பொது செய்தி

தமிழ்நாடு

பெலாப்பாடி மலைக்கிராமங்களுக்கு ரூ.6 கோடியில் தார்ச்சாலை அமைக்க திட்டம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

அ.பட்டணம்: பெலாப்பாடி மலைக்கிராமங்களுக்கு, 6.62 கோடி ரூபாயில், தார்ச்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
சேலம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், அருநூற்றுமலை, ஆலடிப்பட்டி ஊராட்சியில், பெலாப்பாடி மலைப்பகுதியில், பெலாப்பாடி, வாலூத்து, தாழூர் ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. அங்கு, 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள், சாலை, போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, 30 ஆண்டுக்கு மேலாக போராடி வருகின்றனர். அரசு, சாலை அமைத்துக்கொடுக்க தாமதப்படுத்தியதால், 10 ஆண்டுக்கு முன், மக்களே இணைந்து, மலையை குடைந்து, பாதை அமைத்தனர். மூன்றாண்டுக்கு முன், இந்த மலைக்கிராமங்களுக்கு, வாழப்பாடி அருகே, புழுதிக்குட்டையிலிருந்து, கம்பங்கள் அமைத்து, மின்வசதி செய்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, புழுதிக்குட்டையிலிருந்து பெலாப்பாடிக்கு, வனப்பகுதியில், 3 கி.மீ., தூரத்துக்கு மக்கள் அமைத்த பாதையை சீரமைத்து, தமிழக அரசு, வனத்துறை, திருச்சி பொறியியல் பிரிவு மூலம், 3.75 மீட்டர் அகலத்தில், 2.90 கி.மீ., தூரத்துக்கு, 1.58 கோடி ரூபாயில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தது. மேலும், 4 கி.மீ., தூரத்துக்கு, மக்கள் அமைத்துள்ள கரடு முரடான மலைப்பாதை, தார்ச்சாலையாக தரம் உயர்த்தப்படவில்லை. இதனால், சாலை போக்குவரத்து முழுமையடையாமல், வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை நீடித்தது. மலைப்பாதையிலுள்ள பட்டா நிலத்தை, இரு ஆண்டுக்கு முன், அயோத்தியாப்பட்டணம் பி.டி.ஓ.,(ஊராட்சிகள்) பெயரில், மக்கள், நிலத்தை தானமாக வழங்கி, தார்ச்சாலையாக தரம் உயர்த்தித்தர, தமிழக முதல்வர், கலெக்டர், எம்.பி., - எம்.எல்.ஏ., ஆகியோரிடம், கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில், பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 6.62 கோடி ரூபாயில், 4 கி.மீ., தூரத்துக்கு தார்ச்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து, மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். இதுகுறித்து, ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது: பெலாப்பாடி மலைக்கிராமங்களுக்கு, மின்சாரம், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 4 கி.மீ., தூரத்துக்கு தார்ச்சாலை வசதியில்லாததால் அவதிக்குள்ளாகினர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் திட்டத்தில், சாலை அமைக்க திட்டமதிப்பீடு, முன்வரைவு தயாரித்து அனுப்பியுள்ளோம். நிதி கிடைத்ததும், தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X