கொரோனாவை விரட்ட உறுதியேற்ற மக்கள் ஊரடங்கு! சமூகம் காக்க ஜாதி, மத, பேதமின்றி சாதித்த வரலாறு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா'வை விரட்ட உறுதியேற்ற மக்கள் ஊரடங்கு! சமூகம் காக்க ஜாதி, மத, பேதமின்றி சாதித்த வரலாறு

Updated : மார் 23, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (4)
Share
சென்னை:உலகை ஆட்டுவிக்கும், 'கொரோனா' வைரஸை விரட்ட, நேற்று நடந்த மக்கள் ஊரடங்கில், தமிழகம் புதிய வரலாறு படைத்தது. சமூகத்தையும், மக்களையும் காக்க, ஜாதி, மத, பேதமின்றி மக்கள் ஒத்துழைப்பு அளித்து, மனித உயிர்களை காக்க உறுதியேற்றனர். கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க, நேற்று ஒரு நாள், 'மக்கள் ஊரடங்கு' நடத்த, பிரதமர் மோடி அழைப்பு

சென்னை:உலகை ஆட்டுவிக்கும், 'கொரோனா' வைரஸை விரட்ட, நேற்று நடந்த மக்கள் ஊரடங்கில், தமிழகம் புதிய வரலாறு படைத்தது. சமூகத்தையும், மக்களையும் காக்க, ஜாதி, மத, பேதமின்றி மக்கள் ஒத்துழைப்பு அளித்து, மனித உயிர்களை காக்க உறுதியேற்றனர்.latest tamil newsகொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க, நேற்று ஒரு நாள், 'மக்கள் ஊரடங்கு' நடத்த, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.


பாராட்டும், நன்றியும்

பாதிப்பின் தன்மையை உணர்ந்த தமிழக மக்களும், ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். நேற்று மாலை, வீடுகளின் பால்கனி, வாயில்களில் நின்று, கைகளை தட்டியும், மணி அடித்தும், கொரோனா தடுப்பிற்காக போராடுவோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.மக்கள் ஊரடங்கு காரணமாக, நேற்று முன்தினம் வெளியூர்களில் இருந்து புறப்பட்ட ரயில்கள் மட்டும், அந்தந்த நிலையங்களை சென்றடைந்தன.


நேற்று அதிகாலை முதல், எந்த ரயில்களும், மற்ற இடங்களுக்கு புறப்பட்டு செல்லவில்லை. தேவை கருதி, புறநகர் ரயில்கள் மட்டுமே, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒன்று என்ற ரீதியில் இயக்கப்பட்டன. மிக குறைந்த பயணியரே பயனடைந்தனர்.ரயில் நிலைய பிளாட்பாரங்களில் கிரு நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தமாக வைக்கப்பட்டது. பணிமனைகள் மற்றும் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்களும் கிருமி நாசினி கலந்த நீரால் சுத்தம் செய்யப்பட்டன. மெட்ரோ ரயில் நிர்வாகமும், எந்த ரயிலையும் இயக்கவில்லை.


கனரக வாகனம் தடை

சென்னை மாநகரின் அடையாளங்களில், போக்குவரத்து நெரிசல் முக்கியமானது. சாலையோர வணிகம், மக்கள் கூட்டம், வாகன நெருக்கடி என, சென்னை நகரம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, சேலம், திருப்பூர் போன்ற மற்ற முக்கிய நகரங்களிலும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நேற்று ஊரடங்கு காரணமாக, சென்னை உள்ளிட்ட அனைத்து நகர பகுதிகளும், பேரமைதியாக காட்சியளித்தன.

அரசு மற்றும் தனியார் பஸ்கள், பணிமனைகளில் நிறுத்தப்பட்டதால், பஸ் நிலையங்கள் ஆள் நடமாட்டம் இன்றி, காலியான பஸ்கள் கூட இல்லாமல், வெறிச்சோடின. நேற்று அரசு பஸ்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் இயங்கவில்லை. சில அவசர தேவைகளுக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் பணியில் இருந்தனர்.'ஓலா, ஊபர்' நிறுவனங்களும் பெரும்பாலான வாகனங்களை இயக்கவில்லை. ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களும் இயக்கப்படவில்லை.

வெளிமாநில எல்லைகள், 'சீல்' வைக்கப்பட்டதால், கனரக வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலைகளும், சுங்கச்சாவடிகளும் வெறிச்சோடின.ஆனாலும், சுங்கச்சாவடி ஊழியர்கள் வழக்கம் போல பணியில் இருந்து, அந்த பகுதியை கடக்கும் தனியார் வாகனங்களிடம், கட்டணம் வசூலிக்க தவறவில்லை.


அவசர சிகிச்சை பிரிவுசென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று தனியார் மருத்துவமனை களில், புறநோயாளிகள் பிரிவில், அவசர சிகிச்சை தேவைப்படுவோர் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர்.குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வந்தால், அவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், கொரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அளித்து அனுப்பி வைத்தனர். அதேநேரம், ரத்த பரிசோதனை மையங்கள் பரபரப்பாக இயங்கின. தனியார் மருத்துவமனைகள் வாயிலாகவும், சிலர் தாங்களாகவும், ரத்த பரிசோதனை செய்ய குவிந்தனர்.ஆனால், டாக்டர்கள் பரிந்துரைக் காதவர்களை, பல மையங்கள் திருப்பி அனுப்பியுள்ளன.


வணிக நிறுவனங்கள் மூடல்காலையில், பால் மற்றும் நாளிதழ் விற்பனை கடைகள் திறக்கப்பட்டு, 8:00 மணிக்குள் மூடப்பட்டன. இறைச்சி கடைகளும் அதிகாலையில் திறக்கப்பட்டு, 8:00 மணியுடன் மூடப்பட்டன.சென்னை கோயம்பேடு சந்தை முதல், மாநிலத்தின் அனைத்து சந்தைகளும் மூடப்பட்டன. கேன் மற்றும் லாரி குடிநீர் வினியோகமும் நேற்று நிறுத்தப்பட்டது.வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன; ஓட்டல்கள் இயங்கவில்லை. 'ஆன்லைன்' உணவு வினியோகம் நடந்தது. ஆனால், பெரும்பாலான மக்கள் ஓட்டல்களில் உணவு வாங்கவில்லை.

கொரோனா அச்சம் காரணமாக, வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டனர்.சில முக்கிய கோவில் களில் காலை, 7:00 மணிக்கு முன் பூஜைகள் நடந்தன. அதன்பின், கோவில்கள் பூட்டப்பட்டன. அதேபோல, தேவாலயங்களில் நேற்று நடக்கவிருந்த கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.ஜைன மற்றும் சீக்கிய கோவில்களிலும் கூட்டு பிரார்த்தனை நடக்கவில்லை. மசூதிகளில் ஐந்து வேளை தொழுகைகள் வழக்கம் போல் நடந்தாலும், கூட்ட நெருக்கடி இல்லை.

மொத்தத்தில், கொரோனா என்ற கொடிய வைரஸ், கண்ணுக்கே தெரியாமல் தாண்டவமாடும் நிலையில், அதை எதிர்த்து உயிரையும், சமூகத்தையும் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, பிரதமர் மோடி, வேண்டுகோள் விடுத்த மக்கள் ஊரடங்குக்கு, அனைத்து தரப்பு மக்களும் அமைதியான பங்களிப்பு வழங்கி, கொரோனா என்ற கொடும் வைரஸை விரட்ட உறுதியேற்றனர்.


மக்கள் சேவையில் தனியே தன்னந்தனியே...!நேற்றைய ஊரடங்கின் போது, மருந்து கடையினர் சேவை மனப்பான்மையுடன், கடைகளை திறந்து வைத்திருந்தனர். மருத்துவமனை ஊழியர்கள், சுகாதார துறையினர், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி துாய்மை பணியாளர்கள், சுகாதார பிரிவினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்டோரும், மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.மேலும், மக்களின் ஊரடங்கையும், அரசுத்துறையினரின் அர்ப்பணிப்பையும், பத்திரிகை, 'டிவி' பணியாளர்கள், களத்தில் இறங்கி தொகுத்து, களப்பணியாற்றினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X