லாகூர்: 'கொரோனா' வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, தினமும் அதிகரித்து வருவதையடுத்து, பாகிஸ்தான் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ், இப்போது, உலக நாடுகள் அனைத்திலும் பரவியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானிலும், கொரானோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, தினமும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை, அந்நாட்டில், 776 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில், அதிகபட்சமாக, 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில், 137 பேரும், பலுசிஸ்தானில், 103 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
'வீட்டை விட்டு வெளியே வராமல், மக்கள், தங்களை, மூன்று நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்' என, சிந்து மாகாண முதல்வர், மூரத் அலி ஷா கேட்டுக் கொண்டுள்ளார். ஈரானுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு, நாடு திரும்பியவர்களிடமிருந்து தான், கொரோனா பரவியுள்ளதாக, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதனால், இரண்டு வாரங்களுக்கு சர்வதேச விமானங்கள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் 25ம் தேதி முதல், ரயில்களின் எண்ணிக்கையை குறைக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை,நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாகிஸ்தான் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், 'டிவி' மூலம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர், இம்ரான் கான், ''மக்கள் அனைவரும் தாங்களே, 45 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ''சிகிச்சை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கு, அனைத்து விதமான வரிகளும் ரத்து செய்யப்படும்,'' என்றார். இதற்கிடையில், பாகிஸ்தானில், அனைத்து சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE