின்று பார்த்தால் அற்புதமான காட்சித் தோற்றம் கண்களை மயக்கும்.
உப்பங்கழிச் சவாரி கேரள மாநிலம் முழுவதும், எங்கு பார்த்தாலும் ஆறுகள், உப்பங்கழிகள், ஏரிகள், சோலைகள் என்று நிறைந்து கிடக்கின்றன. இதில், உப்பங்கழிகள் தனித்துவமான வாழ்க்கைப் பாணி மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவன. இதனால் கேரளாவுக்குச் சுற்றுலா செல்பவர்கள் பயணங்களில் உப்பங்கழிப் படகுப் பயணம் முதல் இடத்தைப் பிடிக்கிறது. இதில் கொல்லம் -- ஆலப்புழாவுக்கான, 9 மணி நேர சுற்றுலா உப்பங்கழிப் படகுப் பயணத்தின் போது பல ஏரிகளின் மீது சீனப்பாணி மீன்பிடி வலைகளை அலங்கரித்துக் கொண்டு தொங்குவதையும், இயற்கைக் காட்சிகளையும் கண்டு களிக்கலாம்.
குட்டம் குளங்கரா கோவில் கொல்லம் நகரில் இருந்து, 12 கி.மீ., தொலைவில், சவராவில் உள்ள இந்தக் கோவிலில், நடைபெறும் 'தாலப்பொலி மகோத்சவம்' புகழ்பெற்றது மட்டுமல்ல வித்தியாசமானதும் கூட (சற்று வேடிக்கையானது என்று கூடச் சொல்லலாம்). இத்திருவிழாவின்போது, ஆண் பக்தர்கள், பெண்களைப்போல வேடமிட்டுக் கொண்டு, ஆண்ட வனை மலர்களால் அர்ச்சிப்பர். பல தலைமுறைகளாக நடைபெறும் விழா இது.
குளத்துப்புழாதிருவனந்தபுரம் -- செங்கோட்டை மலைப்புறத்தில் அமைந்துள்ள இந்தக் குளத்துப்புழா சாஸ்தா கோவில் பிரபலமானது. இக்கோவிலில் ஏப்ரல், -மே மாதங்களில் நடை-பெறும் விஷூ மகோத்சவம் மிக முக்கியமான திருவிழா. கொல்லத்தில் இருந்து ஏராளமான பஸ் வசதி உள்ளது. தென்மலை ரயில் நிலையமும், 10 கி.மீ., துாரத்தில் உள்ளது.
குகைக் கோவில், கோட்டுக்கல்சதயமங்கலத்தில் இருந்து, 11 கி.மீ., தொலைவில் உள்ள இந்தக் கோவில், திருவனந்தபுரம் -- கோட்டயம் எம்.சி., சாலையில் அமைந்துள்ளது. குடைவரைக் கோவில் கட்டடக்கலையின் ஒரு எடுத்துக்காட்டாக இந்தக் கோவில் உள்ளது.
கொட்டாரக்கரா கொல்லத்திலிருந்து, 43 கி.மீ., தொலைவில் உள்ள கொட்டாரக்கரா கணபதி கோவிலே, இந்த ஊரின் பெயர் காரணம். உண்மையில் பார்த்தால் சிவன் கோவில் இது. இந்த கோவிலில் தனித்தனி சன்னதியில் பார்வதி, ஐயப்பன், முருகன் மற்றும் நாகராஜன் சன்னதிகள் உள்ளன. பிரபலமான 'உண்ணியப்பம்' என்ற பிரசாதம் இங்கு கிடைக்கும். இந்த உண்ணியப்பம், மென்மையும், இனிப்பும் கொண்டது.
சாஸ்தாங் கோட்டா ஏரி கொல்லத்தில் இருந்து, 29 கி.மீ., தொலைவில் இந்தப் பரந்து விரிந்த நன்னீர் ஏரி உள்ளது. இதைச்சுற்றி மூன்று பக்கங்களிலும் குன்றுகள் உள்ளன. இதுபோன்ற ஏரிகளில், இந்த ஏரியே மிகப் பெரியது. பழங்காலத்தைச் சேர்ந்த சாஸ்தா கோவில் ஒன்று இருப்பதால், அதன் பெயரிலேயே இந்த ஏரி அழைக்கப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா கோவில் ஒரு முக்கியமான புனிதத் தலம். கொல்லத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன. கேரள அரசின் பொதுப்பணித் துறை ஓய்வில்லத்தில் தங்கும் வசதி உண்டு.
செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்: இந்தச் சரணாலயம் கடந்த, 1984ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. கல்லடா பாசன அணைக்கட்டுச் சுற்றுப் பகுதியில் இது உருவாக்கப்பட்டது. கேரளத்தின் மலர் வளம் மிக்க பகுதிகளில் இந்த செந்துாருணி குறிப்பிடத் தக்க ஒன்று. யானை, புலி, கரடி, சிங்கவால் குரங்கு போன்ற வன விலங்குகளை கண்டு ரசிக்கலாம். அதிக அளவிலான காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.
தர்ம சாஸ்தா கோவில், சாஸ்தம் கோட்டா கேரளாவின் முக்கியமான கோயில்களுள் ஒன்றான இதன் வழிபாட்டுத் தெய்வம் அய்யப்பன். இக்கோயிலின் மேற்கூரை வளைவும் நெளிவுமாக வடிவமைக்கப்பட்டுள்ளதைக் கண்டு நீங்கள் வியக்கலாம். எல்லாம் காரணமாகத் தான். திருவாளர் குரங்குகளிடம் இருந்து கூரையைக் காப்பாற்ற இதுதான் வழி. இல்லை என்றால் அனுமார்கள் போடும் ஆட்டம் கொஞ்சமா... கூரையை உண்டு இல்லை என்று ஒரு கை பார்க்காமல் விடுமா? பாரம்பரிய ஓடுகள் பட்ட பாட்டிலிருந்து கற்ற பாடம் இது. ஆலும் கடவிலிருந்து, 7 கி.மீ., துாரம். கோவில் நேரம்: காலை, 4:00 முதல் 11:00 மணி வரை. மாலை, 5:00 முதல், 8:00 மணி வரை.
திருமுல்லவரம் கடற்கரை தென்னை மரங்கள் நிறைந்த இந்த அழகிய கடற்கரை, காலை நடைக்கு அற்புதமான இடம். அதிகாலையில், மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் அழகைக் கண்டு ரசிக்கலாம். குளிக்கும் வசதிகள் கொண்ட கடற்கரை இது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X