பொது செய்தி

தமிழ்நாடு

நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

''கடந்த, 60 ஆண்டுகளில், பல நீர்நிலைகள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டதுடன், நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டதால், நம் நாட்டின் நீர் மேலாண்மை, உலக நாடுகள் கேலி செய்யும் அளவிற்கு, மோசமாகி உள்ளது,'' என, நீர் மேலாண்மை பொறியாளர், தனுவேல்ராஜ் முத்துகாத்தன், 32, கூறினார். தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், மக்களுக்கு நன்னீர் கிடைக்க வழி செய்யவும், ஐ.நா.,வால் இன்று, 'உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்படுவது குறித்து விவரிக்கிறார், தனுவேல்ராஜ் முத்துகாத்தன்.உங்களை குறித்து?துாத்துக்குடி மாவட்டம், சின்னமநாயக்கன்பட்டி கிராமம் தான் சொந்த ஊர்.

தண்ணீரின்றி விவசாயம் பொய்த்ததால், அங்கிருந்து, சென்னைக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்தோம்.எம்.ஐ.டி., கல்லுாரியில், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, குடியுரிமை பணிக்கு தயாராகி கொண்டிருந்தபோது, என் ஊரைப் போலவே, நாட்டின் பல கிராமங்களில், தண்ணீர் பஞ்சம் இருப்பதை அறிந்தேன்.ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆகி, இதை சரி செய்ய முடியாது என உணர்ந்து, நீர் மேலாண்மை குறித்த, ஆராய்ச்சியை துவங்கினேன். தற்போது, தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தின், தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட ஆலோசனை குழு உறுப்பினராகவும் உள்ளேன்.

நம் நாட்டின் நீர் மேலாண்மை எப்படி உள்ளது?நம் நாட்டில், எந்த பகுதிகளிலுமே, சீரான மழைப்பொழிவு இருந்ததில்லை. தென் திசையில் மழை பெய்து வெள்ளம் ஆர்ப்பரித்தால், வட மாநிலங்கள் பலவற்றில், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும். இது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இன்றும் நாம், இதை காண முடிகிறது. இதை தடுக்கவே, ஆறுகளில் இருந்து செல்லும் நீரை தேக்க, ஏரி, குளங்கள், தாங்கல், ஊரணி ஆகியவற்றை வெட்டிய, நம் முன்னோர்கள் அதற்கான, நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படாமலும் பாதுகாத்தனர்.

கடந்த, 60 ஆண்டுகளில் பல நீர்நிலைகள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டதுடன், நீர்வழித் தடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டதால், நம் நாட்டின் நீர்மேலாண்மை, உலக நாடுகள் கேலி செய்யும் அளவிற்கு, மோசமாகி உள்ளது.உலக தண்ணீர் தினம் உருவாக காரணம்?பூமியில், 97.2 சதவீதம் கடல் நீரும், 2.8 சதவீதம் நன்னீரும் உள்ளது. இந்த நன்னீரின், 90 சதவீத பகுதி, அண்டார்டிகாவில் பனிப்பாறைகளாக உள்ளன.இந்த வகையில் கணக்கிட்டால், புவியில் உள்ள மொத்த நன்னீரின் அளவு, 0.28 சதவீதம் மட்டும் தான்.

இதை நம்பியே, மனிதர்கள் உட்பட, உலகம் முழுவதும், 80 லட்சம் உயிரினங்கள் வாழ்கின்றன.தேவை அதிகரிப்பு, பற்றாக்குறையால் உலகம் முழுவதும், 220 கோடி மக்களுக்கு, நன்னீர் கிடைப்பதில்லை. இதற்கு தீர்வு காண, ஐ.நா.,வால், மார்ச், 22ம் தேதி, 'உலக தண்ணீர் தினமாக' கடைப்பிடிக்கப்படுகிறது.தண்ணீர் பஞ்சத்தால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?நீரின்றி விவசாயம் பொய்ப்பதால், ஒவ்வொரு, 30 நிமிடத்திற்கும், ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்.

இரண்டு பெண்களில் ஒருவர், ஒரு குடம் தண்ணீருக்காக ஆண்டிற்கு, 123 கி.மீ., நடக்கிறார். கிராமப்புறங்களில், ஆறு பெண்களில் நான்கு பேர், ஒரு நாளைக்கு, 3 முதல், 7 கி.மீ., வரை, ஒரு குடம் தண்ணீருக்காக நடக்கின்றனர். இதை, மத்திய அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. சுதந்திரம் அடைந்தபின் உருவாக்கப்பட்ட, உள்ளாட்சி அமைப்புகளும், பொதுப் பணித்துறையும், ஆங்கிலேய அரசை விட, நீர்நிலைகள் பராமரிப்பில் மோசமாக செயல்பட்டதால், தேசிய அளவில், 80 சதவீத நீர்நிலைகள் குப்பை கூளங்களாக மாறிவிட்டன.

இதனால், குடிநீரையும், விலைக்கு வாங்கி வருகிறோம். ஒவ்வோர் ஆண்டும், 3 முதல் 12 மீட்டர் வரை, நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. தடுக்க நடவடிக்கைகள் என்ன?பொதுவாக, 10 டி.எம்.சி.,அளவு தண்ணீர் தேக்கி வைக்கும் ஒரு ஏரியில், 80 சதவீத பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டு, அதற்கான நீர்வழித்தடங்கள் சரியாக இருந்தால் கூட, 2 டி.எம்.சி., நீரை அதில், நாம் சேமிக்கலாம்.ஆனால், நீர்வழித்தடங்களே மாயமாகி இருந்தால், அந்த ஏரி எதற்கும் பயன்படாது. அப்படி தான், நம் நீர்நிலைகள் பல இன்று வறண்டுள்ளன.

கடந்த, 1957க்கு முன் வரை இருந்த, மாவட்ட, கிராம வரைபடங்களில், நீர்நிலைகளின் வழித்தடங்கள், கடல் மட்டத்தில் இருந்து, எவ்வளவு துாரத்தில் இருந்தன என்பது, குறித்த விபரங்கள் இருந்தன.அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏரி, குளங்கள் மற்றும் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்த, சமூக விரோதிகள், அவற்றிற்கான வரைபடங்களை அழித்தனர்.இது, நீர்நிலைகள் தொடர்புடைய, என் ஆய்வுகளில் தெரியவந்தது. எனவே, தண்ணீர் பஞ்சத்தை தடுக்க, நாடு முழுவதும் உள்ள, 2.53 லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள், 6 ஆயிரத்து, 614 பிளாக் பஞ்சாயத்துக்கள், 630 ஜில்லா பஞ்சாயத்துக்களில், ஒவ்வொன்றிலும் ஐவர் குழு அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு குழுவிலும், 35 வயதிற்கு கீழ் உள்ள, மூன்று வாலிபர்கள், 65 வயதுக்கு மேல் உள்ள, இரண்டு முதியவர்கள் இடம்பெற வேண்டும்.அவர்கள் வாயிலாக, நீர்நிலைகளின் போக்கு மற்றும் வரத்து கால்வாய்களை கண்டறிந்து, தெளிவாக ஆவணப்படுத்த வேண்டும்.அதன்பின், அவற்றை துார் வாரி, கால்வாய்களை சீரமைத்தால், நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகள், மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாறும்.தேசிய நீர்வழிச்சாலை எப்படி கைகொடுக்கும்?இது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு திட்டம்.

தற்போது மத்திய நதிகள் இணைப்புக் குழுவின், உயர்மட்டக் குழு உறுப்பினர், ஏ.சி.காமராஜால் வழிநடத்தி செல்லப்படுகிறது.திட்டம் வந்தால், நாட்டில் உள்ள அனைத்து நதிகளும், ஜீவநதிகளாக மாறும். இதன்படி, கங்கை துவங்கி கன்னியாகுமரி வரை, 15 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு, சமவெளி கால்வாய் வெட்டப்பட்டு, அனைத்து ஆறுகளும் இணைக்கப்படும். கால்வாயின் நடுவே, ஆறுகள் இணையும் இடத்தில், தடுப்பணைகள் கட்டப்பட்டு, விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல வழி உருவாக்கப்படும்.

இதனால், ஆறுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு, நாடு முழுவதும், ஆண்டுதோறும் உற்பத்தி செய்யும், மின்சாரத்தின் அளவு இரட்டிப்பாக்கப்படும். இத்திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X