சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

யாரும் அரசியலுக்கு வரலாம்!

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 யாரும் அரசியலுக்கு வரலாம்!

கே.எஸ்.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: திரைப்பட இயக்குனர், ஆர்.சுந்தர்ராஜன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'ரஜினி, ஒரு நடிகர். இவரால், அரசியலில் சாதிக்க முடியாது. நான், அவரை வேலை வாங்கியவன். என் முன் நின்று பேசும் தகுதி கூட, ரஜினிக்கு கிடையாது' என்பது, உட்பட, அநாகரிகமாக பல்வேறு வார்த்தைகள் பேசியுள்ளார்.ஒரு நல்ல இயக்குனர், இப்படி பேசியது வருந்தத்தக்கது.

அரசியலுக்கு, இன்னார் தான் வர வேண்டும் என, விதிமுறை கிடையாது. மக்களுக்கு நல்லது செய்ய, யார் வந்தாலும், மக்கள் வரவேற்பர்.எம்.ஜி.ஆர்., - என்.டி.ஆர்., - ஜெயலலிதா போன்றோர், சினிமாவில் நடிகர்களாக இருந்து, அரசியலுக்கு வந்தவர்கள். கருணாநிதி, சினிமா கதை, வசனகர்த்தாவாக இருந்து, அரசியலுக்கு வந்தவர்.மாணவர்கள் சங்கத் தலைவராக இருந்து, அசாம் முதல்வரானவர், பிரபுல்ல குமார் மகந்தா. அரசு அதிகாரியாக இருந்த கெஜ்ரிவால், டில்லி முதல்வராக உள்ளார்.

விருதுநகரில், சிறு வியாபாரியாக இருந்த காமராஜர், தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கினார்.விவசாயியான, இ.பி.எஸ்., இன்று, தமிழக முதல்வராக உள்ளார். பெரிய குளத்தில், டீக்கடை நடத்திய பன்னீர்செல்வம், முதல்வர் பதவி வகித்துள்ளார்.குஜராத் மாநிலம், வாத்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்ற மோடி, இன்று பிரதமர் ஆக உள்ளார். 'டிவி' நடிகை ஸ்மிருதி இரானி, மத்திய அமைச்சராக உள்ளார்.ஜனநாயக நாட்டில், மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது செய்ய நினைக்கும் எல்லாரும் அரசியலுக்கு வரலாம். ஆக, 'அரசியலுக்கு வர, என்ன தகுதி உள்ளது' என, யாரையும், யாரும் கேள்வி கேட்க முடியாது.

எதைப் பற்றியும்காங்கிரசுக்குகவலையில்லை!
ராம்.மோகன்தாஸ், காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காங்கிரஸ், தி.மு.க., இரண்டும், நெடுநாளைய கூட்டணி கட்சிகள். மத்தியில், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி, 10 ஆண்டுகள் ஆட்சி செய்தன. அப்போது, மெகா ஊழல்கள் வெளியாயின. இதனால், 2014 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது.தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியின் போது நடந்த அராஜகம், ஊழல் ஆகியவற்றால், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அக்கூட்டணி தோல்வி அடைந்தது.மத்தியிலும், மாநிலத்திலும், 10 ஆண்டுகள், இரண்டு கட்சிகளும் ஒதுக்கப்பட்டன.ஆட்சி அதிகாரம், ஊழலில் ருசி கண்ட இக்கட்சிகள், மீண்டும் ஆட்சியை பிடிக்க, பல வியூகங்களை அமைத்தும், தோல்வியையே தழுவின.ஆட்சியின் போது செய்த சாதனைகளை, அக்கட்சி தலைவர்கள் கூற முடியவில்லை. இப்போது ஆட்சியில் உள்ளோர் மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை. என்ன செய்வது என, கையை பிசைந்தவர்களுக்கு, குடியுரிமை திருத்த சட்டம் கிடைத்துள்ளது.அச்சட்டம் குறித்து, தவறான தகவல்களை பரப்பி, முஸ்லிம்களை துாண்டி விடுகின்றன. அவர்களை, சாலையில் நிற்க வைத்து, போராட்டம் நடத்தி வருகின்றன.மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுவோரை, இரும்பு கரத்தால், அடக்கியிருக்க முடியும். ஆனால் மத்திய அரசு, அந்த சட்டத்தை, முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நிதானமாக இருந்தது.மத்திய அரசின் மென்மையான போக்கால் தான், டில்லியில் கலவரம் ஏற்பட்டு, 54 உயிர்கள் பறி போயின; 200 பேர் படுகாயமடைந்தனர். பல கடைகள் உடைக்கப்பட்டன; இதனால், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.இதைப் பற்றியெல்லாம், காங்கிரஸ் மற்றும் தி.மு.க., கவலைப்படவில்லை. அக்கட்சிகளுக்கு, ஆட்சி மாற வேண்டும். மீண்டும் ஆட்சியில் அமர்ந்து, மத்திய அமைச்சர் பதவியை பிடித்து, பணம் குவிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது.தேசத்திற்கு எதிராக, போராட்டத்தில் ஈடுபடுவோர் மட்டுமின்றி, துாண்டி விடுவோரையும் சிறையில் அடைக்க வேண்டும்.

புதியவர் என்னசெய்யப் போகிறார்?

கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: தமிழக ஜமாத்துக்கள், உலாமா சபை உறுப்பினர்கள் மார்ச், 1ம் தேதியன்று ரஜினியைச் சந்தித்துள்ளனர். சி.ஏ.ஏ., - என்.பி.ஆர்., தொடர்பான தங்கள் அச்சத்தை, ரஜினியிடம் தெரிவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரையும் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச, ரஜினி உதவ வேண்டும் என, அவரிடம் கோரிக்கை வைத்தனர்; ரஜினியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.களப் பணியாற்ற கட்சித் தொண்டர்கள் இல்லா விட்டாலும், தொலைக்காட்சி விவாதங்களில் வீராவேசமாக பேச, பல வாய்ச்சொல் வீரர்கள், தமிழக, பா.ஜ.,வில் உள்ளனர்.ஆர்.எஸ்.எஸ்.,சில் இருந்து மலர்ந்த, பா.ஜ., வில், சிறுபான்மை இனத்தவரின் ஐயங்களை கேட்டறிய, விளக்கம் தர, ஆளே இல்லையா?முஸ்லிம் மத குருமார்களை, பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிமுகம் செய்து வைக்க, டில்லி, பா.ஜ., மேலிட செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் இல்லையா?வளமான வயல், நீர் வளமுள்ள கிணறு, 'மோட்டார் பம்பு செட்' ஆகியவற்றுடன் நிலத்தை ஒப்படைத்தாலும், வேலை செய்து பிழைக்க ஆர்வம் இல்லாத, விவசாயியின் மகன் போல, தமிழக, பா.ஜ., உள்ளது.ஊர் மந்தையில் உட்கார்ந்து, அரட்டை அடித்து, உழைக்காமல் காலத்தை ஓட்டும் கிராமவாசி போல், அக்கட்சி உள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவரான முருகனாவது, கட்சியை வலுப்படுத்தி, ஏற்றம் தருகிறாரா என்று பார்ப்போம்!

ஏன் பயந்துவாழ வேண்டும்?

என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா வைரஸ் வந்த பின் தான், பலருக்கு சுத்தமாக, சுகாதாரமாக வாழ வேண்டும் என்ற ஞானமே பிறந்திருக்கிறது.இப்போதெல்லாம், சாதாரணமாக தும்முகிறவனை பார்த்தாலே, 10 அடிக்கு தள்ளிச் சென்றுவிடுகின்றனர்.கோவில், சுற்றுலா தலங்கள், தியேட்டர், 'மால்' என, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.அதே நேரம், இந்த கொரோனா வைரஸ், நமக்கு சில ஞானத்தை அருளியிருக்கிறது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.சாப்பிடும் முன், கை கழுவுங்கள்; வீட்டிலும், வெளியிலும் சுகாதாரத்தை பராமரியுங்கள்; நல்ல உணவுகளை சாப்பிடுங்கள் என்று சொன்னால், யார் கேட்டனர்? இன்று, கொரோனா வந்ததும், அதை பின்பற்ற முயற்சிக்கின்றனர்.மக்களின், இந்த மனமாற்றம், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை தான் நீடிக்கும். அதன்பின், வழக்கம் போல பழைய வாழ்க்கையைத் தொடருவர். அப்புறம், வேறொரு வைரஸ் பரவும்!ஆகவே மக்களே... சுத்தம், சுகாதாரத்தை, வாழ்க்கை முறையாக பின்பற்ற வேண்டும். அப்போது தான், பயந்து பயந்து வாழ வேண்டியது இருக்காது.Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
23-மார்-202007:13:26 IST Report Abuse
venkat Iyer திரைப்பட இயக்குநர் ஆர்.சுந்தராஜ் இன்று அவரால் படம் இயக்கும் சூழ்நிலை,தொடர்ந்து மக்கள் முன் தம்மை தக்க வைத்து கொள்ளும் திறமையை இழந்து விட்டார்.ஆனால் ரஜினி அவர்கள் அப்படி இல்லை. மக்களின் மார்க்கெட் இன்றளவும் உள்ளது.இந்த தகுதியே உண்மையான தொகுதியாகும்.ஒரு காலத்தில் இயக்குநராக இருந்தேன் ஒரு படத்தில் பிச்சைக்காரன் சங்கத்திற்கு தலைவனாக நடித்தேன் என்று பிச்சைக்காரர்களின் மட்டும் ஓட்டு கேட்க தகுதி யிருக்கும் இவர் ரஜினியை பற்றி பேச தகுதி கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X