டவுட் தனபாலு | Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 23, 2020
Share
 'டவுட்' தனபாலு

த.மா.கா., தலைவர், வாசன்: தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக, முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகள், தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் உள்ளன. எல்லைகளை மூட உத்தரவிட்டது, சுய ஊரடங்கை, நீட்டிக்க உத்தரவிட்டது, அரசு பஸ்கள் இயக்கப்படாது என, உத்தரவிட்டது, துணிச்சலான நடவடிக்கைகள். முதல்வர் மேற்கொண்டுள்ள சிறப்பான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக, பிரதமர் பாராட்டியிருப்பது, முதல்வருக்கு பெருமை தருகிறது. 'டவுட்' தனபாலு: ஒரே கல்லில், இரண்டுக்கும் மேற்பட்ட மாங்காய்களை அடிக்கும் வித்தையை நீங்கள் எப்போது கற்றீர்கள் என்பது தான், மிகப் பெரிய, 'டவுட்'டாக இருக்கிறது. முதல்வரையும் பாராட்டுகிறீர்கள்; அதில், பிரதமரையும், 'லிங்' பண்ணுகிறீர்கள். எப்படி இந்த தொழில்நுட்பம், உங்களுக்கு வாய்த்தது என்பது தான் மிகப் பெரிய டவுட்டாக உள்ளது.l

தி.மு.க., பொருளாளர், துரைமுருகன்: 'சட்டசபையை தொடர்ந்து நடத்தினால் தான், மக்களுக்கு, 'கொரோனா' அச்சம் போகும்' என, முதல்வர், இ.பி.எஸ்., சொல்கிறார். சட்டசபையில், கொரோனா குறித்து விவாதிக்கப்படுவதில்லை; வேறு கதைகளையே பேசுகிறோம். கொரோனா தொடர்பான அறிக்கைகளை, 'டிவி' மற்றும் பத்திரிகைகள் வாயிலாக மக்களுக்கு செல்லலாம். அதற்காக சட்டசபையை நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. 'டவுட்' தனபாலு: முதல்வர் சொல்வது தான் சரி. எல்லாவற்றையும் இழுத்து மூடி விட்டால், சாலை மற்றும் தெருக்களில் நடமாடும் மக்களுக்கு அச்சம் வந்து விடாதா... சட்டசபை கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என, தீவிரமாக வலியுறுத்துகிறீர்களே; சொந்த வேலை ஏதும் வைத்துள்ளீர்களோ என்ற, 'டவுட்'டை மக்களுக்கு அது ஏற்படுத்துகிறது.

பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது; இதுவே, சமூக நீதி. அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்கள், மருத்துவம் பயில இத்திட்டம் வகை செய்யும். இதை, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கும், நீட்டிக்கப்பட வேண்டும்.'டவுட்' தனபாலு: 'அரசு பள்ளியில் படித்த மாணவர்களால், 'நீட்' தேர்வு எழுதி வெற்றி பெறுவது சிரமம்; அந்த பள்ளிகளில், அவ்வளவு தரமாக கல்வி கற்றுக் கொடுக்கப்படுவதில்லை' என, கொடி பிடித்த நீங்கள் அப்படியே, 'உல்டா'வாக கோரிக்கை விடுத்துள்ளீர்களே... சரி, அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தேற மாட்டார்கள் என நினைத்து, உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு முன்வந்துள்ளதோ என்ற, 'டவுட்'டும் எழுகிறது!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X