கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் ஊரடங்கு: நாமக்கல்லில் சாலை, பஸ் ஸ்டாண்ட வெறிச்| Dinamalar

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 'மக்கள் ஊரடங்கு': நாமக்கல்லில் சாலை, பஸ் ஸ்டாண்ட 'வெறிச்'

Added : மார் 23, 2020
Share

நாமக்கல்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட, 'மக்கள் ஊரடங்கு' நாமக்கல் மாவட்டத்தில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள், விடுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், தர்க்காக்கள் ஆகியவற்றில் பக்தர்கள், பொதுமக்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, தமிழக முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதேபோல், கால்நடை சந்தைகள், வாரச்சந்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும், நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்டத்தில், பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் பயணிகள், பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல், நகரில் மக்கள் நடமாட்டம் இன்றி, அனைத்து சாலைகளும் வெறுமையாக காட்சி அளித்தன. மளிகை, ஓட்டல், பேக்கரி, டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஜவுளி கடைகள், நகை கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் பூட்டப்பட்டிருந்தன. மத்திய, மாநில அரசின் வேண்டு கோளை ஏற்று, மக்கள் அனைவரும் குடும்பத்துடன் வீட்டில் முடங்கினர். மருத்துவமனைகள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்தன. அதேபோல், அம்மா உணவகம் திறக்கப்பட்டு, காலை, மதியம், டிபன், வெரைட்டி சாதம் விற்பனை செய்யப்பட்டது. ஆங்காங்கே, ஒரு சில டீக்கடைகள், பேக்கரி, ஓட்டல்கள் மட்டுமே திறந்திருந்தன. அவற்றையும், போலீசார் சென்று மூட வைத்தனர்.


* குமாரபாளையம், புறவழிச்சாலையில் வாகன போக்குவரத்து அறவே இல்லை. பஸ் ஸ்டாண்டில் பஸ்கள், மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. தினசரி மார்க்கெட் விடுமுறை விடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. நகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆட்டிறைச்சி, கோழி, மீன் இறைச்சி கடைகளில் நேற்று காலை, 7:00 மணி வரை கூட்டம் இருந்தது. நகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதால், இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டன.


* ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, மங்களபுரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில், 100 சதவீதம் பேர் வெளியே செல்வதை தவிர்த்து விட்டனர். காலை, 7:00 மணி வரை ஒரு சில டீ கடைகள், மளிகை கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. 7:00 மணியில் இருந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் மட்டும் ஒரு மருந்து கடை திறந்திருந்தது. பஸ்கள் இயக்கப்படாததால், ராசிபுரம் பஸ் நிலையம் வெறிசோடி காணப்பட்டது. சமீபத்தில் எந்த பந்த்திலும் இல்லாத அளவிற்கு, மக்கள் சுய கட்டுப்பாடுடன் ஊரடங்கு நிகழ்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X