பொது செய்தி

தமிழ்நாடு

மழை வரும் முன்...! குடிமராமத்து பணிகள் நிறைவு செய்யணும்

Added : மார் 24, 2020
Share
Advertisement
மழை வரும் முன்...!  குடிமராமத்து பணிகள் நிறைவு செய்யணும்

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட, ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன கால்வாய்களில், மழைக்காலம் துவங்குவதற்கு முன், குடிமராமத்து பணிகளை நிறைவு செய்ய வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில் இருந்து, புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தில், பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதுார், சேத்துமடை கால்வாய்கள் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்படுகிறது.புதிய ஆயக்கட்டு திட்டத்தில், 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பாசன நீரை பயன்படுத்தி விவசாயிகள், சாகுபடி செய்துள்ள நிலைப்பயிரான தென்னை மரங்களை காக்கின்றனர். பலரும், நெல், வாழை சாகுபடி செய்கின்றனர்.திட்டத்தில், 'அ' மற்றும் 'ஆ' ஆகிய இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன நீர் வழங்கப்படுகிறது. கடந்த நவ., 4ம் தேதி ஆழியாறு ஊட்டுக்கால்வாய், பொள்ளாச்சி மற்றும் சேத்துமடை கால்வாய்களுக்கு, 'பி' மண்டலத்துக்கும், வேட்டைக்காரன்புதுார் கால்வாய்க்கு, 'ஏ' மண்டலத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.மொத்தம், 22 ஆயிரத்து, 332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற, 135 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு, 70 நாட்களுக்கு மொத்தம், 2,250 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட்டது. அரசாணைப்படி நீர் வழங்கப்பட்டு, நேற்று முன்தினம் தண்ணீர் நிறுத்தப்பட்டது.கடந்தாண்டு கால்வாய்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதால், கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படவில்லை. கடைமடை பகுதி விவசாயிகளுக்கு திருப்தியாக பாசன நீர் கிடைத்தது.இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான தண்ணீர் வழங்கும் போது, பாசன நீர் கடைமடை பகுதியை அடைய, விரைவில் குடிமராமத்து பணியை துவங்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:கடந்தாண்டு, 90 நாட்கள் பாசன நீர் கேட்டிருந்தோம், 70 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. தண்ணீர் வழங்குவதற்கு முன் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டதால், பாசன நீர் கடைமடை பகுதியை அடைந்தது.ஆனால், கடந்த முறை மழைக்காலத்தில் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டதால், பணியை மேற்கொள்வதில் கடும் சிரமம் நீடித்தது. நடப்பாண்டுக்கு செப்., அல்லது அக்., மாதத்தில் பாசன நீர் கேட்க உள்ளோம்.சில கால்வாய்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதால், கால்வாய் சிதிலமடைந்து கான்கிரீட் பூச்சுக்கள் சேதமடைந்து உள்ளது. இதனால், தண்ணீர் விரயமாகும்.பொதுப்பணித்துறையினர் அனைத்து கால்வாய்களிலும், ஏப்., மாத துவக்கத்தில், குடிமராமத்து பணிகளை துவங்க வேண்டும். கோடை காலத்திலேயே பணிகளை முழுமையாக முடித்து, கடைமடை பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X