'வதந்தியை தடுக்க வேண்டும்': பிரதமர் மோடி வேண்டுகோள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுடில்லி :'கொரோனா குறித்து வெளியாகும் வதந்திகளை தடுத்து, அந்நோயை எதிர்க்கும் உறுதியை மக்களிடம் விதைக்க வேண்டும்' என, பத்திரிகையாளர்களை, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.பிரதமர் மோடி, நாடு முழுவதும், 11 மொழிகளில் வெளிவரும், தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகைகளைச் சேர்ந்த, 20க்கு மேற்பட்ட, மூத்த பத்திரிகையாளர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினார். அதன் விபரம்:பத்திரிகைகள், தேசிய, பிராந்திய தகவல்களை தொடர்ந்து வழங்கி, அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்க வேண்டும். தேச பாதுகாப்புக்கு, சமூக ஒத்துழைப்பு இன்றியமையாதது. கொரோனோவை தடுக்க, சமூகத்தில் இருந்து விலகி, தனியே இருப்பது அவசியம்.மக்களிடம், இது பற்றிய விழிப்புணர்வை, பத்திரிகைகள் ஏற்படுத்த வேண்டும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க, மாநிலங்கள் எடுத்துள்ள முடிவை, வாசகர்களிடம் தெரிவிக்க வேண்டும். உலக நாடுகளில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், அது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிடுவது அவசியம். மக்களிடம், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்ட உணர்வை கொழுந்துவிட்டு எரியச் செய்வதில், பத்திரிகைகள் மகத்தான பங்களிப்பை வழங்க வேண்டும்.அதேசமயம், மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தி, எதிர்மறை எண்ணங்களை விதைத்து, வதந்தி பரப்புவோரின் சவாலையும் முறியடிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கி, மக்கள் மனதில் உறுதியை ஏற்படுத்த வேண்டும்.கிராமம், நகரம் என, நாட்டின் மூலை முடுக்குகளில் தகவல்களை கொண்டு சேர்க்கும் சிறப்பான பணியை, பத்திரிகைகள் மேற்கொண்டு வருகின்றன. அதனால், அவற்றால், வதந்திகளுக்கு எதிரான சவாலை முறியடித்து, சரியான தகவலை குக்கிராமம் வரை கொண்டு சேர்க்க முடிகிறது.கொரோனா வைரஸ் சோதனை மையங்களையும், அவற்றின் அமைவிடங்களையும் தெரிவிப்பதுடன், யாருக்கு பரிசோதனை தேவை, அதற்கு யாரை அணுக வேண்டும், எவ்வாறு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்களை, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது முக்கியம்.இந்த தகவல்களை, பத்திரிகைகளிலும், அவற்றின் வலைதள பத்திரிகைகளிலும் வெளியிட வேண்டும். ஊரடங்கு உத்தரவின்போது, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களையும், தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கொரோனா பரவலை தடுக்க, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த பத்திரிகையாளர்களுக்கு, பிரதமர் மோடி இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X