பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த ஊர் திரும்ப முடியாதோர் சமூக நலக்கூடங்களில் தங்கவைப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

ராயபுரம் : தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்கூட்டியே, நேற்று முன்தினம் முதல், வரும், 31ம் தேதி வரை, ரயில் சேவை அனைத்தையும் நிறுத்தியது, ரயில்வே நிர்வாகம். இதையடுத்து, ரயில் நிலையத்துக்குள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.இதனால், சொந்த ஊர் செல்ல வந்த வட மாநிலத்தவர் ஆயிரக்கணக்கானோர், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெளியே காத்து கிடந்தனர். அவர்கள் திடீரென ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ், ரயில்வே போலீஸ் மற்றும் பூக்கடை போலீசார் என, 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

அவர்கள் செல்ல மறுத்ததோடு, 31ம் தேதி வரை உணவு மற்றும் தங்கும் வசதி செய்து தருமாறு, ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து போலீசார் வாகனம் மூலம் வட மாநிலத்தவர்கள் அனைவரையும், அருகில் உள்ள சமுதாய நலக்கூடம், மாநகராட்சி பள்ளிகளில் தங்க வைத்தனர்.

 ராயபுரம் மண்டலத்தில், புதுப்பேட்டை, கண்ணப்பர் திடல், சிந்தாதிரிப்பேட்டை, ஆதிகேசவலு தெரு மாநகராட்சி பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை, சிங்கச்செட்டி தெரு சமுதாயக்கூடம், எழும்பூர், சென்னை நடுநிலைப் பள்ளி, புதுப்பேட்டை, வீரபத்திரன் தெரு சமுதாய கூடம், மண்ணடி, சமுதாய நலக்கூடம், தண்டையார்பேட்டை மண்டலத்தில், வண்ணாரப்பேட்டை, மங்கம்மாள் கார்டன் சமுதாய நலக்கூடம், வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட இடங்களில், 1,000க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாதவரம், அம்பத்துார் சுற்றுவட்டாரங்களில் உள்ள, தொழிற்சாலைகளில், பீஹார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.ரயில்கள் ரத்தால், சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர்.

இவர்களில், 45 பேர், மாதவரம் தனியார் திருமண மண்டபத்திலும், 17 பேர், அம்பத்துார், சண்முகபுரம் சமுதாய கூடத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரலில் இருந்து, வெளி மாநிலங்களுக்கு, ரயில் மூலம் செல்ல வந்த வடமாநிலத்தவர்கள் மற்றும் மெரினா கடற்கரை மற்றும் நடைபாதைகளில் தங்கியிருந்த ஆதரவற்றோரை, மாநகராட்சியினர் அழைத்து வந்து, மயிலாப்பூர், காரணீஸ்வரர் பக்கோடா சாலையில் உள்ள சமூக நலக் கூடத்தில், 75 பேர், சி.பி.ராமசாமி சாலையில் உள்ள சமூக நலக்கூடத்தில், 52 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

மந்தைவெளி சாலையில் உள்ள இரவு காப்பகத்தில், வழக்கமாக தங்குபவர்கள், 55 பேரும், தற்போது கூடுதலாக, 25 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பள்ளியில் தங்க வைக்க எதிர்ப்புதிருவொற்றியூரில், தமிழகம் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த, 97 ரயில் பயணியர், தேரடி, சன்னிதி தெரு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மண்டப வாடகை அதிகம் என்பதால், காலடிபேட்டை, மல்லிகாபுரம் மாநகராட்சிப் பள்ளியில் தங்க வைக்க, ஏற்பாடு நடந்த நிலையில், சுற்றுவட்டார மக்கள், தொற்று நோய் குறித்து அச்சம் தெரிவித்ததால், அந்த முடிவு கைவிடப்பட்டது.

இதில், ஈரோட்டில் இருந்து, பிழைப்பு தேடி வந்த, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த, ஐந்து பேருக்கு, பணம் வழங்கி, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேலத்தில் இருந்து கல்பாக்கம் செல்ல வந்த இருவரை, அவர்களது உறவினர்கள் அழைத்து சென்றனர்.மற்ற, 90 பேருக்கும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளன. மணலி, சின்னசேக்காடு மாநகராட்சி பள்ளி கட்டடத்தில் தங்க வைக்க, அழைத்து வரப்பட்ட வடமாநில பயணியரை தங்க வைக்க, உள்ளூர் வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் மாதவரம் அழைத்து செல்லப்பட்டனர். சிந்தாதிரிப்பேட்டை, சிங்கச்செட்டி தெருவில் உள்ள சமூக நலக் கூடத்தில், 160க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்களை, ராயபுரம் மண்டல மாநகராட்சியினர் தங்க வைத்துள்ளார்.

இங்குள்ள வடமாநிலத்தவர்கள், 50க்கும் மேற்பட்டோரை பிரித்து, மூலகொத்தளம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்க, மாநகராட்சியினர் வாகனங்களில் நேற்று அழைத்து வந்தனர்.உறவினர் வீடுதகவலறிந்த ராயபுரம், படவேட்டம்மன் கோவில் தெரு மக்கள், வடமாநிலத்தவர்களை பள்ளியில் தங்க அனுமதிக்க கூடாது என, மாநகராட்சியினரை, நேற்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, மீண்டும் சிந்தாதிரிப்பேட்டை சமூக நலக்கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.இவர்களுக்கு வேண்டிய குடிநீர், உணவு வசதிகளை மாநகராட்சியினர் செய்துள்ளனர்.

ஒவ்வொரு விடுதியிலும், மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்க வைக்கப் பட்டுள்ள வடமாநிலத்தவர்கள், விருப்பப்பட்டால், சென்னையில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கி கொள்ளலாம். இதற்கான படிவத்தில் அவர்களின் விபரங்களை பெற்று, அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X