தமிழ்நாடு

கைகழுவிய பிறகே வெளியில் செல்ல பயணிகளுக்கு அனுமதி: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் சுகாதார நடவடிக்கை தீவிரம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கொரோனா தாக்குதல் அச்சுறுத்தல் எதிரொலியாக, ஈரோடு பஸ் ஸ்டாண்டில், கை கழுவிய பிறகே, வெளியில் செல்ல பயணிகளுக்கு அனுமதி தரப்பட்டது.
தாய்லாந்தை சேர்ந்த நபர்களால், ஈரோட்டில் கொரோனா வைரஸ் தாக்குல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஈரோட்டில் சுற்றிய பகுதிகளை கண்டறிந்து, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை, ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின், தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. சேலம், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர் பகுதிகளில் இருந்து, ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்கள் வந்தன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், நுழைவாயிலில் பஸ்களை நிறுத்தி, பஸ்சில் வந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். கைகளை சோப் மற்றும் சானிடைசர் மூலம் கை கழுவிய பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் உள்புறம், வெளிப்புறம் கிருமி நாசினி தெளித்த பிறவே, பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் அனுமதிக்கப்பட்டன. பயணிகள் கைகழுவுவதை கண்காணிக்கும் பணியிலும், பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும், மாநகராட்சி பொறியாளர்கள், சுகாதார பணியாளர்கள் என, 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் பயணிகளுக்கு பரிசோதனை: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு, நேற்று முன்தினம் இரவு சீல் வைக்கப்பட்டது. ரயில்வே ஸ்டேஷன் முழுவதும், நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஈரோடு ஸ்டேஷனுக்கு அடுத்தடுத்து, மும்பை - கன்னியாகுமரி மும்பை எக்ஸ்பிரஸ், பாட்னா - எர்ணாகுளம் பாட்னா எக்ஸ்பிரஸ், லோகமான்ய திலக் - கோவை குர்லா எக்ஸ்பிரஸ், கொரக்பூர் - ஆலப்புழா ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்தன. இவற்றில் வந்த பயணிகளுக்கு, சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சலுடன் வந்தவர்களை, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுப்பி வைத்தனர்.

எல்லையில் பேரிகார்டு தடுப்பு: தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும், வரும், 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்ட எல்லையான, பவானி புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் காவிரி ஆற்றுப்பாலம் வழியாக, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் செல்லும் பாலத்தில், இருபுறமும் சென்டர் மீடியன் வைத்து, போலீசார் நேற்று தடுத்தனர். இதேபோல் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், பூ மார்க்கெட் வழியாக குமாரபாளையம் செல்லும் பாலத்தில் போரிகார்டு தடுப்பு வைக்கப்ட்டது.

பேரேஜில் கண்காணிப்பு: ஈரோடு - நாமக்கல் மாவட்ட எல்லையாக, வெண்டிப்பாளையம் பேரேஜ் உள்ளது. மொடக்குறிச்சி போலீசார் தடுப்பு அமைத்து, நேற்று முதல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். டூ வீலர்களை மட்டுமே, போலீசார் அனுமதித்தனர்.

மக்கள் நடமாட்டம் குறைந்தது: மக்கள் ஊரடங்கு முடிந்த பின், நேற்று அதிகாலை, 5:00 மணி முதல், கோபியில் இருந்து டவுன் மற்றும் மப்சல் பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனாலும், 85 பஸ்களில், 72 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகள் குறைவாகவே வந்தனர். இதனால் பஸ் ஸ்டாண்ட் வளாகம் நேற்றும் வெறிச்சோடியது. கோபியில் இருந்து பிற இடங்களுக்கு, 65 சதவீதம் பஸ்கள் இயங்கின. சத்தி, மொடச்சூர், அத்தாணி, டி.என்.,பாளையம், ஈரோடு சாலைகளில், குறைந்த எண்ணிக்கையில் அதுவும் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. காய்கறி மார்க்கெட், மளிகை கடைகள் திறக்கப்ட்டன. அவற்றில் மட்டுமே கூட்டம் காணப்பட்டது.

உழவர் சந்தைகள் மூடல்: ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு பெரியார் நகர், சம்பத் நகர், கோபி, சத்தி, பெருந்துறையில் உழவர் சந்தைகள் உள்ளன. மக்கள் ஊரடங்கால், 22ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று உழவர் சந்தை திறக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்கள் ஊரடங்கு, அதிகாலை, 5:00 மணி வரை நீடித்ததால், இரண்டாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டது. உழவர் சந்தையை திறப்பது குறித்து, கலெக்டர் நாளை (இன்று) அறிவிப்பார் என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X