பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமரின் 'மக்கள் ஊரடங்கு' அழைப்புக்கு மகத்தான ஆதரவு!உடுமலை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது

Added : மார் 23, 2020
Share
Advertisement
  பிரதமரின் 'மக்கள் ஊரடங்கு' அழைப்புக்கு மகத்தான ஆதரவு!உடுமலை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது

உடுமலை:'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்த 'மக்கள் ஊரடங்கு' முழுமையாக கடைபிடிக்கப்பட்டதால், உடுமலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது.'கொரோனா' வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மாநில எல்லைகள், சுற்றுலா தலங்கள் மூடல், மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு, கோவில்களுக்கு பக்தர்கள் அனுமதி ரத்து, அத்தியாவசிய தேவையான, மளிகை, காய்கறி, பால் தவிர்த்து, மற்ற கடைகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.'கொரோனா' பரவுவதை தடுக்கும் வகையில், பொதுமக்கள் நடமாட்டத்தையும், கூட்டத்தையும் கட்டுப்படுத்தும் வகையில், நேற்று ஒரு நாள், மக்கள் தாங்களாகவே, வீடுகளை விட்டு வெளியில் வராமல், இருக்கும் 'மக்கள் ஊரடங்கு'க்கு, பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று, ரயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.உடுமலை நகரில், மக்கள் ஊரடங்கு திட்டத்தை மக்கள் முழுமையாக பின்பற்றினர். பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம், அதிகாலையிலேயே மேற்கொள்ளப்பட்டு, காலை, 7:00 மணிக்கு, தயாராகினர். அதிகாலை முதலே பரபரப்பு காணப்படும், நகராட்சி சந்தை, உழவர் சந்தை மூடப்பட்டதால், மக்கள் நடமாட்டம் இல்லை. பஸ்கள் இயங்காததால், ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது.வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டதோடு, பொது போக்குவரத்தும் இல்லாததால், தளி ரோடு, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு என அனைத்து ரோடுகளும் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது. ரயில்கள் வருகை, பயணிகள் இல்லாமல், ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட்டிருந்தது.சந்தை வளாகம் பூட்டப்பட்டதால், சந்தையும், ராஜேந்திரா ரோட்டிலும், தள்ளுவண்டி கடைகள், மக்கள் நடமாட்டம் இல்லை. வீடுகளிலிருந்து, மக்கள் வெளியே வராததால், குடியிருப்பு பகுதிகளிலுள்ள ரோடுகளிலும் இதே நிலை நீடித்தது. மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் திறந்திருந்தன. உடுமலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும், பெரும்பாலும் புறநோயாளிகள் வருகை குறைந்தளவே இருந்தது.நகராட்சி சார்பில், நேற்றுமுன்தினம் இரவே, குப்பை அள்ளுதல், கிருமி நாசினி தெளித்தல் என பணிகள் நடந்ததால், சுகாதார பணியாளர்கள் கூட, நேற்று ரோடுகள், வீதிகளில் நடமாட்டம் இல்லை. பெட்ரோல் 'பங்க்' கள் திறந்திருந்தாலும், விற்பனை மந்தமாக இருந்தது. ராஜேந்திரா ரோட்டிலுள்ள இறைச்சிக்கடைகளும் நேற்று மூடப்பட்டன. புறநகர் பகுதியில் சில கடைகள் திறக்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலால் விற்பனை நிறுத்தப்பட்டது.ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிப்பிரியர்களால் நிரம்பி வழியும் ராஜேந்திரா ரோடு நேற்று வெறிச்சோடியே இருந்தது. இவ்வாறு, நகர மக்கள், சுய ஊரடங்கை முழுமையாக ஏற்று, விழிப்புணர்வு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர்.இதை ஒன்னும் பண்ண முடியல...'மக்கள் ஊரடங்கு' காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தாலும், உடுமலை நகரில், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் சட்ட விரோத மது விற்பனை அமோகமாக நடந்தது. யசோதா ராமலிங்கம் லே-அவுட், பசுபதி வீதி, எஸ்.என்.ஆர்.,லே- அவுட் பகுதியிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடை அருகிலுள்ள பார் மற்றும் திறந்த வெளியில், மது விற்பனை அமோகமாக நடந்தது.அதே போல், நாராயணன் காலனி பகுதியில், சட்ட விரோத மது விற்பனை நடந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து, மது வாங்கிச்சென்றனர். போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்; போலீசாரைக்கண்டதும் தப்பி ஓடினாலும், அவர்கள் சென்றதும், மீண்டும் விற்பனை நடந்தது. மக்கள் அடங்கினாலும், மது விற்பனை அடங்காததால், போலீசார் நொந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X