கொரோனாவை சீனா விரைவாக கட்டுப்படுத்தியது எப்படி?

Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கொரோனாவை சீனா விரைவாக கட்டுப்படுத்தியது எப்படி?

இந்த ஆண்டின் துவக்கத்தில், சீனாவின் மத்திய நகரான, வூஹானில் விரைவாக பரவிய, புதிய ரக, 'கொரோனா' வைரசால், சீனர்கள் ஓர் அசாதாரண நிலையை அனுபவித்தனர்.வழக்கமான நிகழ்வாகிய குடும்ப கொண்டாட்டம், நண்பர்களுடனான சந்திப்பு, விருந்து உட்பட எந்த நிகழ்விலும் பங்கேற்க முடியாமல், வீட்டிற்குள் முடங்கியுள்ள அனுபவத்தை நினைத்து பார்த்தால், இந்த நொடியும் மனம் அஞ்சி நடுங்குகிறது.இரும்புக்கரம் கொண்டு அரசு எடுத்த நடவடிக்கைகளால், நோய் தொற்று கொண்டோரின் எண்ணிக்கை மார்ச், 10க்கு பின், தற்போது வெகுவாக குறைந்து விட்டது.சீனாவில், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த போதிலும், உலகின் வேறு பல நாடுகளில், இதன் தொற்று பரவ ஆரம்பித்து உள்ளது. சீனாவில் உள்ள நான், நேரில் பார்த்த வைரஸ் தடுப்பு மற்றும் மீட்பு பணி அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
மூடப்பட்ட நகர்
கொரோனா வைரஸ் தொற்றின் துவக்கத்தில், இந்த வைரஸ் பற்றியும், நுரையீரல் அழற்சியின் காரணம் குறித்தும், வைரஸ் பரவும் முறை பற்றியும், நிபுணர்களுக்கு எதுவும் தெரியவில்லை. வைரஸ் விரைவாக பரவியது. பிறகு, சீன அரசு அனுப்பிய நிபுணர்கள் குழு, வூஹான் நகரில் கள ஆய்வு செய்து, குறுகிய காலத்தில், வைரசின் ரகத்தை உறுதி செய்துள்ளது.உடனடியாக, அந்த தொற்று மூலத்தை தனிமைப்படுத்தும் விதமாக, ஜன., 23ல், வூஹான் நகரத்தை மூட, சீன அரசு உத்தரவிட்டது. வூஹான் நகருக்கு மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் முதலியவை அனுப்பப்பட்டன. இது, வூஹான் நகர் மற்றும் அது சார்ந்த கூபெய் மாகாணங்களில், மருத்துவ வசதிகளின் குறைபாடுகளை சமாளிக்க, பெரும் உதவியாக இருந்தது.12 ஆயிரம் பேர்நோயின் தீவிரத்தை உணர்ந்து, 1,000 படுக்கைகள் கொண்டுள்ள, 'ஹோவ் ஷென் ஷான்' எனும் புதிய மருத்துவமனை, 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. இம்மருத்துவமனைக்கான கட்டமைப்பு வசதிகள், முழுமையாக இணைய நேரலை மூலம், நாட்டு மக்களுக்குக் காட்டப்பட்டது. மேலும், 24 மணி நேரத்தில், 14 தற்காலிக மருத்துவமனைகள் கட்டப்பட்டன. உடன், 12 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.வைரஸ் தாக்கத்தின்போதும், நாட்டின் பிற பகுதியில் உள்ள அனைத்து மருத்துவர்களும், வூஹான் நகரத்துக்கு பணிக்காக செல்ல, தானாகவே முன்வந்தது, அவர்கள் தொழில் சார்ந்த நெறிமுறையை காட்டியது. மக்கள், அவர்களாக வீட்டிற்குள் தங்கினர்.வெளியே போக வேண்டிய நிலையில் முகக்கவசம் அணிந்து சென்றனர். இதுபோன்ற சுகாதார நடைமுறைகளை, அரசுடன் இணைந்து, மக்கள் முழுமையாக கடைபிடித்தனர்.
என்ன சிகிச்சை?
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேற்கத்திய மருந்துகளை தவிர, சீன பாரம்பரிய மருத்துவம் மூலம், வைரஸ் தொற்றியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய சித்த மருத்துவம் போன்று சீன மருத்துவத்திலும் தொன்மையான பல மூலிகைகள் உள்ளன. உதாரணமாக நிலவேம்பு, வழக்கமாக குளிர் காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்தும்.சீனாவில், கொரோனா நோயாளிகளுக்கு தயாரிக்கப்பட்ட சீன மருந்தில், அடிக்கடி பயன்படுத்தியுள்ள மூலப்பொருள், 'பாதாமி' விதை - Prunus armeniaca Linne var.ansu Maximowicz. தடுக்கும் காலத்தில் 'அஸ்ட்ராகல்ஸ்' - Astragalus, மற்றும் மீட்புக் காலத்தில், 'போரியா' - Wolfiporia Extensa எனும் மூலிகைகள் பயன்படுத்தப்பட்டன.மேலும், சீன மருத்துவத்தில், 'மெரிடியன்' என்ற வகை உடற் பயிற்சிகளை - Meridian Aerobics, மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கற்பித்தனர். இதுவும், நோயை விரைவாக குணப்படுத்த உதவியது.
தடுப்பு பணியில் மக்கள்
மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதால், வைரஸ் தொற்றும் வாய்ப்பு குறையும். வைரஸ் கடுமையாக பரவிய பின், அரசு பல்வேறு வடிவங்களில் வைரசின் கடுமை, தடுக்கும் வழிமுறையை மக்களிடம் அறிவுறுத்தியது.ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு தெருவுக்கு ஒரு நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டது. அதற்குக் கீழே கமிட்டி அமைத்து, அணி திரட்டல் மற்றும் வைரஸ் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது, மிக முக்கியமானவை.இக்கமிட்டி, ஒவ்வொருவரையும் தனித்தனியே தொடர்பு கொண்டு, சுகாதார நிலைமையை கேட்டறிந்தது. தடுப்பு வழிமுறையை கற்பித்தது. நாள்தோறும் குடியிருப்பு பகுதியில், மூன்று முறை கிருமிகளை அழிக்கும் பணி நடந்தது.பாதிப்புக்குள்ளானவர் என்ற சந்தேகத்திற்கு உரிய நபர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தியது தொடர்பான பணிகளை, இந்த கமிட்டிகள் அர்ப்பணிப்புடன் செய்தன.உதாரணமாக, நோய் தொற்று பாதித்தோருக்கு தேவையான உணவுகளையும், அன்றாட பொருட்களையும் வாங்கி இக்குழு அனுப்பி, சுகாதார நிலைமையை நாள்தோறும் கேட்டு, அதை பதிவும் செய்து வந்தது. மக்கள் எல்லோரும், தானாகவே வீட்டில் முடங்கினர்.குறிப்பாக, புத்தாண்டு பழக்கங்களாக, நண்பர்கள் வீட்டில் சேர்ந்து சாப்பிடுவது, கூட்டங்களில் கலந்து கொள்வது போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை முழுவதும் கைவிட்டனர். வெளியே போகும் போது, தவறாமல் முகக்கவசம் அணிந்தனர். வரிசையில் காத்திருந்த போது, ஒருவரிடமிருந்து ஒருவர், ஒரு மீட்டர் துாரம் இடைவெளி விட்டனர்.
தொழில்நுட்பம்
சமீப காலமாக, சீனாவில் இணைய தொழில்நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது. இது, வைரஸ் தடுப்புப் பணியிலும் பெரும் பங்களிப்பு செய்தது. உதாரணமாக, வீட்டில் தங்கியிருக்கும் மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அன்றாட பொருட்களை, எளிதாக இணையதளத்தில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பொருட்கள், தினமும் குடியிருப்பு பகுதியின் வாசலிலுள்ள சரக்கு சேமிப்பிடத்திற்கு அனுப்பப்படும். அங்கு சென்று பொருட்களை வாங்கி, வீட்டிற்குக் கொண்டு போகலாம்.
பிரத்யேக, 'ஆப்'
பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் போன், 'ஆப்' மூலமும், வைரஸ் பரவுவதைத் தடுக்கும் புதுமையான வழி கண்டுபடிக்கப்பட்டது. முதலில் அந்த, 'ஆப்'பில் தங்கள் பெயர், தொடர்பு எண், சமீபத்தில் பயணம் செய்த இடங்கள், சுகாதார நிலைமை முதலிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.பிறகு ஒரு 'கியூ.ஆர்., கோடு' கிடைக்கும். குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் போது அல்லது வாடகை காரைப் பயன்படுத்தும் போது, அந்த, கியூ.ஆர்., கோடு காட்டி, 'ஸ்கேன்' செய்ய வேண்டும். இதன் மூலம், அதில் நுழைந்தவர்களில் யாருக்காவது தொற்று இருந்தால் உறுதி செய்யப்பட்டு, அவர்களை எளிதில் கண்டுபிடித்தனர்.மேலும், பெரிய தரவுகளின் மூலம், அருகில் எத்தனை பேர் தொற்றியவர்களாக இருந்தனர், தாம் தங்கும் இடத்திலிருந்து எவ்வளவு துாரம் அவர்கள் இருந்தனர் என்பதை உணர்ந்தனர். மின் வணிக வளர்ச்சியால், சீன மக்களுக்கு, wechat அல்லது Alipay எனும் ஆப் மூலம் இணையத்தில் பணம் பரிமாற்றம் செய்தனர். பணத்தை தொட்டு நோய் தொற்றும் வாய்ப்பை, இந்த நடவடிக்கைகள் குறைத்தன.இந்த வைரஸ் போராட்டத்தின் மூலம், உலக மக்களின் உயிர் மற்றும் எதிர்காலம் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்திருப்பதை அறிய முடிகிறது. எந்த நெருக்கடி ஏற்பட்டாலும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, ஒற்றுமையாய் சமாளிக்க வேண்டும் என்பதை, உலகிற்கு எடுத்து சொல்லியுள்ளது.இந்த வகையில், பல நாடுகளிலிருந்து உதவி பெற்றுள்ள சீனா, கைமாறாக விமானங்கள் மூலம் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வருகிறது.
மக்களை உருக்குலைத்து அசுர வேட்டையாடும் கொரோனாவை கட்டுப்படுத்திய சீனாவின் அனுபவம், பல நாடுகளுக்கு பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழை நேசிக்கும் ஒரு தமிழ் பேராசிரியையாக, தமிழர்களுக்கு இதை பகிர்வதை, என் கடமையாக கருதுகிறேன்.பேராசிரியை கிகி ஷாங் என்ற நிறைமதி, தலைவர், தமிழ்த் துறை, யுன்னான் மீஞ்சூப் பல்கலை, சீனா.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
25-மார்-202005:48:58 IST Report Abuse
G.Prabakaran அருமை சிறப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X