கீழடி அகழாய்வில் எலும்பு கூடு டி.என்.ஏ., பரிசோதனை செய்ய முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கீழடி அகழாய்வில் எலும்பு கூடு டி.என்.ஏ., பரிசோதனை செய்ய முடிவு

Added : மார் 22, 2020
Share
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் கிடைத்த எலும்பு கூட்டில் மரபணு சோதனைக்காக வெளியே எடுக்கும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கொந்தகையில் தனியார் நிலத்தில் இதுவரை மூன்று குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் கிடைத்த எலும்பு கூட்டில் மரபணு சோதனைக்காக வெளியே எடுக்கும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கொந்தகையில் தனியார் நிலத்தில் இதுவரை மூன்று குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. ஒரு குழியில் நான்கு முதுமக்கள் தாழி கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழியில் பண்டைய கால மக்களை வைத்து புதைக்கப்பட்டிருப்பதால் அவற்றை உயிரியல் துறை ஆய்வாளர்கள் மூலம் வெளியே எடுக்க முடிவு செய்யப்பட்டு மதுரை காமராஜ் பல்கலை., துணை வேந்தர் கிருஷ்ணன், புதுச்சேரி மத்திய பல்கலை பேராசிரியர் ராஜன், ஓய்வு பெற்ற உயிரியல் துறை பேராசிரியர் பிச்சப்பன், காமராஜ் பல்கலை உயிரியல் துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன், தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம், தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி , பாஸ்கரன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் ஒரு முதுமக்கள் தாழியில் எலும்பு கூடு கண்டறியப்பட்டுள்ளது. கால்களை நீட்டியவண்ணம் உள்ள இந்த எலும்புக் கூட்டில் இருந்து ஸ்டெம் செல்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட உள்ளன. இவற்றை மதுரை காமராஜ் பல்கலையிலும் அமெரிக்கா சிகாகோ ஆய்வகத்திலும் சோதனை செய்யப்பட உள்ளன. துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், கொந்தகையில் உயிரியல் துறை, தொல்லியல் துறையினர் இணைந்து முதுமக்கள் தாழிகளை ஆய்விற்காக வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம், கை, கால்களுடன் கூடிய எலும்பு கூடு உள்ளது. அதில் சட்டி போன்ற பானைகளும் உடன் உள்ளன. இவற்றை வெளியே எடுக்கும் முயற்சியில் உள்ளோம் ,என்றார்.

பேராசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கொந்தகை நகரம் பண்டைய காலத்தில் குடியிருப்பு நகரமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதில் பண்டைய கால மக்களை புதைக்கும் இடத்தில் ஆய்வு நடந்து வருகிறது. இதில் பெரும்பாலும் முதல் நிலை மக்களை புதைக்கும் இடமாக இருக்க வாய்ப்புள்ளது. 2ம் நிலையில் மன்னர்கள், செல்வந்தர்கள் உள்ளிட்டவர்களை வேறு இடத்தில் புதைத்து அவர்களின் எலும்புகளுடன் ஆபரணங்களையும் சேர்த்து புதைப்பது வழக்கம், இந்தமாதிரியான அமைப்பு இங்கு காணப்படவில்லை. ஆதிச்சநல்லுார் தாழிகளை விட கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என கருதப்படுகிறது. தாழிகளினுள் உள்ள எலும்புகளில் இருந்து மரபணு சோதனை நடத்தப்பட்ட பின் தான் இவற்றின் வயது உள்ளிட்டவை தெரியவரும்.,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X