தமிழ்நாடு

மக்கள் ஊரடங்கு எதிரொலி; திண்டுக்கல் மாவட்டம் 'வெறிச்'

Added : மார் 23, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' கடைப்பிடித்ததையொட்டி, நேற்று திண்டுக்கல் மாவட்டம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா வைரஸை விரட்ட, நேற்று (மார்ச் 22) நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' நடத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, நேற்று திண்டுக்கல்லில் காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை வரை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. காலை 7:00 மணிக்கு முன்பாக, நகர் மற்றும் புறநகர் பகுதியில் சில இறைச்சிக் கடைகள், டீக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் கூடினர். போலீசார் எச்சரித்ததையடுத்து, கடைகள் மூடப்பட்டன.

திண்டுக்கல் வெறிச்:

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதியிலும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள், ஆட்டோ, வாடகை கார்கள் எதுவும் ஓடவில்லை. முக்கிய வீதிகள், பஜார்களில் உள்ள வணிக வளாங்கள் மூடப்பட்டிருந்தன. கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் எதுவும் நடத்தப்படவில்லை. 'பைக்' களில் சென்ற இளைஞர்களை நிறுத்தி, தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

திண்டுக்கல் மாவட்ட மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு முழு ஆதரவு அளித்தனர். இதனால் மக்கள் நடமாட்டமின்றி திண்டுக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. மாலையில் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தும், மாடியில் நின்றப்படி மருத்துவர்கள், நர்ஸ்கள், போலீஸ், பஸ், ரயில் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், கொரோனா பரவாமல் இருக்க கோ..கோ.. கொரோனா என்று கைகளை தட்டினர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட், காய்கறி மார்க்கெட், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஓட்டல்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்களான பால் உள்ளிட்டவற்றை காலை 7:00 மணிக்கு முன்பு மக்கள் வாங்கி விட்டு வீடுகளில் முடங்கினர்.கன்னிவாடி: ஓட்டல், டீக்கடைகள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடியிருந்தன. அவசர அலுவலுக்கான வாகனங்களை அனுமதித்த போலீசார், சரக்கு வாகனங்கள், கார்களின் போக்குவரத்தை நிறுத்தி வைத்தனர். டூவீலரில் வந்தவர்களுக்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுரை வழங்கினர்.சின்னாளபட்டி:வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. அதிக போக்குவரத்துள்ள பூஞ்சோலை, காமராஜர் சாலை, மேல்நிலைப்பள்ளி ரோடு உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.

* கொடைரோடு:கொடைரோட்டில் மெயின்ரோடு, ரயில்வே ஸ்டேஷன், அம்மையநாயக்கனுார் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. ரோட்டோர பழக்கடைகள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடிக்கிடந்தன. சில வெளியூர் சுற்றுலா வாகனங்களில் வந்த வெளியூர் நபர்கள், உணவு மட்டுமின்றி பழங்களும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். வடமதுரை: வடமதுரை, அய்யலுார், எரியோடு மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்கள் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

மக்களின் அவசர தேவைகளுக்காக ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவளிக்கும் வகையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

நிலக்கோட்டை: பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட், மெயின் பஜாரில் கடைகள் மூடப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெளியே வந்தவர்களை வீட்டிற்குள் செல்ல போலீசார் அறிவுறுத்தினர். வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, விருவீடு பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.மாலை 5:00 மணிக்கு நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் கைகளைத் தட்டினர்.

கொடைக்கானல்: 'மக்கள் ஊரடங்கு' கடைப்பிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். பால் நிலையம், மருந்தகம் செயல்பட்டன. பஸ், கார், ஆட்டோக்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடின. பிஸியாக இருக்கும் அண்ணா சாலை, பஸ் ஸ்டாண்ட் பகுதிகள் ஆட்கள் இன்றி காணப்பட்டது. மக்கள் சேவையில் ஈடுபட்ட போலீசார், சுகாதாரத்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் உணவளித்தனர்.

பழநி: பழநி மலைக்கோயில், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டன. டூரிஸ்ட் வாகனங்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஊரடங்கு உத்தரவால் கோயில், சாலைகள் வெறிச்சோடியது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X