ஏப்., மாதத்தில் மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு: இடைவெளி அதிகரிப்பால் சாகுபடிக்கு சிக்கல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

உடுமலை;பி.ஏ.பி., முதலாம் மண்டலம், மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு இடைவெளி அதிகரிக்கிறது; ஏப்.,முதல் வாரத்திலேயே தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பி.ஏ.பி., முதலாம் மண்டலத்திலுள்ள, 94,521 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த, ஜன., 27ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், 21 நாட்கள் தண்ணீர் திறப்பு, ஏழு நாட்கள் இடைவெளி என்ற அடிப்படையில், சுற்றுக்கு, 1,900 கன அடி வீதம், நான்கு சுற்றுக்களாக தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.முதல் சுற்றுக்கு, 21 நாட்கள் தண்ணீர் வழங்கப்பட்டு, பிப்., 18ம் தேதி நிறைவு செய்யப்பட்டது. இரண்டாம் சுற்றுக்கு, பிப்.,26ல் தண்ணீர் திறக்கப்பட்டு, கடந்த, 2ல் நிறைவு செய்யப்பட்டது.முதலாம் மண்டல பாசன காலம், மழையில்லாமல், வறட்சியான சூழலில் துவங்கிய நிலையில், திட்ட தொகுப்பு அணைகளில் குறைந்தளவே நீர்இருப்பு உள்ளது. அதோடு, ஆழியாறு அணைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டதால், கடந்த மூன்று மாதமாக, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, பரம்பிக்குளம் அணை வழியாக, காண்டூர் கால்வாயில், தினமும், வினாடிக்கு, சராசரியாக, 550 முதல் 650 கன அடி வரை மட்டுமே நீர் வரத்து நிலவியது.இதனால், திருமூர்த்தி அணை நீர்மட்டம் போதிய அளவு உயராமல், வரத்து குறைவு, பாசனத்திற்கு பிரதான கால்வாயில் அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால், போதிய வேகம் மற்றும் அழுத்தம் இல்லாமல் பாசன கால்வாய் மற்றும் நிலங்களுக்கு தண்ணீர் சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, காண்டூர் கால்வாயில், தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு, திருமூர்த்தி அணையில், மூன்றாம் சுற்றுக்கு வழங்க, நீர் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.மூன்றாம் சுற்று திறக்கும் போது, கூடுதல் வேகம், அழுத்தம் இருக்கும் வகையில், அணையில், 50 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்த பிறகே, தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.மூன்றாம் சுற்றுக்கான இடைவெளி, இரு வாரமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால், சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'மூன்றாம் சுற்றுக்கு, அணையில் போதிய அளவு நீர் இருப்பு வைத்துக்கொண்டு, அதற்கு பிறகே திறக்கப்படும். தற்போது, 30 அடி வரை நீர் உள்ளது. 50 அடி வரை நீர் மட்டம் உயர, 10 நாட்களுக்கு மேலாகும். அதனால், மூன்றாம் சுற்றுக்கு ஏப்., முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.அணை நீர் மட்டம் திருமூர்த்தி அணை நீர் மட்டம், மொத்தமுள்ள, 60 அடியில், 30.24 அடியாக காணப்பட்டது. நீர் இருப்பு, 846.38 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 743 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து, 93 கன அடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X