இத்தாலியில் 5,500 பேர் பலியான பரிதாபம்; தடுப்பு நடவடிக்கைகளில் அரசு மும்முரம்

Added : மார் 24, 2020
Share
Advertisement
 இத்தாலியில் 5,500 பேர் பலியான பரிதாபம்; தடுப்பு நடவடிக்கைகளில் அரசு மும்முரம்

ரோம் : 'கொரோனா'வுக்கு அதிகம் பலியானோர் பட்டியலில் இத்தாலி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை 5,500 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை இத்தாலி அரசு தீவிரப் படுத்தி உள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. பலி எண்ணிக்கையில் கொரோனா உருவான சீனாவை மிஞ்சி இத்தாலி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இத்தாலியின் மிலன், ரோம் நகரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 651 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,500 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 59 ஆயிரத்து 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலி பிரதமர் கியுசிப்பு கான்ட் கூறியதாவது: நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; இது மிகவும் சவாலான நேரமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதே எங்கள் முதல் இலக்கு. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என தெரிகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொதுமக்கள் தொடர்பை கட்டுப்படுத்தும் வகையில் சமூக விலக்கல் நடவடிக்கையை மக்கள் தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அரசு விதித்துத்துள்ள கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களுக்கு முதல் அறிகுறியாக லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருக்கும். இதுபோன்ற பாதிப்பு இருப்பவர்களை எளிதில் குணப்படுத்தி விட முடியும். ஆனால் வயதானோர், ஏற்கனவே இருதயம் நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை இந்த வைரஸ் தாக்கினால் அவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகம் உள்ளது.

வைரஸ் அறிகுறி உள்ள 23 ஆயிரம் பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களது உடல் நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


பிரிட்டனில் அதிரடி நடவடிக்கை:

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. லண்டன் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் பொழுது போக்கு மையங்கள், ஷாப்பிங் மால், வர்த்தக நிறுவனங்கள் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய 80 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டாக்டர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிரிட்டனில் இதுவரை 233 பேர் பலியாகி உள்ளனர்; 5,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் கட்டுபாடுகளை மீறி தேவையின்றி ஊர் சுற்றுவோருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் கூறுகையில், ''கொரோனா விஷயத்தில் நாங்கள் எதையும் மறைக்க விரும்பவில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் இத்தாலியில் நிலவும் சூழலை விட இங்கு ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது'' என்றார்.


ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை:

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியதாவது: நாடு முழுவதும் 1,640 பேருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் தாக்கம் முழுமையாக நீங்க இன்னும் ஆறு மாதங்களாகும்.எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேணடும். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு கடைகளை மூடுவதால் எந்த பலனும் ஏற்படாது. இதற்கு நீண்ட கால தீர்வு அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X