சவுதியில் 21 நாட்களுக்கு ஊரடங்கு

Added : மார் 24, 2020
Share
Advertisement
 சவுதியில் 21 நாட்களுக்கு ஊரடங்கு

மேற்காசிய நாடான, சவுதி அரேபியா, 21 நாட்களுக்கு, இரவு, 7:00 மணி முதல், காலை, 6:00 மணி வரை, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில், 1,300க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். அவர்களில், பெரும்பாலானோர், ஈரானில் இருந்து சமீபத்தில் திரும்பியவர்கள்.
வெயின்ஸ்டீனுக்கு கொரோனா
ஏராளமான நடிகையருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஹாலிவுட் தயாரிப்பாளர், ஹார்வி வெயின்ஸ்டீன், ஒரு வழக்கில், 20 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று, ரிக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் உட்பட, இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது, பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஒரே நாளில் பலி இரு மடங்கு உயர்வு
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான, ஈக்வடாரில், கொரோனாவால் ஒரே நாளில், ஏழு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிர் பலி, இரு மடங்கு உயர்ந்து, 14 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 532லிருந்து, 789 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில், 166 பேருக்கு, நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. மோசடி வலைதளம் முடக்கம்அமெரிக்காவில், கொரோனாவுக்கு தடுப்பூசி விற்பதாக விளம்பரம் வெளியிட்ட, www.virusmedicalkit.com என்ற மோசடி வலைதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில், மோசடி வலைதளத்தை மூட, டெக்சாஸ் மாகாண உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூடான் - நேபாளம் எல்லை மூடல்
பூடான் மன்னர், ஜிக்மி கேசர், கொரோனா பரவலை தடுக்க, இந்தியா உடனான எல்லைப் பகுதிகளை மூட உத்தரவிட்டுள்ளார். உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று, பூடான் திரும்பியோரும், தனியிடத்தில் தங்க வைத்து, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நேபாளம், நேற்று காலை, 10:00 மணி முதல், இந்தியா உடான எல்லைப் பகுதிகள் அனைத்தையும் மூடிவிட்டது.
பிரேசில் - உருகுவே எல்லை மூடல்
தென் அமெரிக்காவைச் சேர்ந்த பிரேசில், உருகுவே உடனான எல்லைப் பகுதியை மூடியுள்ளது. ஒரு மாதத்திற்கு, இரு நாடுகளைச் சேர்ந்த, சரக்கு வாகன போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும். 'இரு நாடுகளில், ஒன்றில், கணவன் அல்லது மனைவி இருந்தால், அவர்கள் ஒன்று சேர அனுமதிக்கப்படுவர்' என, பிரேசில் அரசு அறிவித்து உள்ளது.
நியூசிலாந்து பிரதமர் வேண்டுகோள்
தென்மேற்கு பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த நியூசிலாந்து, அனைத்து மக்களையும், சுய ஊரடங்கை கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளது. ''வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்,'' என, வலியுறுத்தியுள்ள, நியூசிலாந்து பிரதமர், ஆர்டன், பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வர்த்தக நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளார்.
தனிமையில் ஜெர்மன் பிரதமர்
ஜெர்மன் பிரதமர், ஏஞ்சலா மெர்கல், கொரோனா பரிசோதனைக்குப் பின், யாரையும் சந்திக்காமல், தனி அறையில் தங்கியுள்ளார். அவருக்கு, மூன்று தினங்களுக்கு முன், ஒரு மருத்துவர் தடுப்பூசி போட்டுள்ளார். அந்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஏஞ்செலா மெர்கல், தாமாகவே, தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
எமிரேட்ஸ் அறிவிப்பு வாபஸ்
மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த, துபாயில், எமிரேட்ஸ் விமான நிறுவனம், 'நாளை முதல் அனைத்து பயணியர் விமான சேவை நிறுத்தப்படும்' என, அறிவித்திருந்தது. ஆனால், துபாய் அரசு மற்றும் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை ஏற்று, அந்நிறுவனம், அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. அதேசமயம், விமான சேவை, வழக்கமான, 159 நகரங்களுக்குப் பதிலாக, 13ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X