பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பாதிப்பு: அதீத பயமும், அலட்சியமும் வேண்டாம்!

Added : மார் 22, 2020
Share
Advertisement

இந்தியாவில், 'கொரோனா'வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 300ஐ தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. இப்போதும் கூட, நம்மில் பலரும், கொரோனாவை அலட்சியத்துடன் அணுகி வருகின்றனர்.
சுய சுத்தம் குறித்து, இன்னும் போதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அது இல்லாத பட்சத்தில், சீனா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட நிலை நமக்கும் வரலாம்.நம் நாட்டில், நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கிறது என, பலரும் சொல்வதைக் கேட்க முடிகிறது. உண்மையில் இந்த எண்ணிக்கையில் விழித்தாலொழிய, நம்மால் மேற்கொண்டு, கொரோனா பரவுதலைத் தடுக்க முடியாது என்பது நிதர்சனம்.எண்ணிக்கைகளை உதாசீனப்படுத்தியதால், பின்விளைவுகளைச் சந்தித்த நாடுகள் பல, நம் கண் முன்னே இருக்கின்றன. அவற்றில் முக்கிய மான நாடு கத்தார். மார்ச், 10 இரவில், 24 என்று இருந்த பாதிப்பு எண்ணிக்கை, மறுநாள், 262 ஆக உயர்ந்தது. ஒரே இரவில் எத்தனை பெரிய மாற்றம், கவனித்தீர்களா? இதில் இருந்து, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம், எண்ணிக்கை நிலையானதாக இருக்காது என்பது தான். ஆகவே, இங்கு எண்ணிக்கை, 250 தான் என்ற அலட்சியத்தை விட்டுவிட்டு, சோப்பால் அடிக்கடி கை கழுவுவது, தும்மல், இருமலின் போது, மூக்கு மற்றும் வாய் பகுதிகளை மூடிக்கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கொரோனா உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஆகவே, பீதியடையத் தேவையில்லை. இதுவரை, உலகளவில், 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட, 1 லட்சம் பேர் குணமடைந்து விட்டனர். 13 ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர். எஞ்சியோர் சிகிச்சை பெறுகின்றனர். இறப்பு சதவீதம் மிகக் குறைவு. எனவே, உயிர் பயம் வேண்டாம்.
முதல் நிலை பாதிப்பு
அதுபோல கொரோனா, மிகத் தீவிரமான பாதிப்பை, ஒருவருக்கு ஏற்படுத்துவதில்லை.பாதிக்கப்பட்டோரில், 80 சதவீதம் பேருக்கு, முதல்நிலை பாதிப்பு தான் உள்ளது. முதல்நிலை என்பது சாதாரண இருமல், தும்மல், காய்ச்சல்.இந்த பாதிப்பு உள்ளோர், மருத்துவ ஆலோசனை பெற்று, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டால், பிரச்னை நிச்சயம் சரியாகிவிடும். அப்படியல்லாமல், பொது இடங்களுக்கு செல்வது, மக்களோடு நெருங்கிப் பழகுவது, கூட்ட நெரிசலில் இருப்பது என இருந்தால், கூட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும்.கொரோனா மட்டுமல்ல; இச்சூழலில், உங்களுக்கு எந்த வகை தொற்று ஏற்பட்டாலும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்; ஆலோசனை பெறுங்கள். அவரின் அறிவுரையை அப்படியே பின்பற்றுங்கள். முக்கியமாக, பிரச்னை சரியாகும் வரை, உங்களை நீங்களே தனிமைப்படுத்துங்கள்.
ஏப்., இறுதி வரை
குழந்தைகள், வயதானவர்களோடு நெருங்கிப் பழகாதீர்கள். நோய்வாய் பட்டவர்கள் என்றில்லை. பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கைக்காக, அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்கு, பொது இடங்களில் கூடுவதைத் தவிர்த்திடுங்கள். ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், கோவில் திருவிழாக்கள், விசேஷங்கள் போன்ற அனைத்தையும் தவிர்த்திடுங்கள். உங்கள் குழந்தைகளை எப்போதும்,வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம், குழந்தைகளின் சுத்தத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். மேற்சொன்ன அனைத்தையும், ஏப்., இறுதி வரையாவது கட்டாயம் பின்பற்றுங்கள்.'வரலாற்றிலேயே முதல் முறையாக, கட்டுப் படுத்தப்படக்கூடிய நோய் தொற்றாக இந்த கொரோனா இருக்கிறது' என, உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ் கூறியதை, இங்கு அடிக்கோடிட விரும்புகிறேன்.எனவே, கொரோனா குறித்த அதீத பயமும் வேண்டாம்; அலட்சியமும் வேண்டாம்.
டாக்டர் ராமசுப்பிரமணியம் தொற்று நோயியல் நிபுணர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X