தமிழ்நாடு

இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள்: அரசு அதிகாரிகள் அதிர்ச்சி

Added : மார் 24, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில் நேற்று காலை முதல், கொரோனா வைரஸ் பரவுவதை பற்றி கவலை இல்லாமல், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். வழக்கம் போல், கடைகளும் திறக்கப்பட்டதால், அரசு துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நேற்று முன்தினம் காலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்று காலை, 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் கரூர் நகரில் பொதுமக்கள், நடை பயிற்சி, மார்கெட்டுக்கு செல்லுதல் உள்ளிட்ட, வழக்கமான பணிகளுக்கு திரும்பினர். கடைகளும் படிப்படியாக திறக்கப்பட்டன. காலை, 9:00 மணியளவில் பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவுவதை பற்றி கவலைப்படாமல், வழக்கம் போல் கரூர் நகரில் கூட்டம், கூட்டமாக கிளம்பி சென்றனர். கரூர் நகரில் நிலவிய பரபரப்பான சூழ்நிலையை பொறுத்து, நகராட்சி மற்றும் அரசு துறை அதிகாரிகளே ஆடிப் போயினர். இதனால், நகராட்சி சார்பில் ஆட்டோ மூலம், அத்தியவாசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர, மற்ற கடைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, கரூர் நகரில், 75 நகை கடைகள் மற்றும் பெரிய அளவிலான ஜவுளிக் கடைகள் மூடப்பட்டது. அத்தியவாசிய தேவை என்பதால், டீக்கடை, ஓட்டல்கள் தொடர்ந்து செயல்பட்டன. மதியம், 2:00 மணி முதல் மக்கள் நடமாட்டம், மெல்ல மெல்ல குறைய துவங்கியது.

ஈரோடுக்கு பஸ்கள் இயக்கம்: கொரோனா பாதித்த, 75 மாவட்டங்களில் ஈரோடு இடம் பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தின், எல்லைகள் அடைக்கப்பட்ட நிலையில், கரூரில் இருந்து ஈரோடுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. ஈரோட்டில் இருந்தும், கரூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், பயணிகள் குறைவாகவே இருந்தனர். கரூர் அரசு போக்குவரத்து மண்டலம் சார்பில், 262 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று மதிய நிலவரப்படி, 161 பஸ்கள் இயக்கப்பட்டன.

ரயில்வே ஸ்டேஷன் 'வெறிச்': நாடு முழுவதும் நேற்று முதல் வரும், 31 வரை ரயில்வே சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கரூர் ரயில்வே ஸ்டேஷனில், நுழைவு வாயிலில், தடுப்புகளை ஏற்படுத்தி, பாதுகாப்புக்காக போலீசார் நின்றனர். பிளாட்பாரத்தில் செயல்பட்ட, கேன்டீன்களும் மூடப்பட்டன.

நூலகங்கள் மூடல்: கரூர் மாவட்டத்தில் மாவட்ட, பகுதி நேரம், மற்றும் கிளை என, 103 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பீதி காரணமாக, நூலகங்கள் நேற்று மூடப்பட்டன. வாசகர்களுக்கு அனுமதி இல்லை. சில நூலகங்களில் பராமரிப்பு பணி நடந்தது.

பூக்கள் விலை சரிவு: கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, பூ மார்கெட் செயல்படுகிறது. மாவட்டத்தின், பிற பகுதிகளான நடையனூர், மாயனூர், தளவாப்பாளையம், செட்டிபாளையம், வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பூக்கள் மார்கெட்டுக்கு வருகின்றன. கடந்த தை மாதம், 2,000 ரூபாய் வரை, ஒரு கிலோ மல்லிகை நேற்று, 150 ரூபாய்க்கு விற்றது. அதேபோல், மற்ற பூக்களின் விலையும் சரிந்து காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X