பொது செய்தி

தமிழ்நாடு

பூரண அமைதி! பிரதமரின் வேண்டுகோளுக்கு பொதுமக்கள்... கடைகள், சாலைகளில் நடமாட்டம் இல்லை

Added : மார் 22, 2020
Share
Advertisement
 பூரண அமைதி!  பிரதமரின் வேண்டுகோளுக்கு பொதுமக்கள்... கடைகள், சாலைகளில் நடமாட்டம் இல்லை

நாடு முழுவதும் பரவி வரும், 'கொரோனா' வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, 22ம் தேதி, காலை, 7:00 மணி முதல், இன்று காலை 5:00 மணி வரை, வீட்டை விட்டு வெளியே வராமல், மக்கள் ஊரடங்கை கடைப் பிடிக்க வேண்டும் என, பிரதமர் மோடி அறிவித்தார்.

இதனால், காஞ்சிபுரத்தில் அமைதி நிலவியது.தொடர்ந்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு, நேற்று அமலில் இருந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி, அமைதியாக இருந்தது.மாமல்லபுரம், காஞ்சிபுரம் கோவில்கள் என, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், ஆட்கள் இன்றி, வெறிச்சோடின. மாவட்டங்களின் அனைத்து பகுதிகளிலும், போலீசார், தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஒன்றுகூடிய பொதுமக்களால், இது சாத்தியம் ஆகியுள்ளது. காஞ்சிபுரம்காஞ்சிபுரத்தில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, மக்கள் ஊரடங்கு முழுமையாக நடைபெற்றது.

பிரதான காந்தி சாலை, பஸ் நிலையம், ரயில் நிலையங்களில், பொதுமக்கள் நடமாட்டம் இல்லை.சில இடங்களில், கறிக்கடை மற்றும் மீன்கடைகள் செயல்பட்டன. இதையறிந்த போலீசார், கடைகளை மூடும்படி அறிவுறுத்தினர்; கடைகள் மூடப்பட்டன.கார், ஆட்டோக்கள் இயக்கம் இல்லை; ஓரிரு இருசக்கர வாகனங்களை மட்டுமே, சாலைகளில் காண முடிந்தது.உத்திரமேரூர்எப்போதும் பரபரப்பாக காணப்படும், உத்திரமேரூர் பஜார் வீதியில், மெடிக்கல் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.அரசு, தனியார், மினி பஸ், ஆட்டோக்கள் இயங்காததால், பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

பெரும்பாலான வெளியூர் வாகன ஓட்டிகள் மட்டுமே, உத்திரமேரூரை கடந்து சென்றன. திருப்போரூர்திருப்போரூரில் பேரூராட்சி மீன் அங்காடி, தனியார் வணிக கடைகள் மூடப்பட்டுஇருந்தன.டீக்கடைகள், பால் விற்பனை மையம், பூ மாலை கடைகள், இறைச்சி கடைகள், மருந்தகம், அரசு மருத்துவமனை, சில பெட்ரோல் பங்க் இயங்கின.தேவாலயங்களில், நேற்று காலை, 6:30 மணிக்குள் வழிபாட்டை முடித்து, மூடினர். வழிபாடு இல்லாததால், கோவில்கள் மூடப்பட்டன.

அத்தியாவசிய பணிக்காக, காலை, 7:00 மணி வரை மட்டுமே ஆள்நடமாட்டம் இருந்தது. ஸ்ரீபெரும்புதுார்இருங்காட்டுக்கோட்டை, 'சிப்காட்' தொழிற்சாலைகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டதால், அதன் வளாகமே வெறிச்சோடியது.மூலப்பொருட்களை ஏற்றி வந்த லாரிகள், சிப்காட் சாலையோரம் அணி வகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன.சென்னை - -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை யில், ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடியும் வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வப்போது சென்ற வாகனங்களுக்கு, சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை.

செங்கல்பட்டுசென்னை கடற்கரையில் இருந்து, ஒரு மின்சார ரயில் மட்டும், செங்கல்பட்டு வரை, நேற்று இயக்கப்பட்டது. அந்த ரயிலில், சொற்ப எண்ணிக்கையிலான பயணியர் மட்டுமே வந்தனர்.இதேபோல், வண்டலுார், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், மதுராந்தகம் மேல்மருவத்துார் ஆகிய ரயில் நிலையங்களில், மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.மாமல்லபுரம்மாமல்லபுரத்தில் உள்ள, வணிக கடைகள், விடுதிகள், ஓட்டல்கள், கைவினைப் பொருட்கள் கடைகள், சிற்பக்கூடங்கள் என, அனைத்தும் மூடப்பட்டன. மக்கள், வீடுகளிலேயே இருந்தனர். கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலைய ஊழியர்கள், வழக்கம்போல், 'ஷிப்ட்' முறையில் பணியாற்றினர்.பரபரப்பான கிழக்கு கடற்கரை சாலையில், வாகன போக்குவரத்து குறைவாகவே இருந்தது.

கடற்கரைக்கோவில், அர்ச்சுனன் உள்ளிட்ட சிற்பங்கள் நிறைந்த மாமல்லபுரம், யாருமின்றி வெறிச்சோடியது.மதுராந்தகம்மதுராந்தகம் சுற்று வட்டாரப் பகுதி கிராமங்களில், வழக்கமாக, கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை, எந்த மைதானங்களிலும் நேற்று காண முடியவில்லை. விவசாயிகள், அதிகாலை நேரத்திலேயே, நீர் பாசனம் உள்ளிட்ட விவசாய பணிகளை முடித்து, வீட்டிலேயே இருந்தனர்.

வாலாஜாபாத்பரந்துார், அய்யன்பேட்டை, தென்னேரி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வாலாஜாபாத் அரசு மருத்துவமனை, வழக்கம் போல் இயங்கின. இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மட்டும் குறைவாக இருந்தன.கிராமங்களில் வாத்து இறைச்சி கடைகள், 'பங்க்'குகள் திறந்திருந்தாலும்; மக்கள் வராததால், வெறிச்சோடி காணப்பட்டன. ஆடு, மாடு மேய்ப்போர் மற்றும் விவசாய தொழிலாளர்கள், தங்கள் வேலைகளை வழக்கம் போல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X