பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' ஒழிப்பு நடவடிக்கையில் தூய்மைப்பணி தீவிரம்!பஸ் ஸ்டாண்டில் களமிறங்கிய நகராட்சி

Added : மார் 23, 2020
Share
Advertisement
 'கொரோனா' ஒழிப்பு நடவடிக்கையில் தூய்மைப்பணி தீவிரம்!பஸ் ஸ்டாண்டில் களமிறங்கிய நகராட்சி

பொள்ளாச்சி:'கொரோனா' வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கு அழைப்புக்கு ஆதரவு தெரிவித்து, பொள்ளாச்சியில் கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் இயக்கம் இல்லாததாலும்; மக்கள் நடமாட்டம் இல்லாததாலும், பஸ் ஸ்டாண்டில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.பொள்ளாச்சி பகுதியில், கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சினிமா தியேட்டர்கள், மால் மூடப்பட்டன. கோவில்களிலும் வழிபாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நித்ய கால பூஜைகள் நடைபெறுகின்றன. சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டு, சரக்கு வாகனங்களும் முழு பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.பிரதமர் அறிவித்தது போன்று, சுய ஊரடங்கு அழைப்புக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர். அதில், கடைவீதி, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் வீதி பகுதியில் உள்ள நகைக்கடைகள், துணிக்கடைகள், மளிகை கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.பரபரப்பாக காணப்படும் நியூஸ்கீம் ரோடு, பஸ் ஸ்டாண்ட், கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் வாகனங்கள் இயக்கம் இல்லாமல், நிசப்தமாக காணப்பட்டது.காந்தி மார்க்கெட், பாலக்காடு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மீன் மற்றும் மட்டன் கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. அந்த கடைகளிலும் விற்பனை இரண்டு மணி நேரத்தில் முடிக்கப்பட்டு அடைக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கூட்டமாக வர வேண்டாம் என, போலீசார் அறிவுறுத்தினர். போலீஸ் ரோந்து வாகனங்களில் சென்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.குடியிருப்பு பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் அமைதியாக காணப்பட்டது.இளைஞர்கள் மைதானங்களில் எப்போதும் போன்று விளையாடுவதையும் காண முடிந்தது. மொபட்டில் டீ விற்பனையும் நடந்தது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், மக்கள் நடமாட்டம் இல்லை.மக்கள் சுய ஊரடங்கு நடவடிக்கைக்கு, நகர மக்கள் முழு ஆதரவு தெரிவித்ததுடன் மாலையில் கை தட்டியும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.நகராட்சிக்கு 'சல்யூட்'பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட், பயணிகள் கூட்டமாக வந்து செல்லும் இடமாக உள்ளது. பஸ்கள் இயக்கம், மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலில் துாய்மை பணியில், நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.சுகாதாரப் பணியாளர்கள், விடுமுறை நாளிலும் பணிக்கு வந்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்றினர். புது பஸ் ஸ்டாண்டில் துாண்கள், இருக்கைகள் மற்றும் முக்கிய இடங்களில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.மேலும், பஸ் ஸ்டாண்டில் மக்கள் அமரும் இடங்களில், பினாயில் தெளிக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர்.முகக்கவசம், கையுறை அணிந்து பாதுகாப்புடன் பணிகளை மேற்கொண்டனர். இதுபோன்று நகரப்பகுதியில், 150க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், பணியில் ஈடுபட்டனர்.சந்தை மூடல்பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் தினசரி காய்கறி சந்தை நேற்று மூடப்பட்டு இருந்தது. காய்கறிகள் விற்பனை மற்றும் வாழைத்தார் ஏலம் நடைபெறாததால் மார்க்கெட் பகுதி வெறிச்சோடியது.உழவர் சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், மக்கள் நலன் கருதி வரும், 31ம் தேதி வரை மூடப்படுவதாக, உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.கிராமங்களில் நுாதனம்!பொள்ளாச்சி, அர்த்தநாரிபாளையம் கிராமப்பகுதியில் உள்ள வீடுகளில் காலை நேரத்தில் வேப்பிலை கட்டப்பட்டது. பின், வீடுகள் முன், குடத்தில் மஞ்சள் நீர் மற்றும் வேப்பிலையுடன், கோலமிட்டு வைத்தனர். மாலையில் சூரியன் மறைந்த பின், பொங்கல் பானை அல்லது தீர்த்த குடத்தில் இருந்த மஞ்சள் நீரை வீட்டை சுற்றியும் தெளித்தனர். மக்கள் கூறுகையில், 'கிருமி நாசினியாக மஞ்சள் இருப்பதால், மஞ்சள் நீர் வீட்டை சுற்றிலும் தெளிக்கப்பட்டது. வைரஸ் கிருமி என எந்த கிருமியும் பரவக்கூடாது என, இதுபோன்று வழிபாட்டில் ஈடுபட்டோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X