தேர்தல் ஆணையம் தயாராகிறது

Added : மார் 22, 2020
Share
Advertisement


அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில், தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும். அதற்கான ஆயத்தங்களில், இந்திய தேர்தல் ஆணையம் இப்போதே இறங்கிவிட்டது. அது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை, அடுத்த மாதம் டில்லிக்கு அழைத்துள்ளது. எப்போது தேர்தல் நடத்தலாம்... பள்ளி தேர்வுகள் எப்போது நடக்கும்... என்ன பண்டிகைகள் வருகின்றன என்பதெல்லாம் குறித்து, தமிழக தேர்தல் அதிகாரியோடு, டில்லி அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.இந்திய தேர்தல் ஆணையத்தின் சீனியர் அதிகாரி ஒருவர், விரைவில், தமிழகத்தின் சில மாவட்டங்களில் பயணம் செய்யவிருக்கிறார். இந்த மாவட்டங்கள் மிகவும் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டவை.இதோடு, முக்கியமான ஒரு விஷயத்திலும், தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. அதாவது, வாக்காளர்களுக்கு கட்சிகள் பணம் கொடுப்பதை, எப்படி தடுப்பது என்பது தான் அது.'ஒவ்வொரு தேர்தலிலும், பண வினியோகத்தைத் தடுக்க, புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறோம். அப்படியும் பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை. 'திருடனாக பார்த்து திருந்தினால் தான், திருட்டை ஒழிக்க முடியும் போலிருக்கிறது. அதே நேரத்தில், வாக்காளர்களும் பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்' என்கிறார், ஒரு சீனியர் தேர்தல் ஆணைய அதிகாரி.ஓட்டுக்கு பணம் தரும் விவகாரத்தில், தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவும், தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. ஆனால், ஒரு பக்கம் இந்த கூட்டத்தில் பங்கேற்று, இன்னொரு பக்கம் பணத்தை வாரி இறைக்கவும், தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
சலசலப்பை ஏற்படுத்திய எம்.பி.,
மறைந்த தமிழக முதல்வர்கள் -கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையிலும், பார்லிமென்ட் வளாகத்தில், அ.தி.மு.க., மற்றும்- தி.மு.க., - எம்.பி.,க்களை ஒன்றாகவே பார்க்க முடியாது. தப்பித் தவறி, அவர்கள் ஒன்றாக நின்று சிரித்துப் பேசுவதை, பத்திரிகையாளர்கள் யாராவது பார்த்து விட்டால், 'இதையெல்லாம் எழுதி, எங்களுக்கு வேட்டு வைத்து விடாதீர்கள்' என, அவர்கள் கெஞ்சுவர். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இரண்டு கட்சி எம்.பி.,க்களும் சகஜமாக பேசி, சிரிப்பதை பார்க்க முடிகிறது. சமீபத்தில், ராஜ்யசபாவில், ரயில்வே மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது, அ.தி.மு.க., - எம்.பி., விஜிலா சத்யானந்த், தமிழகத்திற்கு தேவையான ரயில் திட்டம் குறித்து, ஒரு கோரிக்கை வைத்தார்.உடனே, தி.மு.க., - எம்.பி.,யான, ஆர்.எஸ்.பாரதி எழுந்து, 'எம்.பி.,யாக ஓய்வு பெறும் விஜிலா பேசியதை நான் ஆதரிக்கிறேன். அவர், அ.தி.மு.க., - எம்.பி.,யாக இருந்தாலும், தமிழக திட்டம் குறித்து பேசியுள்ளதால், அதை, நாம் அனைவரும் ஏற்று, ஆதரிக்க வேண்டும்' என, விஜிலாவை பாராட்டிப் பேசினார். இது, சபையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, 'என்ன இப்படி பேசுகிறீர்களே' என கேட்க, சபை சிரிப்பு, கை தட்டலால் அதிர்ந்தது.சில, தி.மு.க., - எம்.பி.,க்கள், 'என்ன அண்ணே, இப்படி பாராட்டி தள்ளிட்டீங்களே' என, பாரதியிடம் கேட்டனர். அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் சிலரோ, பாரதியின் பேச்சைக் கேட்டு ஆச்சரியப்பட்டனர். அவர்களில் சிலர், விஜிலாவை, தி.மு.க., பக்கம் இழுக்க, பாரதி இப்படி பேசினாரோ எனவும் சந்தேகப்பட்டனர்.
பேச்சால் கொல்லாதீர்கள்!
பார்லிமென்டில், எம்.பி.,க் கள் கேள்வி கேட்பர்; அதற்கு, அமைச்சர்கள் பதில் சொல்வர். ஒரு கேள்வி கேட்டால், அதற்கு துணைக் கேள்விகளையும், எம்.பி.,க்கள் கேட்கலாம். ஆனால், கேள்விகளுக்கான பதில்கள் சுருக்கமாக இருக்க வேண்டும். இன்றைய, எம்.பி.,க்கள், மேடைப் பேச்சு போன்ற நீண்ட பதில்களை விரும்புவதில்லை. ஆனால், பார்லி.,யில், பா.ஜ., அமைச்சர்களின் நீண்ட பதில்களால், எம்.பி.,க்கள் அனைவரும் வெறுப்பு அடைந்துஉள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் பற்றிய கேள்வி ஒன்றுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஹர்ஷ்வர்த்தனின் பதில் நீண்டு கொண்டே போக, 'சீக்கிரம் முடித்துக் கொள்ளுங்கள்' என, சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை செய்யும்படி ஆயிற்று.இவரைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலும், பதில் சொல்கிறேன் என ஆரம்பித்து, 80 நிமிடங்கள் பேசினார். பல, எம்.பி.,க்கள் துாங்கி விட்டனர். 'இந்த ரயில், எப்போது நிற்கும்' என, பல எம்.பி.,க்கள் வெளிப்படையாகவே கேட்ட பின் தான், கோயல் பேச்சை நிறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X