பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு: முன்கூட்டியே திருமணம் செய்த மணமக்கள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

அரூர்: அரூர் அருகே, 'மக்கள் ஊரடங்கு' அறிவிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே, மணமக்கள் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஆண்டிப்பட்டி புதூரை சேர்ந்தவர் ஜெயராமன், 29; பையர்நாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணு பிரியா, 25; இருவருக்கும் நேற்று காலை, 7:30 மணிக்கு, மணமகன் இல்லத்தில், திருமணம் நடப்பதாக, அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 'மக்கள் ஊரடங்கு' அறிவிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே, மணமக்கள் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஜெயராமனின் தாய்மாமன் சிவகுமார், 40, கூறியதாவது: கொரோனா பாதிப்பை தடுக்க, பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளின் படி, நாடு முழுவதும், சோதனை முயற்சியாக, நேற்று காலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஜெயராமன், விஷ்ணுபிரியாவின் திருமணம் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக அதாவது, ஊரடங்கு உத்தரவு துவங்குவதற்கு முன், காலை, 6:30 மணிக்குள் நடத்தி முடிக்கப்பட்டது. இதில், மணமகன் மற்றும் மணமகளின் முக்கிய உறவினர்கள், 30 பேர் வரை மட்டுமே பங்கேற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

எட்டு பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம்: கிருஷ்ணகிரி சின்னமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று பெங்களூருவை சேர்ந்த சரத் என்பவருக்கும், கிருஷ்ணகிரி மனியாண்டள்ளியை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. மக்கள் ஊரடங்கு காரணமாக, உறவினர்கள் யாரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை. மணமக்களின் பெற்றோர் உள்ளிட்ட எட்டு பேர் மட்டுமே பங்கேற்றனர். ஏற்கனவே திட்டமிட்டதால், திருமணத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக, அவர்கள் தெரிவித்தனர். திருமணம் முடிந்தவுடன், மணமக்களுக்கு, 50க்கும் மேற்பட்ட உறவினர்கள், தனித்தனியாக வந்து வாழ்த்து தெரிவித்து, கலைந்து சென்றனர். சுய ஊரடங்கிற்கு மத்தியில், நேற்று நடந்த திருமண நிகழ்ச்சி, வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது என, மணமக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X