அமெரிக்காவில் 34 ஆயிரம் பேருக்கு பாதிப்பு : 419 பேர் பலியானதால் பொதுமக்கள் பீதி

Updated : மார் 25, 2020 | Added : மார் 24, 2020
Share
Advertisement
coronavirus,America,US,Trump,கொரோனா,வைரஸ்,அமெரிக்கா,டிரம்ப்

வாஷிங்டன்:அமெரிக்காவில், 34 ஆயிரம் பேருக்கு, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை, 419 பேர் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயார்க் மாகாணங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதால், இங்கு வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிலும், இந்த நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கலிபோர்னியா, நியூயார்க் மாகாணங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஒத்துழைப்பு தேவை


இது குறித்து, அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும், 34 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 419 பேர், இந்த நோயால் இறந்துள்ளனர். குடியரசு கட்சியைச் சேர்ந்த, எம்.பி., கென்டுகி ராண்ட் பாலுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க, கலிபோர்னியா, நியூயார்க் மாகாணங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா ஆகியவை, கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நியூயார்க்கில், 15 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 114 பேர் இறந்துள்ளனர். நியூயார்க்கில், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த பாதிப்பை சரி செய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நியூயார்க்கிற்கு தேவையான மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மற்ற பகுதிகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக, முக கவசம், கவுன், கையுறைகள் ஆகியவற்றை போதுமான அளவில் அனுப்பி வைக்க, முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நியூயார்க்கில், 1,000 படுக்கைகள் உடைய நான்கு அவசர கால மருத்துவ மையங்களை அமைக்கவும், கலிபோர்னியாவில், 2,000 படுக்கைகள் உடைய, எட்டு அவசர கால மருத்துவ மையங்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் தேசிய பாதுகாப்பு படையினரையும் அவசர கால பணிகளில் ஈடுபடுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில், கடல் பகுதிகளில், இரண்டு போர் கப்பல்கள், அவசர கால மருத்துவ மையங்களாக செயல்படுகின்றன.


அறிவுறுத்தல்


பரிசோதனை கருவிகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், கையுறைகள், முக கவசம் ஆகியவற்றை அதிக அளவில் தயாரிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது என்பது, ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சவாலான விஷயம். போர் வந்தால், எப்படி செயல்படுவோமா, அதுபோல் கருதி, ஒவ்வொரு அமெரிக்கரும் செயல்பட வேண்டும். அமெரிக்க மக்களின் ஒத்துழைப்புடன், இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு, முறியடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


இந்தியர்களுக்கு பரிசோதனை மறுப்பா?

அமெரிக்காவில், வெளிநாடுகளைச் சேர்ந்த, ஒரு கோடிக்கும் அதிகமானோர், முறையான ஆவணங்கள் எதுவுமின்றி சட்டவிரோதமாக வசிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு, கொரோனா அறிகுறி இருந்தாலும், முறையான ஆவணங்கள் இல்லாததால், மருத்துவமனைகளில் பரிசோதனை நடத்த, டாக்டர்கள் மறுப்பதாக தகவல் வெளியானது; இதை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் கூறியதாவது: சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்கள் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் என்பதற்காக, கொரோனா அறிகுறி இருப்பவர்களை, அவர்களது சொந்த நாடுகளுக்கு அப்படியே திருப்பி அனுப்ப மாட்டோம். சட்டவிரோதமாக வசிப்பவர்கள், குடியேற்றத் துறை அதிகாரிகளை அணுகி, தங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதை கூறினால், அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


பிரபல தனியார் நிறுவனங்கள் உதவி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக, பிரபல தனியார் நிறுவனங்களான, கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், ஐ.பி.எம்., ஆகியவை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X