காளிங்கராயன் பாசனத்தில் நிலக்கடலை அறுவடை தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காளிங்கராயன் பாசனத்தில் நிலக்கடலை அறுவடை தீவிரம்

Added : மார் 22, 2020
Share

ஈரோடு: காளிங்கராயன் பாசனப்பகுதியில் நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் பாசனப்பகுதியில், 15 ஆயிரத்து, 743 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. நடப்பாண்டில் பவானிசாகர் அணையில் இருந்து, பாசனத்துக்கு முழு அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நெல், மஞ்சள், வாழை, கரும்பு, மக்காசேளம், நிலக்கடலை, மரவள்ளி கிழங்கு, எள் மற்றும் பயறு வகை பயிர்கள் சாகுபடி அமோகமாக நடந்தது. தற்போது, மஞ்சள், மரவள்ளி கிழங்கு, நிலக்கடலை அறுவடை நடக்கிறது. காளிங்கராயன் பாசனப்பகுதியில் நடப்பாண்டில், 3,000 ஏக்கர் வரை முழுமையான பயிராகவும், ஊடுபயிராகவும் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக, கணபதிபாளையம், வேப்பமரத்துகளம், சாவடிபாளையம், கொடுமுடி போன்ற பகுதியில் அதிக அளவில் நிலக்கடலை சாகுபடி செய்து, அறுவடை பணி நடக்கிறது.
இதுபற்றி கணபதிபாளையம் விவசாயி காசியண்ணன் கூறியதாவது: மஞ்சள், மரவள்ளிக்கு ஊடுபயிராக நிலக்கடலை போடப்பட்ட இடங்களில் அறுவடை நடக்கிறது. ஏக்கருக்கு, 600 கிலோவுக்கு மேல் மகசூல் கிடைத்துள்ளது. நடப்பாண்டில் பூச்சி தாக்குதல் போன்ற பிரச்னை இல்லாததால், நல்ல மகசூல் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மக்காசோளம் விலை சரிவால் கவலை: காளிங்கராயன் பாசனப்பகுதி மற்றும் கீழ்பவானி பாசனப்பகுதியில், 2,500 ஏக்கருக்கு மேல் மக்காசோளம் சாகுபடி செய்துள்ளனர். நடப்பாண்டு படைப்புழு தாக்குதலால், மகசூல் பாதித்துள்ளது. இந்நிலையில் நன்கு விளைந்த பயிர்களை, 120 நாட்கள் வரை வைத்திருந்து அறுவடை செய்கின்றனர். விளைச்சல் குறைந்த பயிர்களை, 80 நாட்களுக்குள் அறுவடை செய்து, தீவனத்துக்கு விற்கின்றனர்.

இதுகுறித்து பஞ்சலிங்கபுரம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: மக்காசோளம் சாகுபடி செய்யும்போது, உணவுக்கும், கால்நடை தீவனம், கோழித்தீவனம் போன்றவைகளுக்காக மொத்தமாக வாங்கி செல்கின்றனர். கடந்தாண்டுகளில், கிலோ, 20 முதல், 24 ரூபாய் வரை விலை கிடைத்தது. இதனால், பல விவசாயிகள் ஆர்வத்துடன் மக்காசோளத்தை சாகுபடி செய்தனர். நடப்பாண்டில், பவானிசாகர் அணையில் தண்ணீர் இருப்பு இருந்ததால், கூடுதலாக சாகுபடி செய்தனர். சாகுபடி துவங்கிய, 30 நாளில் படைப்புழு தாக்கம், மயில், எலி மற்றும் பிற பூச்சி தாக்குதலால் மகசூல் பாதித்தது. இதனால், அறுவடைக்கு முன்பாகவே பல விவசாயிகள், மாட்டு தீவனத்துக்காக அறுவடை செய்து விட்டனர். நன்கு விளைந்த பகுதிகளில் மட்டும் தற்போது அறுவடை நடக்கிறது. ஆனால், கிலோ, 13 முதல், 15 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்வதால், லாபம் கிடைக்கவில்லை. இவ்வாறு கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X