தமிழ்நாடு

'ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கும்'

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஈரோடு: ''மக்கள் ஊரடங்கு முடிந்தவுடன், ஈரோடு மாவட்டத்தில், வழக்கம்போல் பஸ்கள் இயங்கும். கடைகள் திறந்திருக்கும். மக்கள் இயல்பு நிலையில் செயல்படலாம்,'' என்று, கலெக்டர் கதிரவன் கூறினார்.
ஈரோட்டில், கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை மசூதிகளில் தங்கி, மத பிரசாரத்தில் ஈடுபட்ட, தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஐந்து பேரில், இருவருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டது. மத பிரசாரத்துக்கு வந்த அவர்கள், பல்வேறு மசூதிகளுக்கு சென்றுள்ளனர். இதனால் கொரோனா தொற்று பரவியிருக்க கூடும் என்று, சுகாதார துறையினர் கருதுகின்றனர். எனவே மாவட்டத்தில் சளி, காய்ச்சல், இருமல், தும்மல் அறிகுறிகளுடன் இருப்பவர்களை கண்டறிந்து பரிசோதிக்க, சுகாதார துறையினர் திட்டமிட்டு உள்ளனர். இதேபோல், பவானி, மைலம்பாடி கிராமத்தில், கே.எஸ். யார்ன் நிறுவனத்தில், வெளி மாநிலத்தை சேர்ந்த இருவருக்கு, காய்ச்சல் இருந்தது நேற்று தெரிந்தது. கே.எஸ். யார்ன் உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்ததால், அவர்களும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் கலெக்டர் கதிரவன், தமிழக அரசின் தலைமை செயலாளருடன் வீடியோ கான்பிரன்சிங்கில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, ஈரோடு மாவட்டத்தின் நிலைமை குறித்து நேற்று விளக்கமளித்தார்.

பின்னர் கலெக்டர் கதிரவன் கூறியதாவது: மக்கள் ஊரடங்கு நாளை (இன்று) காலை, 5:00 மணி வரை உள்ளது. அதன்பின் வழக்கம் போல் பஸ்கள் இயங்கும். கடைகள் திறந்திருக்கும். மக்கள் இயல்பு நிலையில் செயல்படலாம். நாளை (இன்று) தமிழக அரசின் தலைமை செயலாளர், முதல்வருடன் இதுபற்றி விவாதிப்பார். அதன்பின் அரசின் முடிவை தலைமை செயலாளர் அறிவிப்பார். அதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிநாடு, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களின் உறவினர்கள், சுற்றுலா பயணிகள் வந்தால் உடனடியாக தாசில்தார், பி.டி.ஓ., சுகாதார துறைக்கு தகவல் தர வேண்டும். தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடு, வெளி மாநில தொழிலாளர்களை தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தக் கூடாது. மீறி அமர்த்தும் ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட காவல் துறை வெளியிட்ட அறிக்கை: கொரோனா பாதித்த நாட்டில் உள்ள, 75 மாவட்டங்களில், அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்க மத்திய சுகாதார துறை அனுமதித்துள்ளது. ஆனால், தமிழக அரசு இதுபற்றி ஏதும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்திய அரசின் பரிந்துரை, மாநில அரசின் முடிவில் உள்ளது. வழக்கம் போல் நாளை அனைத்து கடைகளும் செயல்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவேரி பாலங்கள் மூடல்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வரும், 31 வரை முடக்கிவைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்ட எல்லையான குமாரபாளையத்தில் இருந்து, ஈரோடு செல்லும் பழைய காவேரி பாலம், காவேரி நகர் பாலம் மற்றும் சேலம் - கோவை புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலை ஆகிய பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பவானியில் இருந்து, யாரும் குமாரபாளையம் வரவோ, குமாரபாளையத்தில் இருந்து யாரும் பவானி செல்லவோ முடியாது. மேட்டூரிலிருந்து, பவானி நெடுஞ்சாலை, கொளத்தூர் அடுத்த கண்ணாமூச்சி, சென்னம்பட்டி வழியாக, ஈரோடு மாவட்டத்துக்கு செல்ல முடியும். நேற்று மாலை, மேட்டூர் அடுத்த, நான்கு ரோடு ரவுண்டானா அருகே, போலீசார், பவானி நெடுஞ்சாலைக்கு, 'பேரிகார்டு' மூலம் தடுப்பு ஏற்படுத்தி, சரக்கு வாகனங்கள், பயணியர் வாகனங்கள் நுழைய தடை விதித்தனர். கண்ணாமூச்சி, சென்னம்பட்டி சாலைகளிலும், தடுப்புகள் அமைத்து, ஈரோடு மாவட்டத்துக்கு வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X