பொது செய்தி

தமிழ்நாடு

சாட்டையில் நடக்குது சாகசம்

Added : மார் 23, 2020
Share
Advertisement
 சாட்டையில் நடக்குது சாகசம்

பழங்கால விளையாட்டுகள், மனித மதிநுட்பத்தை வெளிப்படுத்துவதாகவும், நுண்ணிய திறமைகளை உள்ளடக்கியதாகவும் இருந்து வருகிறது. இதற்கு பல விளையாட்டுகளை உதாரணமாக கூறலாம். இதில், பம்பர விளையாட்டு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இவ்விளையாட்டு தமிழகத்தின் தொன்மையான விளையாட்டுகளில் ஒன்று என்றாலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் பம்பர விளையாட்டு இருந்தது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.பம்பரம் பற்றிய குறிப்புகள், ராமாயணம், கந்தபுராணம் உள்ளிட்ட நூல்களில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தைப் பொறுத்த அளவில், 30 ஆண்டுக்கு முன் வரை சிறுவர்களின் பாரம்பரிய விளையாட்டாக பம்பரம் இருந்துள்ளது. தற்போது. புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே சிறுவர்களால் விளையாடப்படுகின்றன.கடந்த, 50 ஆண்டுக்கு முன் வரை பம்பரம் தயாரித்தல் ஒரு பிரதான குடிசை தொழிலாக இருந்தது. இவை கொய்யா மரக்கட்டை அல்லது கருவேலமரக் கட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன. மரக்கட்டைகளை மேல்பகுதி அகன்றும், கீழ்பகுதி குறுகியும் கூம்பு வடிவ போல செதுக்கப்படும். கூம்பு வடிவ கீழ்ப்பகுதியில் ஆணி இணைக்கப்பட்டன.மரத்தின் மேல்பகுதியில் கண்கவரும் வகைகளில் வண்ணங்கள் தீட்டப்பட்டன. பின்னர், சாட்டை அல்லது சுமார் ஒரு மீட்டர் நீளமுடைய கயிறை பயன்படுத்தி பம்பரங்கள் சுழல விடப்பட்டன. தற்போது, உலோகம் அல்லது பிளாஸ்டிக் பொருட்களால் ஆன பம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன.பம்பர விளையாட்டை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ விளையாடலாம். தரையில் வட்டமிட்டு குழுவில் உள்ள நபர்கள், ஒரே நேரத்தில் சுழற்ற வேண்டும். பின்பு, சாட்டையைப் பயன்படுத்தி பம்பரத்தை மேல் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்க முடியாதவர்கள், பம்பரங்களை வட்டத்தின் உள்ளே வைக்க வேண்டும். வெளியே உள்ளவர்கள் வட்டத்தில் இருக்கும் பம்பரத்தை தங்கள் பலத்தை பயன்படுத்தி வெளியே எடுக்க வேண்டும். பம்பரத்தை வட்டத்தினுள் விடும்போது, பம்பரம் இல்லாதவர் அந்த பம்பரத்தை பிடித்துவிட்டால், அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வந்துவிடும். சுற்றும் பம்பரம் சுழலவில்லை என்றாலும், அந்த பம்பரமும் வட்டத்துக்குள் வைக்கப்படும். வட்டத்திலுள்ள அனைத்து பம்பரங்களும் வெளியே வந்துவிட்டால், மீண்டும் ஆட்டத்தை துவக்க வேண்டும்.பம்பர விளையாட்டுகளில் பல்வேறு வகைகள் உள்ளன. குறிப்பாக, உள்ளங்கையில் பம்பரத்தை யார் அதிக நேரம் சுழல செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றி அறிவிக்கப்படும். இதேபோல, உடைத்த கட்டை விளையாட்டில் பம்பரத்தை, வட்டத்தில் இருந்து அகற்றி ஓர் எல்லைவரை கொண்டு செல்ல வேண்டும். பின் பம்பரத்தை உடைத்து விடுவது, உடைத்த கட்டை எனப்படும்.இன்று பம்பர விளையாட்டு என்பது அதிசய விளையாட்டாக போய்விட்டது. நமது மதி நுட்பத்தையும், உடல் அசைவையும் ஒருங்கிணைத்து, புத்திக்கூர்மையை வெளிப்படுத்தும் இத்தகைய விளையாட்டுக்களை சிறுவர்களுக்கு பெற்றோர் அறிமுகப்படுத்த வேண்டும். இன்று பம்பரம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த பாரம்பரிய விளையாட்டை அழியாமல் காப்பாற்ற, சில தனி மனிதர்களும், அமைப்புகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X