சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அனைவருக்கும், 'ராயல் சல்யூட்!'

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 அனைவருக்கும், 'ராயல் சல்யூட்!'

கு.அருணாசலம், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா' வைரஸ் நோய்க்கு எதிராக, உலகமே, யுத்தம் நடத்தி வருகிறது. நேற்று வரை, 150க்கும் மேற்பட்ட நாடுகளில், இந்நோய் பாதிப்பு உள்ளது.
நம் நாட்டில், நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காக, நேற்று முன்தினம், ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இது, முழுமையாக வெற்றி பெற்றதற்கு, ஊடகங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வே முக்கிய காரணம்.மேலும் சுகாதாரம், காவல் உட்பட, அனைத்து அரசு துறை அதிகாரிகளும், அர்ப்பணிப்புடன் களமிறங்கியுள்ளனர்; இந்நேரத்தில், அவர்களின் பணி, பாராட்டுக்குரியது.கொரோனா வைரஸ் தொற்றில், நம் நாடு, இரண்டாம் நிலையில் உள்ளது. இது, மூன்றாம் நிலைக்கு சென்றால், இத்தாலியில் ஏற்பட்டதை போன்ற உயிரிழப்புகள் கண்டிப்பாக ஏற்படும்.எனவே, அரசின் எந்த ஒரு அறிவிப்பையும் அலட்சியம் செய்யாமல், அதை கடைப்பிடிக்க வேண்டும்.சுய ஊரடங்கு கடைப்பிடித்த போது, நாம் எப்படி, சமூகத்தில் இருந்து விலகி இருந்தோமோ, அது போல, மேலும், சில வாரங்களுக்கு இருக்க வேண்டும்; இது, நம் நலனுக்காக என்பதை, புரிந்து கொள்ள வேண்டும்.நம் நாளிதழ் உட்பட, ஊடகங்களில் வெளியான, கொரோனா பற்றிய செய்திகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது.கொரோனாவுக்கு எதிராக போராடும், அனைத்து துறை ஊழியர்களுக்கும், இந்திய மக்கள் சார்பில், ஒரு, 'ராயல் சல்யூட்!'

நன்றி கலந்தவணக்கம்!
ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, 'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, நேற்று முன்தினம் மக்கள் அனைவரும், சுய ஊரடங்கு முறையை கடைபிடித்தனர்.மேலும், அன்று மாலை, 5:00 மணிக்கு, ஐந்து நிமிடங்கள், மக்கள், கைத்தட்டியும், மணியோசை எழுப்பியும், நமக்காக சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர், துாய்மை பணியாளர்கள் என, அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.நாட்டிற்கு ஆபத்து என்றதும், இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தது, பாராட்டத்தக்கது; மகிழ்ச்சி அளிக்கிறது.பிரதமர் மோடி, எந்த ஒரு அறிவிப்பு வெளியிட்டாலும், அதை அரசியலாக்குவது, எதிர்ப்பு தெரிவிப்பது, கிண்டல் செய்வது போன்றவற்றில், எதிர்க்கட்சியினர் ஈடுபடுவது வழக்கம். அதில், நானும் கூட அடக்கம் தான்.ஆனால், அவர் நாட்டின் நலனிற்காக செயல்படுகிறார் என்பதை, மக்கள் ஊரடங்கு அறிவிப்பு வழியாக, அனைவரும் உணர்ந்துள்ளனர்.பிரதமர் மோடியின், மக்கள் ஊரடங்கு அறிவிப்பை, அனைவரும் முழு மனதோடு ஏற்று, செயல்படுத்தினர்.ரயில், விமானம், பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன; கோவில், சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன; வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. மக்கள், வீடுகளுக்குள் இருந்து, சுய ஊரடங்கை கடைப்பிடித்து, 'நாம் அனைவரும் இந்தியர்' என்ற ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தி உள்ளனர்.இத்தாலியில், 'வீட்டில் இருந்து, யாரும் வெளியேற வேண்டாம்' என, அந்நாட்டு அரசு அறிவித்ததை, மக்கள் அலட்சியப்படுத்தியதால் தான், அங்கு உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.நம் நாட்டில், மக்கள் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. அதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.மருத்துவர், செவிலியர், காவல் துறை, பத்திரிகையாளர், தன்னார்வலர், மக்கள் நலப்பணியாளர், துாய்மைப் பணியாளர் உட்பட அனைவருக்கும், இந்திய மக்கள் சார்பில், நன்றி கலந்த வணக்கங்கள்!

வதந்திகளை பரப்பாதீர்!

அ.நாகராணி, உடுமலை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சீனாவில் துவங்கிய, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, உலகெங்கும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில், மக்கள், தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.இந்தியாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, அரசு தீவிரப்படுத்தி உள்ளது. ஆனாலும், மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல், அந்நோய் பரவுவதை தடுக்க முடியாது.இதனால் தான், பிரதமர், மோடி, நேற்று முன்தினம், ஒருநாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அதற்கு, மக்கள் அளித்த ஆதரவு, மகிழ்ச்சி அளிக்கிறது; இது, தொடர வேண்டும்.நோய் பரவுவதை தடுக்க, ஓரிரு வாரங்களுக்கு, கடுமையான ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்.உலகம், இக்கட்டான சூழலில் தவிக்கும் போது, சிலர், 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், வதந்திகளையும், குழப்பங்களையும் பரப்புகின்றனர்.கொரோனாவை தடுக்க, அரசும், மருத்துவர்களும் போராடிக் கொண்டிருக்கும் போது, சில சமூக விரோதிகள், மக்களிடம் பீதியை கிளப்பி வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுவும் தேச துரோகமே!

எஸ்.ஏ.சவேரியார், திண்டுக்கலிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: பிறரை தொடுவதன் வழியாக, 'கொரோனா' வைரஸ் பரவும். ரூபாய் நோட்டுகள் வழியாகவும், நோய் தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது என்பதால், 'டிஜிட்டல்' பண பரிமாற்ற முறையை, மக்கள் பயன்படுத்த வேண்டும்; அதை கற்றுக் கொள்ளுதல், நலம் பயக்கும்.மின் கட்டணம், போக்குவரத்திற்கான சேவைக் கட்டணம், மளிகை கடை, டீக்கடை என, அனைத்திற்கும், 'ஆன்லைன்' பணபரிமாற்றம் செய்தால், நோய் பரவுவதை, ஓரளவு தடுக்கலாம்.கொரோனா நோய் தாக்குதலில் இருந்து, நம் நாட்டை காக்க, ஒவ்வொரு குடிமகனின், தனிமனித சுகாதார முயற்சியே, முதன்மை கடமையாகும்.அரசு அறிவிக்கும் அனைத்து நடைமுறைகளையும், மக்கள் பின்பற்ற வேண்டும்; அதில், அலட்சியம் காட்டக் கூடாது.'நான், ஊர் சுற்றுவேன்' என, சாலைகளில், தேவையின்றி திரியும் நபர்களை பிடித்து, கடுமையாக தண்டிக்க வேண்டும். இல்லையெனில், தான் கெட்ட குரங்கு, வனத்தையும் கெடுத்த கதையாகி விடும்.கொரோனா நோயின் விழிப்புணர்வில் அலட்சியம் காட்டுவதும், ஒருவகையான தேச துரோகமே என்பதை, அனைவரும் உணர வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
25-மார்-202006:39:11 IST Report Abuse
venkat Iyer திரு.அருணாச்சலம் கூறியது போல,இந்த தருணத்தில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவ கல்லூரிகள் நடத்த மத்திய அரசின் அனுமதி கிடைத்து உள்ள நிலையில்,இடத்தினை தேர்வு செய்துள்ள நிலையில் ,ஆரம்ப நிலையில் எல்லா இடத்திலும் தனிமைப்படுத்தும் வார்டாக கொராணா நிதியுடன் சேர்த்து கட்ட ஆரம்பிக்கலாம்.இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையிலும் மருத்துவ துறையிலும் நமது மாநிலம் முன்னிலையில் இருப்பதை மேலும் உறுதிப்படுத்த முடியும்.தமிழ்நாட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளும் ,மருத்துவமனைகளும் மிக அதிகமாக இருப்பதற்கு வெளி நாட்டினர் வருகை சென்னையை நோக்கி இருப்பது தனியார் மருத்துவமனை சேவையும் அதன் நியாயமான செலவுகளும் தான் காரணமாகும்.சென்னையில் மட்டும் மாதம் நான்காயிரம் நோயாளிகள் மருத்துவம் பார்த்துவிட்டு செல்வதாக ஒரு புள்ளிவிவரம் மூலம் அறிகின்றேன்.மத்திய அரசு கொடுத்துள்ள சட்ட திட்டங்களை மீறி வெளி நாட்டினருக்கு மருத்துவம் அதிகமாக செல்லும் நிலை இருக்கின்றது.அவை குறைய வேண்டும்.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
24-மார்-202016:47:33 IST Report Abuse
karutthu முழுமையாக வெற்றி பெற்றதற்கு, ஊடகங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வே முக்கிய காரணம் ஆனாலும் கொஞ்சநாளைக்கு விதண்ட வாதத்தை நிறுத்தி வைக்கவேண்டும் நேற்றய விவாதத்தில் ஒருவர் கொரோன வைரஸ் தடுக்க Rs:55000 கோடிகளை ஒதுக்க வேண்டும் என்கிறார் . இது நடக்கிற காரியமா ?
Rate this:
Cancel
SITHARTHAN S - Chennai,இந்தியா
24-மார்-202014:13:08 IST Report Abuse
SITHARTHAN S காசும் பணமும் தூசு ...... மனிதநேயத்தை மதிக்கத்தவறி ஆணவத்தில் திளைக்கிறவனுக்கு அகந்தையில் உழல்கிறவனுக்கு ஏய்த்துப் பிழைக்கிறவனுக்கு அஞ்சாமல் லஞ்சத்திடம் அடகு போகிறவனுக்கு காசும் பணமும் தூசாகிப்போய் கரோனாவின் மரணபயம் உச்சஸ்தாயியில் உலுக்குகிறது அவனிடம் முறையிட ஆலயமும் வழிவிட மறுக்கிறது சிட்டுக்குருவியிடமும் வட்டமிடும் கழுகிடமும் புழுவிடமும் பூச்சியிடமும் புலியிடமும் எலியிடமும் கீழ்த்தரம் கிஞ்சித்தும் இல்லை ஆதலினால் அவையெல்லாம் கரோனாவைப்பற்றிய கவலையேதுமின்றி சுதந்திரமாய் வாழுதே ஆறறிவு என அலட்டிக்கொண்டு மதி கெட்ட மானுடனுக்கு காசையும் களியாட்டத்தையும் விட உயிர் மட்டுமே உன்னதமானது என சொல்லிமிரட்ட வந்ததோ இந்த கொல்லி கரோனா ? - சித் ஆர்த்தன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X