தமிழ்நாடு

மதுரையில் மக்கள் ஊரடங்கு

Added : மார் 23, 2020
Share
Advertisement
மதுரையில் மக்கள் ஊரடங்கு

மதுரை: பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று கொரோனா பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டாக்டர், செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதம் மக்கள் ஊரடங்கை மதுரைவாசிகள் முழு வெற்றி பெற செய்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த தெருக்கள், ரோடுகள் நேற்று வெறிச்சோடின.

''சர்வதேச அளவில் கொலை வெறியாட்டம் ஆடும் கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். சரியான தீர்வு இல்லாத நிலையில் தங்களை தனிமைப்படுத்துவது தான் ஒரே வழி. நம்மையும், பிறரையும் பாதுகாக்க இதை மேற்கொள்ள வேண்டும்,'' என, வலியுறுத்திய பிரதமர் மோடி, நேற்று மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார். காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். இதை இன்று அதிகாலை 5:00 மணி வரை நீட்டிக்க தமிழக அரசும் அறிவுறுத்தியது. அதை மதுரை மக்கள் மனமுவந்து வெற்றிகரமாக்கினர்.

காலை 7:00 மணிக்கு பின் வெளியில் வருவதை மக்கள் தவிர்த்தனர். அரசு, தனியார் பஸ்கள் இயங்கவில்லை. கார், டூவீலர்கள் இயங்கவில்லை. அனைத்து ரோடுகளும் வெறிச்சோடின. பரபரப்பாக காணப்படும் காளவாசல், கோரிப்பாளையம், ஆரப்பாளையம், சிம்மக்கல், பழங்காநத்தத்தில் ஆள் நடமாட்டம் இல்லை. கலெக்டர், மாநகராட்சி உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடின. வர்த்தக மையங்கள், கடைகள், சந்தைகள் நுாறு சதவீதம் மூடப்பட்டன. இதனால் மாசி வீதிகள், காமராஜர் ரோட்டில் அமைதி நிலவியது.

சிறுவர், சிறுமியரை பெற்றோர் தெருக்களில் விளையாட அனுமதிக்கவில்லை. புத்தகங்கள் படிப்பது, வீட்டிற்குள் அமர்ந்து விளையாடுவது என சிறுவர்கள் நேரத்தை செலவிட்டனர். கொரோனாவின் பாதிப்பு மற்றும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் அறிவுறுத்தினர். அனைத்து தரப்பினரின் ஏகோபத்ய வரவேற்பால் மக்கள் ஊரடங்கு முழு வெற்றி பெற்றது.

இன்னும் சில வாரங்களுக்கு கடைபிடிக்கலாமே...
மக்கள் ஊரடங்கு நிறைவு பெற்றாலும் கூட பிரதமர் மோடி அறிவுறுத்தியதை போல தேவையின்றி வெளியில் செல்வதை இன்னும் சில வாரங்களுக்கு பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

துணை இயக்குனர் பிரியாராஜ் கூறியதாவது: கொரோனா குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளதை மக்கள் ஊரடங்கு மூலம் காண முடிந்தது. இதே ஆதரவை சுகாதாரத்துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் வழங்க வேண்டும். அரசின் அன்றாட அறிவிப்புகளை தவறாது பின்பற்ற வேண்டும். வதந்திகளை நம்பக்கூடாது. தேவையின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். திட்டமிட்ட விசேஷ நிகழ்ச்சி, விழாக்களை தள்ளி வைக்கலாம். அப்போது தான் கொரோனாவின் பிடியில் இருந்து தப்ப முடியும், என்றார்.

துளிகள்:
* வெறிச்சோடிய ரோடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரிரு டூவீலர்கள் சென்றன. அவர்களை போக்குவரத்து போலீசார் நிறுத்தி மக்கள் ஊரடங்கு குறித்து 'அட்வைஸ்' செய்தனர். முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தினர்.

* கோரிப்பாளையம், ஜெயில் ரோடு, காளவாசல் சந்திப்பு, பெரியார் பஸ் ஸ்டாண்ட், தெப்பக்குளத்தில் மக்கள் ஊரடங்கு நிலவரத்தை சீரான இடைவெளியில் புகைப்படங்களுடன் உயர் அதிகாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் தெரிவித்தபடி இருந்தனர்.

* நேற்று முன் தினம் மட்டும் 300 டன் காய்கறிகள் விற்றுத் தீர்ந்த மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கட் மூடப்பட்டிருந்தது. எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. ஓரிரு மருந்தகங்கள் மட்டும் திறந்திருந்தன.

* தினமும் நாற்பதாயிரம் பயணிகள் வந்து செல்லும் ரயில்வே ஸ்டேஷன் ஆரவாரமின்றி இருந்தது. ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்கள் வெறிச்சோடின. ஆம்னி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு பஸ் கூட இயங்கவில்லை.

* கரிமேடு மீன் மார்க்கெட்டில் நேற்று காலை சில வியாபாரிகள் மீன் விற்றனர். மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறியதையடுத்து கடைகள் காலி செய்யப்பட்டன.

* நகரில் 12 அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. காலையில் பொங்கல், மதியம் சாப்பாடு வழங்கப்பட்டது.

* நேற்று முகூர்த்தநாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. மக்கள் ஊரடங்கிற்காக அவை ஒத்திவைக்கப்பட்டன. ஒலிபெருக்கி, ஆடம்பரம், ஆரவாரமின்றி ஒரிரு திருமணங்கள் நடந்தன. இவற்றில் மீதமான உணவுகளை ஆதரவற்றோருக்கு வழங்கினர்.

* கூட்டம் கூடுவதை தவிர்க்க இறுதி ஊர்வலங்கள் தள்ளிவைக்கப்பட்டன.

* பிரதமர் மோடி அழைப்பை ஏற்று கொரோனா தடுப்பில் ஈடுபடும் டாக்டர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்களுக்கு வீடு முன் நின்றும், பால்கனியில் நின்றும் கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

* திருமங்கலம், மேலுார், பேரையூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, திருப்பரங்குன்றத்தில் மக்கள் ஊரடங்கையொட்டி தெருக்கள், ரோடுகள் வெறிச்சோடின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X