தமிழ்நாடு

'மக்கள் ஊரடங்கு' : ஆதரவளித்த மக்கள்; வெளியில் வந்தவர்களை வீட்டிற்கு அனுப்பிய போலீசார்

Added : மார் 23, 2020
Share
Advertisement

தேனி : தேனி மாவட்டத்தில் முழுமையாக நடந்த மக்கள் ஊரடங்கு நடவடிக்கையால் மாவட்டம் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

பிரதமர் மோடி, கொரோனா நோயை தடுத்து விரட்ட நாட்டு மக்கள் இணைந்து மக்கள் ஊரடங்கு மூலம் போராடுவும் நாட்டு மக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனால் நேற்று நாடு முழுவதும் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலானது. காலை முதலே மக்கள் வீட்டிற்குள் முடங்கினர். பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, கம்பம் ரோடு உள்ளிட்ட மெயின்ரோடுகளில் எந்த வாகனங்களும் செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு தனியார் பஸ்கள், ஆட்டோ, கார்கள், வேன்கள் என எதுவும் இயங்கவில்லை.

பொது மக்கள் அவசர தேவைக்கு மட்டுமே டூவீலர்களில் சென்றனர். சிறிய பெட்டிகடைகள் முதல் டீ கடை, ஓட்டல்கள், ரோட்டோரோ வியாபாரிகள் அனைவரும் ஊரடங்கில் பங்கேற்று கடைகளை மூடினர்.

எஸ்.பி., ஆய்வு: தேனி நேருசிலை சிக்னல், பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், அரண்மனைப்புதுார் விலக்கு, பெரியகுளம் ரோடு, அன்னஞ்சி விலக்கு, பழனிச்செட்டிபட்டி பூதிப்புரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார், தேனி, அல்லிநகரம், பழனிச்செட்டிபட்டி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., ரோந்து சென்று, ஆங்காங்கு உள்ள போலீசாரிடம், அவசர கால தேவையின்றி எந்தவித காரணங்களும் இன்றி டூவீலர்கள், கார்களில் வருபவர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்புங்கள் என போலீசாருக்கு அறிவுறுத்தினர். அதன் படி போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

--------வேலைக்கு செல்லாத தோட்ட தொழிலாளர்கள்

கம்பம்: கம்பம் பகுதியில் மக்கள் ஊரடங்கு முழுமையாக நடந்தது. ஏலத்தோட்டங்களுக்கு தங்களின் டூவீலர்களில் செல்ல முயன்ற ஏல விவசாயிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. எப்போதும் கலகலப்பாக திகழும் கம்பம் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரதமர் விடுத்த வேண்டுகோளை ஏற்று நேற்று காலை கம்பத்தில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மெயின்ரோடு, வேலப்பர் கோயில் வீதி, காந்திஜி வீதி,கம்பமெட்டு ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் வீதிகள்வெறிச்சோடியது. நுாற்றுக்கணக்கான பலசரக்கு, ஜவுளி, பர்னிச்சர், காய்கறி,பாத்திரம் மற்றும் நகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வேலப்பர் கோயில் வீதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. உழவர் சந்தை வீதியில் அதிகாலை 5:00 மணிமுதல் மக்கள் கூட்டம் இருக்கும்.

நேற்று உழவர் சந்தை மூடப்பட்டதால் அப்பகுதியும் வெறிச்சோடியது. இருமாநில எல்லையோர கம்பமெட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கம்பமெட்டில் உள்ளே நுழையமுடியாதபடி தடுப்பு கம்புகள் கீழே இறக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கேரள எல்லையில் அவர்கள் தடுப்பு கம்புகளை இறக்கி கட்டவில்லை. வாகனங்களை அனுமதிக்க தயாராக இருந்தனர். ஆனால் கம்பம் பகுதியிலிருந்து டூவீலர்களில் ஏலத்தோட்டங்களுக்கு சென்ற ஏல விவசாயிகளை, தமிழக போலீசார் அனுமதிக்கவில்லை. ஏற்கெனவே தோட்ட தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து வேலைக்கு செல்வதை தவிர்த்து விட்டதால், போலீசாருக்கு பிரச்னை இல்லை.

ஆண்டிபட்டி:-ஆண்டிபட்டியில் ஊரடங்கு வெற்றிகரமாக நடந்தது. காலை முதல் பொதுமக்கள் யாரும் வீட்டை வீட்டு வெளியேறவில்லை. அன்றாடம் பொதுமக்கள் கூடும் பல இடங்களும் யாரும் இன்றி வெறிச்சோடி கிடந்தது. ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் திறக்கப்படவில்லை. கடை வீதி, உழவர்சந்தை, காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் பலவும் பூட்டப்பட்டது. வாரச்சந்தையில் செயல்பட்ட மீன்கடை, கறிக்கோழி கடைகள் போலீசார் எச்சரிக்கைக்குப்பின் மூடப்பட்டது. ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு புறநோயாளிகள் பிரிவுக்கு யாரும் வராததால் மருத்துவமனை வளாகம் வெறிச்சோடி கிடந்தது.

எந்நேரமும் வாகனங்கள் சென்று வரும் தேசிய நெடுஞ்சாலை வைகை ரோடு சந்திப்பு ஆட்கள், வாகனங்கள் இன்றி அமைதியாக இருந்தது. சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் கைத்தறி, விசைத்தறி நெசவுகூடங்கள் மூடப்பட்டிருந்தன.

மத்திய அரசு கொரானா ஒழிப்பு நடவடிக்கையில் அனைத்து பொதுமக்களும் தங்களின் முழு ஆதரவை காட்டினர்.------

உத்தமபாளையம் : உத்தமபாளையம் பைபாஸ், மெயின்ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் நடமாட்டம் முழுமையாக இல்லை. ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை. வீதிகளில் அமர்ந்திருவர்களை போலீசார் வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தினர். பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஊரடங்கை கடைபிடித்தனர்.

கிராமங்களில் நடந்த ஊரடங்கு

கம்பம் பள்ளத்தாக்கில் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோகிலாபுரம், ஆமைலையன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி,. குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடை அடைப்பு முழு அளவில் இருந்தது. மக்கள் நடமாட்டம் முழுமையாக இல்லை. வழக்கமாக கிராமங்களில் அதிகாலையில் டீக்கடைகளில் கூட்டம் காணப்படும்., நேற்று அதிகாலை முதல் கடைகளும் திறக்கப்படவில்லை.

மக்களும் வெளியேவரவில்லை. கிராமங்களில் திறக்க முற்பட்ட ஒருசில இறைச்சி கடைகளும், சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று, அடைக்கப்பட்டது. அணைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி திராட்சை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள், வேலைக்கு போகாமல், வீட்டில் இருந்தனர்.

பாரம்பரிய முறை:

தேவாரம் பகுதியில் 'கொரோனா' தொற்று பரவாமல் தடுக்க, 14 மணி நேரம் மக்கள் ஊரடங்கு பங்கேற்றனர். பிரதமரின் வேண்டுகோள் விடுத்து பேசியது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வர்த்தக சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரத் தால் சுய கட்டுப்பாட்டுடன் மக்கள் வீட்டில் முடங்கினார்கள்.

பாரம்பரிய முறை கிராமங்களில் கோயில் திருவிழா காப்பு கட்டினால் மேற்கொள்ளப்படும் சுய கட்டுப்பாடுகள் நேற்று கடை பிடிக்கப்பட்டன. பாரம்பரிய முறையில் வீட்டின் முன்புறம் மாவிலை, வேப்பிலை கட்டி வாசலில் மஞ்சள் நீர் தெளித்தனர்.

ஆட்கள் நடமாட்டமில்லாமல் தெருக்கள் வெறிச்சோடின. சில கிராமங்களில் ஆட்டு கறிக்கடைகளில் கூட்டம் களை கட்டியது. குறிப்பாக சங்கராபுரம், டி.சிந்தலைச்சேரியில் ஆட்டு இறைச்சி, மீன் விற்பனை நடந்தது. அந்த கடைகளும் காலை 8:00 மணிக்கு அடைக்கப்பட்டன. விடுமுறைஇன்று நடைபெறவுள்ள வாரச்சந்தை மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்படவதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வீடுகளில் பிரார்த்தனை:

போடி: போடியில் பஸ்கள் இயக்கப்படாததால் பஸ்ஸ்டாண்ட் பயணிகள் இன்றியும், ஆட்டோக்கள் இயங்காமலும், மெயின் ரோடு, தெருக்களில் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்ததால் மெயின் ரோடு முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன. வெயிலின் தாக்கத்தை கூட பொருட்படுத்தாமல் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டதோடு, வாகன ரோந்துகளில் சென்றனர். சுகாதார பணிகளில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டும் திறந்திருந்தன. அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை குறைந்த நிலையில் டாக்டர்கள், நர்ஸ்சுகள், பணியாளர்கள் தங்களது பணியில் ஈடுபட்டிருந்தனர். மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தனர். பலர் வீடுகளில் 'கொரோனா' விலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அம்மா உணவகத்தில் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு:

பெரியகுளம்: கொரோனாவிற்கான ஊரடங்கு, மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது. மூன்றாந்தல், பஜார்வீதி, எம்.ஜி.ஆர்., ரோடு, தண்டுப்பாலம், கம்பம்ரோடு, மார்க்கெட் உட்பட தென்கரைபகுதிகளிலும், வடகரை அரண்மனைத்தெரு, வி.ஆர்.பி., நாயுடு தெரு உட்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டது. பஸ்ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல், வடுகபட்டி, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, லட்சுமிபுரம் உட்பட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. வீடுகளிலிலே மக்கள் இருந்தனர். தென்கரை, வடகரை பகுதியில் பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி மக்கள் நோயின்றி ஐஸ்வர்யமாய் வாழவேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.பொதுவாக கடையடைப்பு காலங்களில், டீ கேன்களில் ஆங்காங்கே 'தம்' டீ விற்பனை நடக்கும்.

ஆனால் நேற்று ஒட்டுமொத்தம் விற்பனையும் தடை செய்யப்பட்டிருந்தது. தென்கரை இன்ஸ்பெக்டர் ஜோதிபாபு தலைமையில் போலீசார் ரோட்டில் சுற்றித்திரிந்த ஒருசிலருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.இறைச்சி பறிமுதல்: தென்கரை சுதந்திரவீதியில் 5 கடைகளில் 20 கிலோ ஆட்டிறைச்சி, 10 கிலோ மீன்கள், வடகரை பகுதியில் 25 கிலோ மாட்டிறைச்சிகளை, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அசன்முகமது, அலெக்ஸாண்டர் ஆகியோரது மேற்பார்வையில் பறிமுதல் செய்யப்பட்டு, புதைக்கப்பட்டது.

வருஷநாடு: கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டது. ரோட்டில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.'சைரன்' ஒலித்து நன்றி தெரிவிப்பு:

போலீசார் மாலை 5:00 மணி முதல் 05:05 மணி வரை அவரவர் தங்கள் கைகளை தட்டி, கொரோனா வைரஸ் நோய் தொற்று எதிர்ப்புப் பணியில் உள்ள டாக்டர்கள், பொது சுகாதார பணியாளர்கள், ஊழியர்கள், போலீசார், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தேனி எஸ்.பி., உத்தரவில், சைரன் பொறுத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களில் அதே நேரத்தில் ஐந்து நிமிடம் கைதட்டல் ஒலி ஒருமித்த குரலாக ஒலித்தது.5 நிமிடம் கை தட்டிய மக்கள்:

பெரியகுளம்: வைரஸ் நோய்க்கு எதிராக போராடும் மருத்துவ பணியினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று, பெரியகுளம் தென்கரை, வடகரைமற்றும் கிராமப்பகுதிகளில் பொதுமக்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறு நேற்று மாலை5 முதல் 7 நிமிடம் வரை கைதட்டி பாராட்டினர்.இந்தச் செயல் அனைவரது ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X