பல்லி வந்துச்சா... குருவி போயிடுச்சா?| Dinamalar

பல்லி வந்துச்சா... குருவி போயிடுச்சா?

Added : மார் 24, 2020
Share
'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்கும், முன்னெச்சரிக்கையாக, சித்ராவும், மித்ராவும், முக கவசம், கையுறை அணிந்து கொண்டு, ஸ்கூட்டரில் நகர் வலம் புறப்பட்டனர்.வாகன போக்குவரத்து எப்போதும் போல் இருந்தது. வழக்கம்போல் மக்கள் அலுவலகம் மற்றும் இதர பணிகளை செய்து கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''என்னக்கா, மக்களுக்கு 'கொரோனா' வைரஸ் அபாயத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லை
 பல்லி வந்துச்சா... குருவி போயிடுச்சா?

'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்கும், முன்னெச்சரிக்கையாக, சித்ராவும், மித்ராவும், முக கவசம், கையுறை அணிந்து கொண்டு, ஸ்கூட்டரில் நகர் வலம் புறப்பட்டனர்.வாகன போக்குவரத்து எப்போதும் போல் இருந்தது. வழக்கம்போல் மக்கள் அலுவலகம் மற்றும் இதர பணிகளை செய்து கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''என்னக்கா, மக்களுக்கு 'கொரோனா' வைரஸ் அபாயத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லை போலிருக்கே. சர்வ சாதாரணமா நடமாடுறாங்க. கொஞ்ச பேருதான், முக கவசம் அணிஞ்சிருக்காங்க,'' என, பேச்சை துவக்கினாள்.அதற்கு சித்ரா, ''பொத்தாம் பொதுவா அப்படி சொல்லிட முடியாது. பெரும்பாலான ஜனங்ககிட்ட விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கு. கார்ப்பரேஷன் ஆபீசுக்கு, ரயில்வே ஸ்டேஷனுக்கு வர்றவங்க, நல்லா சோப்பு போட்டு, கை கழுவிட்டுதான் போறாங்க,'' என்றாள்,''நம்மூரிலும் ஒரு பொண்ணுக்கு 'கொரோனா' வைரஸ் பாதிப்பு இருக்கறதா சொல்றாங்களே. உண்மைதானா,'' என, கேட்டாள் மித்ரா.''ஆமா, மித்து. உண்மைதான்! ஸ்பெயின் நாட்டுல அந்த பொண்ணு எம்.பி.ஏ., படிச்சிட்டு இருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, அந்த நாட்டுல இருந்து திரும்பி வந்திருக்காங்க அப்ப, சிகிச்சை செஞ்சப்பவே சந்தேகப்பட்டு, சளி மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பியிருக்காங்க. சிகிச்சை முடிவு வர்றதுக்குள்ள ஆஸ்பத்திரியில இருந்து, 'எஸ்கேப்' ஆகி, வாடகை கார் மூலமா, வீட்டுக்கு போயிட்டாங்க.''பரிசோதனையில, நோய் தொற்று இருக்கறது உறுதியானதும், மருத்துவத் துறை அதிகாரிகள், அவுங்க வீட்டுக்கு போயி, மறுபடியும் சிகிச்சை செஞ்சிருக்காங்க. அந்த பொண்ணு, பேரன்ட்ஸ், நெருங்கி பழகின தோழிகள், வாடகை கார் டிரைவர், உறவினர்கள்னு, மொத்தம், 14 பேரை, அழைச்சிட்டு வந்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிச்சுக்கிட்டு இருக்காங்க,''''ஓ... அப்படியா... '' என, வாயை பிளந்தாள் மித்ரா.''அது மட்டுமல்ல, அவுங்க குடியிருந்த அப்பார்ட்மென்ட் முழுக்க, கிருமி நாசினி தெளிச்சிருக்காங்க. குடியிருப்புல இருக்கற எல்லோருக்கும், மருத்துவ பரிசோதனை செய்யலாமான்னு, கவர்மென்ட்டுகிட்ட அனுமதி கேட்டிருக்காங்களாம். 'ஓகே' சொல்லிட்டாங்கன்னா, எல்லாருக்கும் 'மெடிக்கல் செக்கப்' செய்றதுக்கு, மருத்துவத்துறை தயாரா இருக்கு,''''இதுதவிர, இன்னும் ரெண்டு அபார்ட்மென்ட்டுல இருக்கறவங்களையும் கண்காணிச்சிட்டு இருக்காங்க. கடந்த ஒரு மாசத்துல வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தவங்க, தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளணும்னு, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருக்கு,'' என்றாள் சித்ரா.''ஏன்க்கா, அந்தளவுக்கு பாதிப்பு அதிகமா இருக்கா, என்ன,''''என்ன மித்து, இப்படி கேட்டுட்ட. நம்மூர்ல மட்டும் நேத்து மத்தியானம் வரைக்கும், 387 பேரை கண்காணிப்பு வளையத்துல வச்சிருக்காங்க. இதுல, 40 பேரு, வெளிநாட்டுல இருந்து வந்தவங்க,''அப்போது, மித்ரா மொபைல் போனுக்கு, 'வாட்ஸ்அப்'பில் குறுஞ்செய்தி வந்தது. அதை படித்த மித்ரா, ''அக்கா, ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப் போறதா, 'கவர்மென்ட்' அறிவிப்பு வெளியிட்டு இருக்கு,'' என்றாள்.''கரெக்ட்டான நடவடிக்கை, மித்து! வைரஸ் பரவாமல் தடுக்கணும்னா, இதுபோன்ற நடவடிக்கை அவசியம்தான். நேத்தே சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன். காலை, 5:00 மணி வரைக்கும் நேரத்தை மட்டும் நீட்டிச்சாங்க.மக்கள் ஒத்துழைப்பை பார்த்துட்டு, இப்ப, அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க. ரயில், பஸ் போக்குவரத்து இல்லாமல், கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தால், மக்கள் யாரும் வெளியே வர மாட்டாங்க. வைரஸ் பரவுறதை தடுக்கலாம்னு நினைக்கிறாங்க,'' என, கூறிக்கொண்டே, கார்ப்பரேஷன் அலுவலகத்துக்குள் ஸ்கூட்டரை திருப்பினாள்.நுழைவாயிலில் தடுத்து நிறுத்திய காவலர்கள், இருவரின் கரங்களில், கிருமி நாசினி தெளித்து, கைகளை கழுவச் செய்தனர். மாநகராட்சி மருத்துவமனை செவிலியர் இருவர், ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை மற்றும் உடல் வெப்பத்தை பரிசோதித்தனர். அதன் பின்பே, அலுவலகத்துக்குள் அனுப்பினர்.''அக்கா, இதே மாதிரி எல்லா இடத்திலயும் செஞ்சா நல்லாயிருக்குமே,''''நல்லா இருக்கும். வாஸ்தவம்தான். செய்யணுமே,'' என்ற சித்ரா, ''தடபுடலா நடக்க வேண்டிய விழா, எளிமையா, மரத்தடி பிள்ளையார் கோவில்ல நடந்துச்சாம்,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''என்ன விஷயம்னு, விவரமா சொல்லுங்களேன்,''''ஜெ., பிறந்த நாளையொட்டி, 72 ஜோடிகளுக்கு தடபுடலா திருமணம் நடத்த ஆளுங்கட்சிக்காரங்க ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. கூடாரம், பந்தல் அமைச்சு, பிளக்ஸ் பேனர் கட்டி, வீடு வீடா அழைப்பிதழ் எல்லாம் கொடுத்துட்டாங்க. சி.எம்., - டெபுடி சி.எம்., வர்றதாவும் சுவர் விளம்பரம் எழுதியிருந்தாங்க.''கொரோனா வைரஸ் பீதியில விழாவை கேன்சல் செஞ்சிட்டாங்க. கல்யாணத்தை இன்னொரு நாள் வைக்கலாம்னா, வைகாசி வரைக்கும் காத்திருக்கணும். அதுவரைக்கும், 'வெயிட்' பண்ண வேண்டாம்னு சொல்லி, அந்தந்த ஏரியாவுல, கட்சிக்காரங்க முன்னிலையில் எளிமையா நடத்தியிருக்காங்க.''இருந்தாலும், ஒவ்வொரு ஜோடிக்கும் ரொக்கமா, 25 ஆயிரம் ரூபாய், 15 ஆயிரம் ரூபாய்க்கு பட்டு வேட்டி, சட்டை, புடவை, தங்கத்தாலி, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு, வீட்டுக்கு தேவையான, 72 விதமான பொருட்கள் இலவசமா கொடுத்திருக்காங்க,''''வீட்டை கட்டிப்பார்; கல்யாணம் செஞ்சு பாருன்னு சொல்லுவாங்க. எந்த விதத்திலும், எதிர்க்கட்சிக்காரங்க, குற்றம் சொல்லிடக் கூடாதுங்கிறதுக்காக, ரொம்பவே 'ரிஸ்க்' எடுத்து, திருமணம் நடத்தி வச்சிருக்காங்க,''அப்போது, குப்பை அள்ளுறதை கண்காணிக்கும் சுகாதார ஆய்வாளர்களில் ஒருவர் கடந்து சென்றார்.அவரை பார்த்த மித்ரா, ''காந்தி மாநகர் ஏரியாவுல, 'யூஸ்' பண்ற குப்பை அள்ளுற வாகனத்துல, எப்பவுமே ஒரு கேன் இருக்குதாம். வண்டிக்கு நிரப்புற டீசல்ல, 10 லிட்டரை திருடி, கட்டுமான பொருள் சப்ளை செய்ற நிறுவனத்துக்கு விக்குறாங்களாம். கார்ப்பரேஷன் ஸ்டாப் ஒருத்தரு சொன்னாரு,'' என்றாள்.''மித்து, குப்பை அள்ளுறதுல ஆரம்பிச்சு, வெள்ளலுார் கிடங்குல கொட்டுறது வரைக்கும் ஏகப்பட்ட ஊழல், முறைகேடு நடக்குது. ஒன்னொன்னா சொன்னா, மயக்கம் போட்டு விழுந்திடுவ. குப்பை அள்ளுறதில சில அதிகாரிங்க, கோடீஸ்வரர்களா மாறிட்டாங்க. ஒரு அதிகாரிக்கு, 'பினாமி' கம்பெனி கூட செயல்படுதாம்,''''கார்ப்பரேஷன் அதிகாரிகளை மாத்தப் போறாதா சொன்னாங்களே,''''அதுவா, மூணு அசிஸ்டென்ட் கமிஷனர்களுக்கு 'டிரான்ஸ்பர்' ஆர்டர் 'ரெடி'யாகி இருந்துச்சு; கடைசி நேரத்துல நிறுத்தி வச்சிட்டாங்க. வெளியூர்ல இருந்து 'டிரான்ஸ்பர்' ஆகி வந்திருக்கிற ஒரு அதிகாரி, 'அக்கவுன்ட்ஸ்' டிபார்ட்மென்ட் கேட்டு, அழுத்தம் கொடுத்திட்டு இருக்காராம். கார்ப்பரேசன் பட்ஜெட் தாக்கல் செஞ்சதுக்கு அப்புறம், டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுப்பாங்கன்னு சொல்றாங்க,''''இப்ப இருக்குற நிலைமைக்கு, பட்ஜெட் தாக்கல் செய்வாங்களான்னு சந்தேகமா இருக்கே,''''பட்ஜெட்டுனா, என்னப்பா, வரவு - செலவு அறிக்கைதானே. கடந்த நிதியாண்டு வரவு - செலவு, வரும் நிதியாண்டு எதிர்பார்க்கும் வரவு - செலவு அறிக்கை தயாரிச்சு வெளியிட்டா முடிஞ்சு போச்சு. 'டிபார்ட்மென்ட் லெவல்'ல முடிச்சிடுவாங்கன்னு சொல்றாங்க,''''சுய ஊரடங்கு அமல்ல இருந்த அன்னைக்கு ஏகப்பட்ட இடங்கள்ல, 'டாஸ்மாக்' பார்ல மதுபாட்டில்களை பதுக்கி வச்சு, திருட்டுத்தனமா வித்துருக்காங்க. தொண்டாமுத்துார் ஏரியாவுல, குபேரபுரி, புத்துார் என்கிற இடங்கள்ல, தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆய்வு செஞ்சாரு. ரெண்டு பேரை பிடிச்சு, போலீஸ்ல ஒப்படைச்சிருக்காரு. ஆனா, மதுக்கடை பார் பின்னால, மது விற்பனை நடந்ததா, கேஸ் பதிவு செஞ்சு, சொந்த ஜாமின்ல விட்டுட்டாங்க,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.''இந்த மாதிரி திருட்டுத்தனம் செய்றவங்களுக்கு தண்டனை கடுமையா கொடுக்கணும். பார் லைசென்சை ரத்து செய்யணும். அப்படி செஞ்சாதான், அரசாங்கம் உத்தரவு போடும்போது, மதுபானங்களை பதுக்கி வைச்சு விக்க மாட்டாங்க,'' என, ஆவேசப்பட்டாள் சித்ரா.''அக்கா, போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றவங்க யாரா இருந்தாலும், 'மாஸ்க்' போடணும்னு உத்தரவு போட்டிருக்காங்களாம்,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டேன். உண்மைதான். அதை விட இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு. மாவட்ட போலீஸ் பிரிவுல ரெண்டு 'டீம்' இருக்கு. ரெண்டு டீமை சேர்ந்தவங்களும் மாத்தி, மாத்தி புகார் சொல்லிட்டு இருந்தாங்க.எஸ்.பி., சுஜித்குமார் கவனத்துக்கு விஷயம் போயிருக்கு. ரெண்டு டீமை சேர்ந்தவங்களையும் தனித்தனியா கூப்பிட்டு, ஒரு மணி நேரம், 'லெப்ட் ரைட்' வாங்கியிருக்கார். இனி மேல் புகார் வரக்கூடாதுன்னு புத்திமதி சொல்லி, அனுப்பியிருக்காராம்,'' என்றபடி, 'அம்மா' மூலிகை உணவகத்துக்குள் நுழைந்தாள் சித்ரா.அவளை பின்தொடர்ந்து வந்த மித்ரா, இஞ்சி டீ ஆர்டர் கொடுத்தாள். டீ குடித்து விட்டு, அலுவலகத்துக்கு கிளம்பியபோது, டவுன்ஹால் சிக்னலில், பத்திரப்பதிவுத்துறை வாகனம் கடந்து சென்றது.அதை பார்த்த மித்ரா, ''அக்கா, பெரியநாயக்கன் பாளையத்துல இருக்கற பத்திரப்பதிவு அலுவலகத்துல, 'சிசி டிவி' கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்காங்க; என்ன பேசுறாங்கன்னு கேக்குற அளவுக்கு துல்லியமா ஒலியும் பதிவாகுமாம்.ஒரே ஒரு ரூம் மட்டும் கண்காணிப்பு வளையத்துக்குள்ள வராதாம். அங்கதான் எல்லா விஷயமும் நடக்குதாம். ஆஞ்சநேயர் வந்தாரான்னு கேக்குறாங்க; பல்லி வந்துச்சா; குருவி போயிடுச்சான்னு, அவுங்களுக்குள்ள ரகசிய வார்த்தைகள்ல கொடுக்கல் வாங்கல் நடந்துக்கிட்டு இருக்குதாம்,''''லஞ்சம் வாங்குறவங்களுக்கு, ஜாமின்ல வெளியே வர முடியாத அளவுக்கு கடுமையான தண்டனை கொடுத்தாதான், திருந்துவாங்க,'' என அங்கலாய்த்த சித்ரா, ''காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டுல செயல்படுற, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக கிளை அதிகாரிங்க, கோவை மண்டல பஸ் ஸ்டாண்ட் அதிகாரிகளிடம் வம்பு இழுத்துக்கிட்டே இருக்காங்களாம்,'' என்றாள்.''ஏன், என்னாச்சு, அவுங்களுக்குள்ள 'புரிதல்' இருக்குமே,''''அவுங்களுக்குள்ள எப்பவுமே பிரச்னைதான். சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட பஸ்களை, உரிய நேரத்துக்கு எடுக்குறதில்லையாம். பயணிகள் கூட்டம் நிரம்புற வரைக்கும், 'வெயிட்' பண்ணி, பஸ் எடுக்குறாங்களாம். இதுனால, கோவை கோட்ட பஸ்கள் காத்தாடுது.'டைமிங்' பிரகாரம் பஸ் எடுத்தா, ரெண்டு டிப்போக்களுக்கும் வருமானம் சரிசமமா கெடைக்கும்னு சொல்றாங்க. ஆனா, சேலத்துக்காரங்க விடாப்பிடியா இருக்காங்களாம். நம்மூர் அதிகாரிங்க புலம்பிட்டு இருக்காங்க,'' என்றபடி, அலுவலகத்துக்கு ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X