அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : மார் 22, 2020
Share

சிலாப் கற்களை மாற்ற வேண்டும்: கரூர்-திருச்சி சாலையில் உழவர் சந்தை உள்ளது. அந்த பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், உழவர் சந்தைக்கு வரும் வியாபாரிகள், கழிவு பொருட்களை சாக்கடை கால்வாயில் போடுகின்றனர். இதனால், சாக்கடை கால்வாயில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதை தடுக்க, சாக்கடை கால்வாய் மேல் பகுதியில், சிலாப் கற்கள் போடப்பட்டது. தற்போது, பல இடங்களில் சிலாப் கற்கள் உடைந்த நிலையில் உள்ளன.
தெரு நாய்களால் பயணிகள் அவதி: கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. தொழில் நகரான கரூருக்கு, பல்வேறு பணிகள் காரணமாக நாள்தோறும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் சுற்றி திரியும் நாய்கள், பயணிகளை விரட்டி கடிக்க செல்கின்றன. இதுகுறித்து, ரயில்வே நிலைய அதிகாரிகளிடத்தில், புகார் தெரிவித்தும் பயன் இல்லை. பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

குவிந்த குப்பை அகற்றப்படுமா? கரூர், ரத்தினம் சாலையில், பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குப்பை கொட்டி வந்தனர். தற்போது, அவை உடைந்த நிலையில் உள்ளன. குப்பையை சாலையில் கொட்டியுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், குப்பையை சேகரிக்க புதிய தொட்டிகள் வைக்க வேண்டியது அவசியம். குப்பையை நாள்தோறும், அகற்ற வேண்டும்.

சின்டெக்ஸ் தொட்டி சரி செய்யப்படுமா? கரூர் ராஜாஜி சாலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சின்டெக்ஸ் தொட்டி, பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், போர்வெல் குழாயில் தண்ணீர் வர நீண்ட நேரம் ஆகிறது. இதனால், போர்வெல் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தார்ச்சாலையை பராமரிக்கணும்! கரூர் ஜவஹர் பஜார் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன், குழாய் பராமரிப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பணிகள் நிறைவடைந்த நிலையில், மண் குவியலை சரி செய்யாமல், ஊழியர்கள் விட்டு சென்று விட்டனர். இதனால், அந்த பகுதியில் வாகனங்கள் எளிதாக, செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்கிறவர்கள், தடுமாறி கீழே விழுகின்றனர். மண் குவியலை உடனடியாக அகற்றி, சாலையை சமன்படுத்த வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X