பொது செய்தி

தமிழ்நாடு

இருமும் போதும் தும்மும் போதும் கவனம் தேவை!

Added : மார் 24, 2020
Share
Advertisement

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும், 'கொரோனா' வைரஸ் போல சில ஆண்டுகளுக்கு முன், நாட்டையே உலுக்கிய நோயாக, 'காசநோய்' இருந்தது. இதற்கு, 'எலும்பு உருக்கி நோய்' என்ற பெயரும் உண்டு. தொடர் இருமல், சளி இதுவே, இந்நோயின் அறிகுறிகள்.

இன்று, உலக காசநோய் தினம் கடைப்பிடிக்கப்படுதை ஒட்டி, தாம்பரம் சானடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை டாக்டர் எஸ்.குமார், 58, உடன் பேசியதில் இருந்து:காசநோயால் அதிகம் பாதிக்கப்படுவது யார்?காசநோய் என்பது, 'மைக்ரோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' என்ற நுண்ணுயிரியால் பரவக்கூடிய நோயாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து, காற்றின் மூலம் பரவும் நுண்ணுயிரிகளால் மற்றவர்களுக்கு பரவுகிறது.குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அதேநேரத்தில், முறையாக, பி.சி.ஜி., தடுப்பூசி, போட்டால், குழந்தைகளை, இந்நோயின் வீரியமான தாக்கத்தில் இருந்து காப்பாற்றலாம். இந்நோய் நுரையீரலில் பெரும்பாலும் வந்தாலும், நகம், முடியை தவிர, மற்ற அனைத்து பாகங்களையும் பாதிக்கலாம்.மார்ச் 24ல் காசநோய் தினம் கடைப்பிடிக்க காரணம்?ஜெர்மனியின் பெர்லின் மருத்துவர், ராபர்ட் காக் என்பவர், 1872 மார்ச், 24ல், காசநோய் குறித்து, உலகிற்கு அறிவித்தார். அதற்கு முன், இந்நோய் இருந்தாலும், ராபர்ட் காக் அறிவித்த தேதியே, உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில், இந்நோய்க்கு மருத்துவம் இல்லை.

காசநோயில் எத்தனை வகைகள் உள்ளன?மூன்று பிரிவுகள் உள்ளன. இரண்டு வாரங்கள் தொடர்ந்து இருமல், சளி, காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல் ஆகிய அறிகுகள் காணப்படும். அந்த அறிகுறிகள் கொண்டவர்களுக்கு, ஆறு மாத சிகிச்சை அளிக்கப்படும். ஆறு மாதம் தொடர்ந்து, மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகிவிடும். இது, முதல்கட்ட மருந்துகளுக்கு கட்டுப்படும் நோய்.

அடுத்ததாக, சிகிச்சையை பாதியிலேயே விட்டவர்கள் மற்றும் முற்றிலும் குணமானவர்கள், பிற்காலத்தில் எதிர்ப்பு சக்தி குறைந்தால், நோய் வெளிப்படும். அவர்களது உடலில், காசநோய் நுண்ணுயிர் மீண்டும் வளரும். அதுபோன்றவர்களுக்கு மீண்டும் முதற்கட்ட, ஆறு மாத சிகிச்சையே போதுமானதாகும். இவர்களில், ஒரு பகுதியினருக்கு, முதற்கட்ட மருந்துகள் கட்டுப்படாத வீரியமான நோயான, எம்.டி.ஆர்., - டி.பி., வரலாம். அப்படி வந்தால், 9 - 11 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது.அடுத்ததாக, வீரியமான கிருமி எக்ஸ்.டி.ஆர்., - டி.பி., இருப்பவர்களுக்கு, ஊசிகள் இல்லாத, 18 - 20 மாதங்கள் வரை, சிகிச்சை அளிக்கப்படுகிறது.எந்த ஆண்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது?கடந்த, 1940களில், காசநோய்க்கு முதன் முதலில், 'ஸ்ட்ரெப்டோமைசின்' என்ற ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பி.ஏ.எஸ்., - ஐ.என்.எச்., என்ற மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, 1956 - 1959ல், சானடோரியம் மருத்துவமனையும், சென்னை சேத்துப்பட்டு காசநோய் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, ஒரு ஆராய்ச்சியை நடத்தின. காசநோயால் பாதிக்கப்பட்டோரை, இரண்டு குழுக்களாக பிரித்து, ஒரு குழுவினரை வீடுகளில் வைத்தும், மற்றொரு குழுவினரை மருத்துவமனைகளில் வைத்தும் சிகிச்சை அளித்தனர்.மூன்று ஆண்டுகள், அவர்களை கண்காணித்தனர். ஆய்வின் முடிவில், குணமடைதல், இறப்பு மற்றும் மற்றவர்களுக்கு பரப்பும் விகிதம் ஆகியவை, இரண்டு குழுவிலும் ஒன்றாகவே இருந்தன. இதை அடிப்படையாக வைத்து, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வீட்டிலிருந்தே சிகிச்சை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பு, உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின், உலக நாடுகளில், காசநோய் சானடோரியங்கள் மூடப்பட்டன. ஆனால், இந்தியாவில், இன்றும், காசநோய் சிகிச்சை மையங்கள் தொடர்கின்றன. இதைத்தொடர்ந்து, 'ஈத்தாம்பூட்டால், பைரசினமைடு, ரிப்பாமைசின்' போன்ற மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.இதன் பயனாக, காசநோய்க்கு, ஆறு மாதம் சிகிச்சை முறை கொண்டுவரப்பட்டது.

தற்போது, நான்கு மருந்துகளையும் ஒரே மாத்திரையில் (எப்.டி.சி.,) அடைத்து, நோயாளிகளின் எடைக்கு ஏற்ற வாறு, தினந்தோறும் வழங்கப்படுகிறது.சானடோரியம் காசநோய் மருத்துவமனை எப்போது துவங்கப்பட்டது ?டேவிட் சவரிமுத்து பிள்ளை என்ற இந்தியர், லண்டனில் படித்து கொண்டிருந்தார். அங்கிருந்து, 1928ல், இந்தியா வந்த அவர், தாம்பரத்தில், 12 படுக்கை வசதிகளுடன் கூடிய, 'காசநோய் சானடோரியம்' என்ற பெயரில், இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார்.கடந்த, 1935ல், அவர், இங்கிலாந்துக்கு திரும்பி சென்றுவிட்டார். தெற்காசியாவில் உள்ள பெரிய மருத்துவமனையில், இதுவும் ஒன்று. 1985ல், இது, சானடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சிகிச்சை முறைகள் என்னென்ன?இங்கு, காற்றோட்டமான சூழலில், 776 படுக்கை வசதிகள் கொண்ட, உள்நோயாளிகள் பிரிவு உள்ளது. இதை தவிர, தினமும் நுாற்றுக்கணக்கான வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இதற்கு முன், காசநோயை பரிசோதனை செய்தால், அதன் முடிவு வருவதற்கு தாமதம் ஆகும். ஆனால், தற்போது, அப்படி இல்லை. இரண்டு மணி நேரத்தில், மருத்துவ பரிசோதனை தெரிந்து கொள்ளும், 'ஜீன் எக்ஸ்பெட்' என்ற நவீன இயந்திரம் இங்கு உள்ளது. நவீன மருந்துகள் வந்துள்ளனவா?முதற்கட்ட சிகிச்சைக்கு ஐந்து விதமான மருந்துகள், வெகுநாட்களாக உள்ளன. புதிதாக, வீரியமான நோய்க்கு, 'பி.டி.கியூ., டிலமானிட்' போன்ற மருந்துகள், கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவை இரண்டும், இந்தியாவில் இலவசமாக வழங்கப்படுகின்றன.பொதுமக்களுக்கான அறிவுரை?

ஒவ்வொருவரும், இருமல் மற்றும் தும்பும் போது, கவனமாக, முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்கள், தொடர்ந்து அறிகுறிகள் இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். காசநோய் இருந்தால், மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். இடையில் நிறுத்தக்கூடாது. ஒருவருக்கு நோய் வந்தால், குடும்பத்தினர் அனைவரும், காசநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்நோயை கண்டு பயப்பட வேண்டாம்; ஒன்று சேர்ந்தால் விரட்டி விடலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X