2 நாளில், 3.70 லட்சம் பேர் சென்னைவாசிகள் வெளியூர் பயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 நாளில், 3.70 லட்சம் பேர் சென்னைவாசிகள் வெளியூர் பயணம்

Added : மார் 24, 2020
Share
2 நாளில், 3.70 லட்சம் பேர் சென்னைவாசிகள் வெளியூர் பயணம்

சென்னை : சென்னையில் இருந்து, இரண்டு நாட்களில் மட்டும், 3.70 லட்சம் பேர், தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.தமிழகத்தில், கொரோனா தொற்றின் தாக்கத்தை தடுக்கும் வகையில், நேற்று மாலை, 6:00 மணி முதல், 144 தடையுத்தரவு
அமலுக்கு வந்துள்ளது.


திணறல்இந்நிலையில், நேற்று முன்தினம், மக்கள் கூடுவதை படிப்படியாக குறைக்கும் நோக்கில், நேற்று முன்தினம், மெட்ரோ ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன; குறைந்த அளவில், மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்ட, அரசு பஸ்களில் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் போக்குவரத்து மட்டுமின்றி, தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும், பல மடங்கு அதிகரித்தது.
இதனால், ஏராளமானோர் கூடினர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், அரசு திணறியது.மேலும், சென்னையில் போதுமான விரைவு பஸ்கள் இல்லாததால், சென்னை மாநகர பஸ்களை இயக்கவும், தனியார் பஸ்களை இயக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, கும்பகோணம், விழுப்புரம் உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் இருந்து, 2,450 பஸ்களும், மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், 400 பஸ்களும் என, 2,850 பஸ்கள் இயக்கப்பட்டன.


அரசு பஸ்இவற்றில், 1.90 லட்சம் பேர் பயணித்தனர். தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட, 430 அரசு பஸ்களில், 29 ஆயிரம் பேர் பயணித்தனர்.இதுமட்டுமின்றி, தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள், வேன்கள், கார்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களிலும், 2 லட்சம் பேர் பயணித்தனர்.
அதேபோல, நேற்றும் மதியம், 12:00 மணி வரை இயக்கப்பட்ட, அரசு பஸ்களில், 1 லட்சம் பேரும், தனியார் வாகனங்களில், 50 ஆயிரம் பேருக்கு மேலும் பயணித்தனர். இந்த வகையில், இரண்டு நாட்களில், சென்னையில் இருந்து மட்டும், 3.70 லட்சம் பேர், தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
இதேபோல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர், சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.


சுங்கச்சாவடிகளால் நெரிசல்!ஒரே நேரத்தில், லட்சக்கணக்கான வாகனங்கள் சென்றதாலும், பெரும்பாலான வாகனங்களில், 'பாஸ்டேக்' இல்லாததாலும், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. மேலும், புதுச்சேரி எல்லைகள், 'சீல்' வைக்கப்பட்டதால், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல வேண்டிய வாகனங்களும், 45வது தேசிய நெடுஞ்சாலையில் சென்றதால், வாகனங்கள், எறும்பு போல் வரிசை கட்டி ஊர்ந்தன. இதனால், ஆங்காங்கே சிறு அளவில் விபத்துக்களும் நிகழ்ந்தன.
இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணியில் இருந்து, தடையுத்தரவு அமலுக்கு வரும் நிலையில், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் வரிசையில் நின்றன. இந்நிலையில், நேற்று ஒரு நாள் மட்டுமாவது, சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்கலாமே என, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், நேற்று மதியத்துக்குப் பின், சுங்கக்கட்டணம் வசூலிக்காமல், வாகனங்கள் அனுப்பப்பட்டன. இதனால், வாகனங்கள் நெரிசல் இல்லாமல் சென்றன. அதேநேரம், மற்ற சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.மாநில எல்லைகள் மூடப்பட்டதாலும், கொரோனாவின் தாக்கம், கேரளாவில் அதிகம் இருப்பதாலும், அங்குள்ள தமிழர்களின் வாகனங்கள், தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X