பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடல்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (2+ 3)
Share
Advertisement
 இன்று முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடல்


சென்னை :''தமிழகத்தில் உள்ள, அனைத்து மாவட்ட எல்லைகளும், இன்று மாலை, 6:00 மணி முதல், ஏப்ரல், 1 காலை, 6:00 மணி வரை மூடப்படும். அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் தவிர, அனைத்து கடைகளும் மூடப்படும்.

''கொரோனா நோய் தடுப்பு பணிக்கு, கூடுதலாக, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.

சட்டசபையில், நேற்று அவர் கூறியதாவது:

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும், அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. மாநில, மத்திய அரசுகளின் முயற்சிகளுக்கு, தமிழக மக்கள் அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி.


latest tamil news





கூடுதல் படுக்கை வசதி



அரசு மருத்துவமனைகளில், தற்போதுள்ள, 92 ஆயிரத்து, 406 உள்நோயாளி படுக்கை வசதிகளில், 9,266 படுக்கைகள், கொரோனா சிகிச்சைக்கு தேவையான, தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன; தேவைக்கேற்ப, இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள, புதிய கட்டடங்களில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக, கூடுதல் படுக்கை வசதிகள், விரைவில் துவக்கப்பட உள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, அவசர சிகிச்சை அதிகம் தேவைப்படாத, அரசு மருத்துவமனைகளில், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் போது, தீவிர சிகிச்சை வசதிகளை உருவாக்க, 560 'வென்டிலேட்டர், மானிட்டர்'கள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், 500 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளை ஏற்படுத்த, தேவையான மருத்துவ கருவிகள், கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.தனியார் மருத்துவமனைகளில், ஏற்கனவே உள்ள படுக்கை வசதிகளில், 750 படுக்கை வசதிகளை, கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கண்காணிப்பு


ஏற்கனவே, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்தவர்களின், வீட்டுக் கதவில், 'வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்' என்ற, விபரம் ஒட்ட வேண்டும். இந்த பட்டியலின் விபரம், காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் களத்தில் உள்ள, சுகாதாரத்துறை அலுவலர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.தனியார் மருத்துவமனைகளில், தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் மருத்துவ சேவைக்கென, 25 சதவீத படுக்கைகள் ஒதுக்க வேண்டும்.

மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், பால் அங்காடிகள் போன்றவை உள்ள இடங்களை, உள்ளாட்சி அமைப்புகள், முறையாக கண்காணித்து, துாய்மைப்படுத்த வேண்டும்; கடைகளில், மக்கள் அதிகம் கூடாதவாறு, காவல் துறை கண்காணிக்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள், 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு பணிக்கு, முதல் கட்டமாக, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

கூடுதலாக, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசை பொறுத்தவரை, எந்த மக்களும் பாதிக்கப்படக் கூடாது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவாமல் தடுக்க, அரசுக்கு துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி.கொரோனா நோய் பாதிப்பால், ஒரு உயிரை கூட இழப்பதற்கு, நாங்கள் தயாராக இல்லை. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், அர்ப்பணிப்பு உணர்வோடு, இதற்காக பணியாற்றுவோம்.

இந்நோய், தமிழகத்திலிருந்து முழுமையாக ஒழிக்கப்படும் வரை, எங்கள் பணி தொடரும்.


நடவடிக்கை



மேலும், அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்த உத்தரவு, இன்று மாலை, 6:00 மணியில் இருந்து, ஏப்ரல், 1 காலை, 6:00 மணி வரை, நடைமுறையில் இருக்கும். இதை அமல்படுத்த, அனைத்து போலீஸ் கமிஷனர்களும், மாவட்ட கலெக்டர்களும், குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு, 144ன் கீழ், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நிவாரணம் வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான ஆணைகள் தனியாக வெளியிடப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X